
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டின் மீதிருந்த தடையை நீக்கச் சொல்லி 2017 நடத்தப்பட்ட போராட்டங்களைத் தொடர்ந்து அந்த தடை நீக்கப்பட்டு, பல்வேறு மாவட்டங்களில் அதனைத் தொடர்ந்த வருடங்களில் ஐல்லிக்கட்டு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கோவையில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு போட்டி நேற்று ( 27.04.2025 ) நடைபெற்றது.
தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை, கோவை மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த ஜல்லிக்கட்டு போட்டி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று மாலை தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பு அமைச்சராக துவக்கி வைத்த இறுதி நிகழ்வாகும்.
கோவை செட்டிபாளையம் அருகில் உள்ள L & T பைபாஸ் சாலை அருகில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் முன்பாக போட்டியாளர்கள் அனைவரும் உறுதிமொழி எடுக்க, ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கியது. 500 மாடுபிடி வீரர்களும் 800 க்கும் மேற்பட்ட காளைகளும் களமிறங்க காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை போட்டி நடைபெற்றது. முதல் காளையாக கோவை வரதராஜ பெருமாள் கோவில் காளை களம் இறங்கியது.
மாடுபிடி வீரர்களுக்கு அண்டா, நாற்காலி, மிக்ஸி, கிரைண்டர், மோட்டார், வேஷ்டி சேலை போன்றவை பரிசுகளாக கொடுக்கப்பட்டன. மாடுபிடி வீரர்கள் அனைவரும் பரிசு பொருட்களை அள்ளிச்சென்றனர். எவரிடமும் பிடிபடாத மாடுகளுக்கு பரிசாக தங்கக்காசு வழங்கப்பட்டது. கோவை அல்லாது சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, மதுரை, தேனி, புதுக்கோட்டை போன்ற பல ஊர்களில் இருந்து மாடுகள் கொண்டுவரப்பட்டன.
மாடுபிடி வீரர்கள் சிலர் காயப்பட்ட போதிலும் மருத்துவ உதவி பெற்ற பிறகு மீண்டும் வந்து போட்டியில் பங்கேற்கத் தொடங்கினர்.

மாட்டின் உரிமையாளர் ஒருவர் இந்திய நாட்டின் தேசிய கொடி ஏந்தி வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். எவர் கையிலும் சிக்காமல் ஆட்டம் காட்டிக்கொண்டிருந்த ஒரு மாட்டை அதன் பெண் உரிமையாளர் வந்து கயிறு போட்டு அழைத்துச் சென்றார். ஒரு மாடு களத்திற்கு அருகில் போடப்பட்டிருந்த தடுப்பு கம்பியினை உடைத்து வெளியே ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த மாடு தன்னை நோக்கி வருவதைக் கண்டதும் ஒரு பெண் தன்னுடைய குழந்தையை உடனடியாக அவ்விடத்தில் இருந்து தூக்கி காப்பாற்றினார்.
களத்தைத் தாண்டி திரும்ப சென்ற மாடுகள் மீண்டும் உள்ளே வந்த போது களத்திற்குள் டாடா ஏசில் இருந்த காவலர்களை அதனை அப்புறப்படுத்தினர்.
மேலும் மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு இடையில் சிறிய வாக்குவாதம் ஏற்பட்ட போது காவல் துறையினர் இடையில் போட்டியை நிறுத்தி அவர்களுக்கு எச்சரிக்கைக் கொடுத்து போட்டியைத் தொடரச் செய்தனர். வாடிவாசலிலிருந்து வெளியே வந்த மாடு ஒன்று மீண்டும் மீண்டும் வாடிவாசலினுள்ளேயே சென்றது களத்தில் சிரிப்பலைகளை உண்டாக்கியது. காயப்பட்ட மாடுபிடி வீரர்களுக்கு முதலுதவி அளிக்க மருத்துவ முகாம், காயப்பட்ட மாடுகளுக்கு உதவி செய்ய கால்நடை பராமரிப்புத் துறையினர், ஆம்புலன்ஸ் , தீயணைப்பு வாகனம் என அனைத்தும் தயார் நிலையில் இருந்தது.
மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெற்ற இப்போட்டியிலிருந்து சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதிச்சுற்றில் போட்டியிட்டனர்.

இறுதிச்சுற்றின் முடிவாக மாடுபிடி வீரர்களில் மூன்றாம் இடத்தை 15 மாடுகள் பிடித்த வளையான்குளத்தைச் சேர்ந்த பாலா என்பவர் பிடித்தார். அவருக்கு பரிசாக ஓர் மின்சார வாகனம் வழங்கப்பட்டது.
18 மாடுகளைப் பிடித்த மதுரையைச் சேர்ந்த பவித்ரன் எனும் மணிக்கு இரண்டாம் பரிசாக ஓர் இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. மொத்தமாக 21 மாடுகளைப் பிடித்து அசத்திய சிவகங்கையைச் சேர்ந்த அபிசித்தருக்கு முதல் பரிசாக ஓர் நான்கு சக்கர வாகனம் வழங்கப்பட்டது.
சிறந்த மாடுகளின் வரிசையில் மூன்றாம் பரிசு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞரின் மாடு, இரண்டாம் பரிசு புதுக்கோட்டை கண்ணனின் மாடு மற்றும் முதல் பரிசு விருதுநகரை சேர்ந்த கருப்பையா கோனாரின் மாட்டிற்கு வழங்கப்பட்டது. மாடுபிடி வீரர்களுக்கு கொடுக்கப்பட்டது போன்றே சிறந்த மாடுகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.






இப்போட்டியில் சிறந்த மாடுபிடி வீரருக்கான பரிசாக தமிழக முதலமைச்சர் சார்பில் நான்கு சக்கர வாகனம் வழங்கப்பட்டது மற்றும் துணை முதலமைச்சர் சார்பாக சிறந்த பிடிபடாத மாட்டிற்கு நான்கு சக்கர வாகனம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சுட்டெரிக்கும் வெயிலிலும் இந்த மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியினை காண்பதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து போட்டியினை உற்சாகத்துடன் கண்டுகளித்தனர். மேலும் இந்நிகழ்விற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்வார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் அங்கு வராதது குறிப்பிடத்தக்கது.