
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மனைவி, மகன்களை விடுவித்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், 6 மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006 முதல் 2010-ஆம் ஆண்டு வரை வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்த போது இரண்டு கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஐ.பெரியசாமி, அவரது மனைவி பி.சுசீலா, தற்போதைய பழனி திமுக சட்டமன்ற உறுப்பினரும் மகனுமான பி.செந்தில்குமார், மற்றொரு மகன் பி.பிரபு ஆகியோர் மீது திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறை கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு வழக்குப் பதிவு செய்தது.