
சரியான நேரத்துக்குச் சாப்பிடாமல் ஒத்திவைப்பது, தூங்காமல் இருப்பது பற்றிப் பார்த்திருக்கிறோம். சிறுநீர் கழித்தலை ஒத்திப்போடுகிறவர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
இன்றைக்கு நகர்ப்புறங்களில் பொது கழிப்பறைகளே இல்லை. அப்படியே இருந்தாலும் அதன் சுகாதார சீர்கேடு காரணமாக உள்ளே நுழையக் கூட முடியாத நிலை, வேலைப்பளு உள்ளிட்ட காரணங்களால் பலரும் சிறுநீர் கழிப்பதை முடிந்தவரைத் தள்ளிப்போடுகின்றனர்.
எல்லா வேலையும் முடிந்தபிறகு செய்ய வேண்டிய கடைசி வேலையாகத்தான் அது இருக்கிறது. உண்மையில், இது மிகவும் ஆபத்தான பழக்கம் என்கிறார் சிறுநீரக நிபுணர் பாரி.
அடிவயிற்றில் சிறுநீர்ப்பை உள்ளது. இது ரப்பர் பந்துபோல சுருங்கி விரியும் தன்மை கொண்டது. சிறுநீரகத்திலிருந்து `யூரேட்டர்’ எனும் மெல்லிய குழாய் (Ureter) வழியாகச் சிறுநீர், சிறுநீர்ப் பையை அடைகிறது.
`யூரித்ரா’ (Urethra) எனும் குழாய் வழியாகச் சிறுநீர் வெளியேறும். சிறுநீர் கழித்தவுடன், சிறுநீர்ப்பை சுருங்கி மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிவிடும்.
பொதுவாக ஐந்து முதல் பத்து வயதுள்ள சிறுவர்களால் 100-150 மி.லி சிறுநீரைச் சேமிக்க முடியும். உடல் வளர்ச்சி அதிகமாக, சிறுநீர்ப்பையில் சிறுநீரின் கொள்ளளவும் அதிகரிக்கும்.
22-25 வயதில் சிறுநீர்ப்பையின் வளர்ச்சி நின்றுவிடும். இந்த வயதில் சராசரியாக 350-400 மி.லி சிறுநீரைச் சிறுநீர்ப்பை தேக்கிவைக்கும்.
சிறுநீர் கழிக்காமல் அடக்கிவைத்தால், சிறுநீர்ப்பை விரிவடைந்து கொண்டே செல்லும். பல மணி நேரங்கள் அடக்கி வைத்து சிறுநீர் கழிப்பவர்களுக்குச் சிறுநீர் முழுவதுமாக வெளியேறாது. விட்டு விட்டுத்தான் வெளியேறும்.
இதே பழக்கம் தொடர்ந்தால், சிறுநீர்ப் பையின் சுருங்கி விரியும் தன்மை குறைந்துவிடக்கூடும். சிறுநீரை அடக்குவதால், சிறுநீரில் உள்ள உப்பு படிமம் சிறு சிறு படிவங்களாகச் சேர்ந்து கற்களை உருவாக்கும். பிறகு, இந்தக் கற்கள் சிறுநீர்ப் பாதையை அடைத்துக் கொள்ளும்.

பொதுவாக, வயதான ஆண்கள், சிறுநீரை அடக்குவர். இதனால், புராஸ்டேட் சுரப்பியில் தொற்று காரணமாக வீக்கம் (Prostatitis) ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த வீக்கத்தால் இவர்களுக்குச் சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றினாலும், முழுதாக சிறுநீர் வெளியேறாது.
10 நிமிடங்களுக்கு ஒருமுறை சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றும். அரிதாக, இந்த வீக்கம் மலக்குடலையும் பாதிக்க வாய்ப்புள்ளது.
சிறுநீரை அடக்குவதில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள்தான் அதிகம் பேர் உள்ளனர். பயணங்களின்போது, பெண்கள் சிறுநீரை வெளியேற்றக் கழிப்பறைகள் இல்லாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதனால் பெண்களுக்குச் சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படுகிறது.

கர்ப்பிணிகள் சிறுநீரை அடக்குவதால், கருவின் தலை பகுதி சிறுநீர்ப்பையை அழுத்த வாய்ப்புள்ளது. இதனால் வயிற்று வலி, சிறுநீர் போகிற இடங்களில் வலி எனத் தேவையில்லாத பிரச்னைகள் வரக்கூடும்.
சிறுநீர் வருமோ என்று குறைவாக நீர் அருந்தும்போது, நீர் வறட்சி (Dehydration), சோர்வு, தலைவலி, சருமப் பிரச்னைகள், உடல் உஷ்ணம் ஆகிய பிரச்னைகள் ஏற்படும்.
இயற்கைக் கழிவுகளை அடக்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டும். சிறுநீரோ, மலமோ கழிக்க வேண்டும் என்ற உணர்வு வந்த உடனே, கழித்துவிட வேண்டியது அவசியம்.
இயற்கையைத் தடுத்து நிறுத்துவது உடலுக்கு நீங்கள் செய்யும் தீங்கு.

எந்த முக்கிய இடங்களிலும் ‘எக்ஸ்கியூஸ்’ கேட்கலாம் என்பதை மனதில் நிறுத்துங்கள். வெளியிடங்களுக்குச் செல்லப் போகிறோம் என்றால், சிறுநீர் வருமோ எனத் தண்ணீர் குடிக்காமல் இருக்க வேண்டாம். ஒருநாளைக்கு 2-3 லிட்டர் தண்ணீரைக் குடிப்பது அவசியம்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs