
வான்கடே மைதானத்தில் மும்பை அணியும், லக்னோ அணியும் இன்று (ஏப்ரல் 27) மோதின. தொடர்ச்சியாக 5-வது வெற்றியைப் பதிவுசெய்யும் நோக்கில் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா களமிறங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார்.
மும்பைக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மயங்க்… லக்னோவை அசரடித்த ரிக்கிள்டன்!
காயத்துக்குப் பிறகு பாதி சீசனில் லக்னோவில் இணைந்த இளம் வேகம் மயங்க் யாதவ் முதல் ஓவரிலேயே தன்னுடைய பொட்டன்ஷியலை வெளிப்படுத்தி முதல் நான்கு பந்துகளை டாட் பால் ஆக்கினார். ஆனால், அடுத்த ஓவரிலேயே பிரின்ஸ் யாதவின் பந்துகளை சிக்ஸ், ஃபோர் என சிதறடித்தார் ரிக்கிள்டன்.

அடுத்து ரோஹித் சர்மா தன் பங்குக்கு மயங்க் வீசிய 3-வது ஓவரில் பேக் டு பேக் சிக்ஸ் அடித்து அதிரடி காட்டினார். ஆனால், அதற்கடுத்த பந்திலேயே அவுட்டாகி ஏமாற்றமளித்தார். அந்த மொமன்ட்டமை பிடித்துக்கொண்ட லக்னோ, அடுத்து இரண்டு ஓவர்கள் திக்வேஷ் ரதி, ரவி பிஷ்னாய் ஆகியோரிடம் ஒப்படைத்து ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் மட்டும் கொடுத்து மும்பையின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தியது.

இருப்பினும், பவர்பிளேயின் கடைசி ஓவரை விடாத ரிக்கிள்டன், அந்த ஓவரில் மட்டும் இரண்டு சிக்ஸ், ஒரு போர் அடித்து, பவர்பிளே முடிவில் மும்பையின் ஸ்கோரை 66-ஆக உயர்த்தினார். அதோடு, 7-வது ஓவரின் முதல் பந்தில் சிங்கிள் எடுத்து 25 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தார். இருப்பினும், 9-வது ஓவரில் திக்வேஷ் ரதியின் பந்துவீச்சில் கேட்ச் அவுட்டனார்.
கட்டுக்கடங்காத சூர்யகுமார் யாதவ்… 10-க்கு கீழ் இறங்காத ரன்ரேட்!
மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் நிதானமாக ஆட்டத்தைத் தொடங்க, 10-வது ஓவரில் சிக்ஸ், ஃபோர் என அவர் மீது பிரெஷர் செல்லாமல் பார்த்துக்கொண்டார் வில் ஜேக்ஸ். 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் குவித்தது மும்பை. அடுத்த ஓவரில் 10 ரன்கள் வர, பிரின்ஸ் யாதவ் வீசிய 12-வது ஓவரில் 29 ரன்களில் கிளீன் போல்டானார் வில் ஜேக்ஸ். அந்த இடத்தில தனது வேகத்தைக் கூட்டிய சூர்யகுமார் யாதவ், அடுத்த ஓவரிலேயே சிக்ஸ், ஃபோர் என விளாசினார். இருப்பினும், அதே ஓவரில் ரவி பிஷ்னாய் பந்தில் திலக் வர்மா அவுட்டானார்.

அடுத்த 2 ஓவர்களுக்கு சூர்யா – ஹர்திக் கூட்டணி நிதானமாக ஆட, 15 ஓவர்கள் முடிவில் 157 ரன்கள் குவித்தது மும்பை. அடுத்த ஐந்து ஓவர் அதிரடிதான் என மும்பை ரசிகர்கள் எதிர்பார்க்க, 16-வது ஓவரின் முதல் பந்திலேயே ஹர்திக்கை போல்டாக்கினார் மயங்க். இருப்பினும், அடுத்து களமிறங்கிய நமன் திர் அடுத்த ஓவரில் பேக் டு பேக் பவுண்டரி அடித்து மும்பையின் ரன்ரேட் 10-க்கு குறையாமல் பார்த்துக்கொண்டார். 18-வது ஓவரில் சிக்ஸ் அடித்து 27 பந்துகளில் அரைசதம் கடந்த சூர்யா, அடுத்த பந்திலேயே ஆவேஷ் கான் பந்தில் அவுட்டானார். இருப்பினும், அறிமுக வீரர் கார்பின் போஷ், நமன் திர் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது.
பவர்பிளேயில் பவர் காட்டிய லக்னோ… மாயம் செய்த வில் ஜேக்ஸ்!
லக்னோவின் பேட்டிங் லைன் அப்-கு 216 பெரிய இலக்கு இல்லையென்றாலும், மும்பை அணியின் பவுலிங் யூனிட்டுக்கு முன்னால் இந்த டார்கெட் கடினமானதுதான். அதற்கேற்றாற்போலவே, தீபக் சஹார், டிரென்ட் போல்ட் வீசிய முதல் இரண்டு ஓவர்களில் விக்கெட் விடாமல் தாக்குப்பிடித்த லக்னோ, பும்ரா வீசிய மூன்றாவது ஓவரில் எய்டன் மார்க்கரமின் விக்கெட்டை இழந்தது. அடுத்த இரண்டு ஓவர்களை பூரான் – மிட்செல் மார்ஷ் கூட்டணி நிதானமாகவே அணுகியது.

பின்னர், தீபக் சஹார் வீசிய பவர்பிளேயின் கடைசி ஓவரில் பூரான் ஹாட்ரிக் சிக் அடித்து லக்னோவின் ஸ்கோரை 6 ஓவர்கள் முடிவில் 60 ரன்களாக்கினார். பூரான் அதிரடியாக ஆடத் தொடங்குவதைக் கவனித்த ஹர்திக், 7-வது ஓவரை வில் ஜேக்ஸ் கையில் ஒப்படைத்தார். அந்த ஒரே ஓவரில் பூரானையும், ரிஷப் பண்ட்டையும் அவுட்டாக்கி ஆட்டத்தை மும்பை திருப்பினார் வில் ஜேக்ஸ்.
லக்னோவை அன்லக்கியாக்கிய பும்ரா – போல்ட்!
7 ஓவர்களில் 67 ரன்களில் மார்க்ரம், பூரான், பண்ட் ஆகியோரை விக்கெட் இழந்தபோதும் லக்னோவின் ரன் வேகம் குறையவில்லை. கரண் சர்மா வீசிய 8-வது ஓவரில் பவுண்டரி எதுவும் வராதபோதும், அதே கரண் சர்மா வீசிய 10-வது ஓவரில் ஆயுஷ் பதோனி பேக் டு பேக் சிக்ஸ் அடிக்க 10 ஓவர்கள் முடிவில் 103 ரன்கள் தொட்டது லக்னோ. இந்த இடத்தில் மீண்டும் சுதாரித்துக்கொண்ட ஹர்திக், 12-வது ஓவரை போல்ட் கையில் கொடுத்தார்.

வந்த இரண்டாவது பந்திலேயே மார்ஷை பெவிலியனுக்கு அனுப்பினார் போல்ட். அடுத்து கைகோர்த்த ஆயுஷ் பதோனி – மில்லர் அடுத்த 2 ஓவர்களில் தலா 11 ரன்கள் அடிக்க, மீண்டும் ஓவர் வீச வந்தார் போல்ட். இம்முறை போல்ட்டின் பந்தில் ஆயுஷ் பதோனி 35 ரன்களில் இரையானார். 15 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்களைக் குவித்தது லக்னோ.

அடுத்து 16-வது ஓவரை வீசிய பும்ரா ஒரே ஓவரில் மில்லர், அப்துல் சமத், ஆவேஷ் கான் என மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பையின் வெற்றியை உறுதிசெய்துவிட்டார். அடுத்த இரண்டு ஓவர்களில் தலா ஒரு சிக்ஸ் பறக்கவிட்ட ரவி பிஷ்னாயை 19-வது ஓவரில், தனது ஐ.பி.எல் கரியரில் முதல் விக்கெட்டாக வீழ்த்தினார் கார்பின் போஷ். பின்னர், போல்ட் வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் தனது கடைசி விக்கெட்டையும் விட்டது லக்னோ. இறுதியில், 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றிபெற, முக்கியமான நேரத்தில் பூரான், பண்ட் விக்கெட் வீழ்த்திய வில் ஜேக்ஸ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.