
நமக்கு பெரிதாக தொடர்பில் இல்லாத, கொரியா நாட்டின் கலாசாரத்தை, இந்திய இளைய தலைமுறையினர் பெரிதும் விரும்புவது ஏன்? திரைப்படங்கள் தொடங்கி உணவு, பியூட்டி கேர் என பல வகைகளில் கொரியன் கலாசாரம் இந்திய இளைய தலைமுறையினர்களால் பின்பற்றப்படுகிறது.
கொரியன் அழகு சாதன பொருட்கள், உணவுப் பொருள்கள், ஆபரணங்கள், ஆடைகள் ஆகியவற்றை இந்திய மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனை சந்தைப்படுத்த, விளம்பரப்படுத்த பல ஆன்லைன் வலைத்தளங்களும், கடைகளும் இந்தியாவில் பிரபலமடைந்து வருகிறது.
இந்த அளவு கொரியன் கலாசாரங்கள் இந்தியாவில் பிரபலம் அடைய திரைப்படங்களும், பாடல்களும் தான் முக்கிய காரணமாக உள்ளதா?… இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
இந்தியா தென் கொரிய உறவு!
1991 ஆம் ஆண்டு பொருளாதார சீர்திருத்தங்களுக்கு பிறகு தென்கொரியா உடனான இந்தியாவின் அரசியல் மற்றும் பொருளாதார உறவுகள் குறிப்பிட்ட அளவு முன்னேற்றத்தை கண்டன. இந்தியா – கொரியா உடனான உறவு அரசாங்கங்களால் மட்டுமில்லாமல் மக்களிடனும் அதிகரித்து வருகிறது. அதாவது இந்திய மக்கள் கொரியா கலாசாரத்தை விரும்புகின்றனர்.
கொரியன் திரைப்படங்கள், நாடகங்கள், ஏராளமான கொரியன் அழகு சாதன பொருள்கள், உணவுப் பொருள்கள் என அனைத்தும் இந்திய மக்களிடம் பிரபலமடைந்து வருகிறது.
இந்த மிகப்பெரிய கலாசார பரவலின் தொடக்கப் புள்ளியாக ஒரு பாப் பாடல் இருந்தது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? 2012 ஆண்டு வெளிவந்த “கங்கம் ஸ்டைல் (gangnam style)” என்ற கொரியன் பாப் பாடல் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தது. இந்த இசை இந்தியா உட்பட அனைத்து நாட்டு மக்களால் கவரப்பட்டது.
இந்த இசையால் தொடங்கிய கொரியன் கலாசாரம் இன்று திரைப்படமாக, உணவாக, பியூட்டி கேர்ராக இந்திய மக்களிடம் பிரபலமடைந்துள்ளது.
அதிலும் குறிப்பாக 2019 ஆம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று விளைவாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, இதுபோன்ற கொரியன் சீரிஸ்களை பார்ப்பவர்களை அதிகப்படுத்தியது.
வீட்டிலேயே முடங்கி இருந்தவர்கள் நெட்ஃபிக்ஸ்,டெலிகிராம், ஹாட்ஸ்டார் ஆன்லைன் தளங்களில் இருக்கும் கொரியன் டிராமாக்களை ரசித்தனர். அதன் பின்னர் ஏராளமான கொரியன் திரைப்படங்கள், வெப் சீரீஸ்களை மக்கள் பார்க்க தொடங்கினர்.
இது போன்ற டிராமாக்களை இந்திய மக்கள் அதிகம் விரும்பி பார்க்கின்றனர் என்பதை நெட்ஃபிக்ஸ் செயலிyum உறுதிப்படுத்தியது.
அதாவது 2020 ஆம் ஆண்டுக்கான பார்வையாளர்களின் கணக்கெடுப்பை வெளியிட்ட நெட்ஃபிக்ஸ், 2019 ஆம் ஆண்டை விட 2020 ஆம் ஆண்டில் 370% பேர் கொரியன் தொடர்களை அதிகம் பார்த்ததாக தெரிவித்தது.

மேலும் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நெட்ஃபிக்ஸ் செயலி தென்கொரியாவில் 250 கோடி டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், நெட்ஃபிக்ஸ் பார்வையாளர்களில் ஐந்தில் மூன்று பங்கு மக்கள், இந்த கொரியன் தொடர்களை பார்ப்பதாகவும் டைம்ஸ் செய்தித்தாளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களின் ரசனைக்கு ஏற்ப, மக்கள் பார்த்து ரசிக்கும் வண்ணம் செயலிகளில் கொரியன் தொடர்கள் பதிவேற்றப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் கொரியாவின் கலாசாரம், விளையாட்டு மற்றும் சுற்றுலா அமைச்சகம், கொரிய தொடர்கள், திரைப்படங்கள் தயாரிப்புக்காக 454 மில்லியன் வொன் (கொரிய பணம்) நிதியை ஒதுக்குவதாக கொரியா ஜூங் அங் டெய்லி எனும் செய்தித்தாளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல, வரும் காலங்களில் சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதற்கு அமைச்சகம் முயற்சிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரியன் தொடர்கள்
கொரியன் தொடர்களில் அவர்கள் காண்பிக்கும் அழகான காதல் கதைகள், அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் சவால்கள், உறவில் இருக்கும் முக்கியத்துவம், வாழ்க்கை முறை ஆகியவை மக்களால் ரசிக்கும் படியாக உள்ளது.
2019 ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் (Forbes) வெளியிட்ட அறிக்கையின்படி, கொரியன் டிராமாக்களுக்கு கதை எழுதுபவர்களில் 90% பேர் பெண்களாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் உருவாக்கும் கதாபாத்திரங்கள் பெண்களை அதிகம் கவருவதாக உள்ளது.
பாப் பாடல்கள்
பாடல்கள் மூலம்தான் கொரியன் டிராமாக்கள் அதிகம் மக்களால் ரசிக்கப்பட்டுள்ளன. பொதுவாக மக்கள் பாடல் கேட்க பயன்படுத்தப்படும் செயலிகள் மூலமும் கொரியன் பாப் பாடல்கள் மக்களால் ரசிக்கப்படுகிறது. Spotify, கானா போன்ற இசை செயலிகளில் கொரியன் பாப் பாடல்கள் இடம் பெற்று இருப்பதால் மக்கள் எளிதில் அதனை கேட்க முடிகிறது.

பிடிஎஸ், பிளாக் பிங்க் போன்ற இசை குழுக்களின் பாடல்கள் மில்லியன் பார்வையாளர்களை பெற்று ட்ரெண்டிங்கில் உள்ளது. இதன் புதுமையான இசை, நடனம் இவற்றைத் தாண்டி, அழகாக தங்களை முன்னுறுத்திக் கொள்ளும் இசை கலைஞர்களையும் மக்கள் ரசிக்கின்றனர்.
பாடல்கள், இசையைத் தாண்டி அவர்கள் மீது தீரா காதல் கொள்கின்றனர் ரசிகர்கள்.
இந்த இசை கலைஞர்களை இணையதளத்தில் ரசிப்பதோடு இல்லாமல் நேரில் சென்று பார்க்க வேண்டும் என்றும் எண்ணுகின்றனர். கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் கிராமப் பகுதியில் இருந்து 13 வயது சிறுமிகள், தென் கொரியாவிற்கு இந்த பாப் கலைஞர்களை பார்க்க சென்ற சம்பவங்கள் எல்லாம் நடைபெற்றது. கொரியன் பாப் பாடல்ககளை ரசிகர்கள் விரும்புவது, இசைக் கலைஞர்களின் தோற்றத்தையும் உள்ளடக்கியுள்ளது.
ஃபர்ஸ்ட்போஸ்ட் செய்தியின் படி, இந்தியாவில் கொரியன் பாப் இசையின் வளர்ச்சி முதன்முதலாக வட கிழக்கு மாநிலங்களில் தான் பரவத்தொடங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2000 ஆம் ஆண்டுகளில் ரெவெல்யூஷன் பீப்பிள்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு மணிப்பூரில் இந்தி மொழிப்படங்களை தடை செய்தது. அதன் பின்னர் அந்த மக்கள் கொரியன் இசை பக்கம் திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கொரிய கலாசாரம் இந்தியாவில் பரவி பரவி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கொரியன் உணவுகள்
கொரியன் டிராமாக்களை மக்கள் பெரிதும் விரும்புவதால், அதிலிடம்பெறும் உணவுகளுக்கும் மவுசு அதிகமாகிவிட்டது. இந்தியாவில் ஆங்காங்கே கொரியன் உணவுகள் கொண்ட உணவகங்கள் உள்ளன. மக்கள் தேடித்தேடி சென்று கொரியன் உணவுகளை சாப்பிடுகின்றனர். படங்களில் வரும் உணவுகளின் பெயர்களால் ஈர்க்கப்பட்டு, இதனை முதலில் ரசிக்க ஆரம்பித்து பின்னர் சுவைக்கு அடிமையாகின்றனர். தேக்பொக்கி, ராம்யோன், கிம்ச்சி ஆகிய கொரிய உணவுகள் இந்தியாவில் பிரபலமாக உள்ளது.
மற்றொரு பிரபலமான பொருளாக கொரியா நூடுல்ஸ் உள்ளன. இது பெருநகரங்களில் மட்டுமல்லாமல் இரண்டாம் நிலை நகரங்களிலும், சில்லறை விற்பனை கடைகளிலும், எளிதாக கிடைக்கின்றன. மற்ற தயாரிப்புகளைப் போல் இல்லாமல் நூடுல்ஸ்க்கான தேவை இந்தியாவின் பல்வேறு இடங்களில் அதிகரித்துள்ளது. இதனை மக்கள் வீட்டிலேயே வாங்கி சாப்பிட முயல்கின்றனர்.

கொரியன் பியூட்டி
இன்றைய தலைமுறையினர் சருமத்தை பாதுகாக்க ஸ்கின் கேர் செய்து வருகின்றனர். சமீப காலமாக இணையத்தில் கொரியன் ஸ்கின் கேர் பிரபலமடைந்து வருகிறது. ”கிளாஸ் ஸ்கின்” என்ற விஷயத்தை அடிக்கோடிட்டு, அழகு சாதன பொருட்களை அதிகம் விளம்பரப்படுத்துகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக கொரியன் தொடர்கள் உள்ளன. கே டிராமாக்களில் வரும் கதாபாத்திரங்களின் சருமம் பொலிவுடனும், பளபளவென கண்ணாடி போன்றும் காட்சியளிக்கும். ”இதை அடைய வேண்டுமென்றால் இந்த கொரிய அழகு சாதன பொருட்களை பயன்படுத்துங்கள்” என்று சந்தைப்படுத்துகின்றனர். கொரியன் டிராமாக்களில் வரும் கதாபாத்திரங்களை போன்று தங்களின் சருமமும் பொலிவு பெற வேண்டும் என்று அத்தொடர்களை பின்பற்றும் மக்களும் அதனை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
கொரிய அழகு சாதன நிறுவனமான Velymonkeys, தங்களுடைய பொருட்களை இந்தியாவின் முன்னணி நிறுவனமான நைக்கா மூலமாக விற்பனை செய்து வருகிறது.
இந்தியாவில் 2022 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த நிறுவனத்தின் வருமானம் 2.3 பில்லியன் வொன் இருந்த நிலையில் ஒரே ஆண்டில் 11 பில்லியன் வொன் ஆக அதிகரித்துள்ளதாக கொரியன் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
ஆனால் உண்மையில் இதுபோன்ற “கிளாஸ் ஸ்கின்” பியூட்டி கேர் எல்லாம் இந்தியன் சருமத்திற்கு சாத்தியப்படாது என்று, மருத்துவர்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தென்னிந்திய மாநிலங்களிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் ஏன் அங்கு இருக்கும் சிறிய நகரங்களிலும் கூட கொரியன் கலாசாரம் பிரபலமடைந்து வருகின்றன.
Ximi Vogue (வீட்டுப் பொருட்கள்) மற்றும் Innisfree (அழகுசாதனப் பொருட்களை விற்கும்) போன்ற கொரிய கடைகளும் அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்து பிரபலமடைந்து வருகின்றன. அழகு சாதனப் பொருட்கள், உணவுப் பொருட்கள், ஆபரணங்கள், உணவு மற்றும் ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கொரியப் பொருட்களை விளம்பரப்படுத்துவதற்காக கோரிகார்ட் என்ற ஆன்லைன் வலைத்தளமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமும் மக்கள் ஈர்க்கப்படுகிறார்கள்.
குறிப்பாக திரைப்படங்கள் மூலம் கொரியன் கலாச்சாரத்தை ஒவ்வொன்றாக மக்களின் மனதில் பதிய வைத்து அதனை பயன்படுத்த, சந்தைப்படுத்துகின்றனர். கொரியன் கலாசாரம் இந்தியாவில் பிரபலமடைய திரைப்படங்கள் முக்கிய காரணமாக உள்ளது. அதேபோல, தென் கொரியாவில் உள்ள இந்திய தூதரகமும் இந்தியாவின் கலாசாரத்தை பரப்பும் முயற்சியில் பல்வேறு நிகழ்ச்சிகள், விழாக்கள் ஆகியவற்றை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.!