
மும்பையில் ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு இது தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரம் செய்தபோதிலும் பொதுமக்கள் இது போன்ற மோசடிக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக வயதானவர்கள் மற்றும் பெண்கள் இந்த மோசடியில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மும்பையில் 71 வயது மூதாட்டி ஒருவர் இணைய தள குற்றவாளிடம் ரூ.4.82 கோடியை இழந்துள்ளார். அந்த மூதாட்டிக்கு கடந்த டிசம்பர் மாதம் தெரியாத நம்பரில் இருந்து ரீசார்ஜ் தொடர்பாக ஒரு அழைப்பு வந்தது. அடுத்த இரண்டு நாள் கழித்து மேலும் ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தன்னை மொபைல் கம்பெனி வாடிக்கை சேவை பிரதிநிதி என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். அந்த நபர் மூதாட்டியிடம் 9வது நம்பரை அழுத்தும்படி கேட்டுக்கொண்டார்.
உடனே போன் அழைப்பு வேறு ஒரு நம்பரோடு இணைக்கப்பட்டது. அதில் பேசிய நபர் தன்னை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய அதிகாரி என்றும், உங்களது போன் நம்பர் சட்டவிரோதத்திற்கு பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும், இதில் ரூ.6.8 கோடி அளவுக்கு மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அதோடு உங்களது வங்கிக்கணக்கு விபரங்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் மூதாட்டி வங்கிக்கணக்கு விபரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து மற்றொருவர் போன் செய்து தன்னை சுங்க அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டார்.
ஆன்லைன் கோர்ட்டில் விசாரணை?
அந்த நபர் உங்கள் மீதான வழக்கு ஆன்லைன் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், வீடியோ காலில் வரவேண்டும் என்றும், வெள்ளை கலர் ஆடை அணிந்து கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டார். மூதாட்டியும் பயத்தில் வெள்ளை ஆடை அணிந்து கொண்டார். போனில் பேசிய நபர் வீடியோ காலில் வந்தார். வீடியோ காலில் கோர்ட் அறை போன்று வடிவமைக்கப்பட்டு இருந்தது. அங்கு சிலர் வழக்கறிஞர்கள் போன்று இருந்தனர். அதோடு போலி நீதிபதி ஒருவரும் அமர்ந்திருந்தார். விசாரணையின் போது மூதாட்டியை போலி நீதிபதி குற்றவாளியாக அறிவித்தார்.
பின்னர் அதே நபர் போன் செய்து, இவ்வழக்கில் இருந்து விடுவிக்க சில ஆலோசனைகளை தெரிவித்தார். அவர்கள் சொன்னபடி மூதாட்டி தனது வங்கிக்கணக்கில் இருந்தும், வைப்பு தொகையாக இருந்த பணத்தையும் எடுத்து அவர்கள் சொன்ன வங்கிக்கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்தார். மொத்தம் ரூ.4.82 கோடி அளவுக்கு டிரான்ஸ்பர் செய்தார். அப்படி இருந்தும் தொடர்ந்து மோசடி பேர்வழிகள் பணம் கேட்டுக்கொண்டே இருந்தனர். அதன் பிறகுதான் மீடியாக்களில் ஆன்லைன் மோசடி தொடர்பாக விளம்பரம் வருவது மூதாட்டிக்கு நினைவுக்கு வந்தது. உடனே சைபர் பிரிவு உதவி எண்ணான 1930க்கு போன் செய்து தகவல் கொடுத்தார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

ஏற்கனவே மும்பை தெற்கு பிராந்திய சைபர் பிரிவு போலீஸார் ரூ.20.26 கோடி மோசடி தொடர்பாக விசாரித்து வந்தனர். இதில் மோசடி செய்யப்பட்ட பணம் டிரான்ஸ்பர் செய்யப்பட்ட நபர்கள் 8 பேரை கைது செய்திருந்தனர். அவர்களில் பாபி தாஸ் மற்றும் செளரிஷ் ஆகியோரும் அடங்கும். இவர்களது வங்கிக்கணக்கிற்கு மூதாட்டி அனுப்பிய 30 லட்சம் மற்றும் 25 லட்சம் டிரான்ஸ்பர் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர்கள் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதே போன்று மும்பை அந்தேரியை சேர்ந்த அஜய் என்பவர் டெல்லியை சேர்ந்த வழக்கறிஞரிடம் ரூ.1 கோடியை பறிகொடுத்துள்ளார். ரூபாய் 10 கோடி கடன் வாங்கித்தருவதாக கூறி டெல்லியை சேர்ந்த அமீர் உசேன் என்பவரும், அவரது கூட்டாளிகள் அனுஜ் ராவத் மற்றும் லால் கான் ஆகியோர் அஜயிடம் கமிஷனாக 10 சதவீத தொகையை பெற்றனர். மொத்தம் 69 தவணைகளில் ரூ.1.14 கோடியை அஜய் அனுப்பி வைத்தார். ஆனால் அதன் பிறகு மூவரும் தொடர்பை துண்டித்துக்கொண்டனர். இதையடுத்து அஜய் கொடுத்த புகாரின் பேரில் மூன்று பேரும் மோசடி குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
ஆன்லைன் மோசடிகள் பரந்து விரிந்து கொண்டிருக்கிறது. மக்களாகிய நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.