
கணவன், மனைவி பிரிவது அவர்கள் இருவர் சம்பந்தப்பட்ட விஷயம். ஆனால், அப்பாவும் அம்மாவும் பிரிவதென்பது அவர்களின் குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயமும்கூட.
தவிர்க்க முடியாத காரணங்களால் கணவனும் மனைவியும் பிரியும்போது, இந்தப் பிரிவானது அவர்கள் குழந்தைகளைப் பலவிதங்களில் பாதிக்கவே செய்யும்.
பெற்றோரின் விவாகரத்துக்குப் பிறகு, உளவியல்ரீதியாகப் பிள்ளைகள் சந்திக்கும் பிரச்னைகள், அந்தப் பிரச்னைகள் வராமல் இருப்பதற்கு பெற்றோர்கள் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிச் சொல்கிறார் குழந்தைகள் மனநல மருத்துவர் ஜெயந்தினி.
”பெற்றோரின் விவாகரத்து, பிள்ளைகளுடைய வயதைப் பொறுத்து பாதிக்கும். சின்ன பிள்ளைகளுக்கு `என் ஃபிரெண்ட்ஸுக்கெல்லாம் அம்மா, அப்பா ரெண்டு பேரும் ஒண்ணா இருக்காங்க. எனக்கு மட்டும் ஏன் அப்படியில்லை’ என்ற கேள்வி எழும். வளர்ந்த பிள்ளைகளுக்கு, பெற்றோர் பிரிந்திருப்பதை வெளியில் சொல்லலாமா, கூடாதா என்ற தயக்கமும், எந்த இடத்தில் இதைச் சொல்லலாம், எந்த இடத்தில் மறைக்கலாம் என்ற கேள்வியும் இருக்கும்.
விவாகரத்தான பெற்றோர்களின் பிள்ளைகள், அம்மா அல்லது அப்பாவுடன் இருப்பார்கள். அவர்கள் அம்மாவுடன் இருக்கிறார்கள் என்றால், அம்மாவோ, அம்மாவின் சொந்தக்காரர்களோ அப்பாவைப் பற்றித் தப்புத்தப்பாகப் பிள்ளைகளிடம் சொல்லலாம்.
அப்பாவுடன் இருக்கிறார்கள் என்றால், அம்மாவைப் பற்றிய நெகட்டிவ் விமர்சனங்களைப் பிள்ளைகள் கேட்க நேரலாம். இதனால், நாளடைவில் அப்பா அல்லது அம்மாவை அல்லது இரண்டு பேரையுமே பிள்ளைகள் வெறுக்க ஆரம்பிப்பார்கள். இதனால், பிள்ளைகள் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள்.

கோர்ட் உத்தரவுப்படி, வாரத்துக்கு ஒரு நாள், மாதத்துக்கு இரண்டு நாள் எனப் பிள்ளைகள் அம்மாவிடமோ, அப்பாவிடமோ செல்ல வேண்டி வரும்போது, சில குழந்தைகள் ‘நா அங்கே போக மாட்டேன்’ என்று அழுவதை என் அனுபவத்தில் நிறைய பார்த்திருக்கிறேன்.
இந்த வெறுப்பும் குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இதுவொரு வகை என்றால், இதில் இன்னொரு வகையும் இருக்கிறது. வாரத்துக்கு ஒருநாள் பிள்ளையைச் சந்திக்கிற அப்பா, அந்த நேரத்தில் தன் பாசத்தைப் பிள்ளை கேட்பதையெல்லாம் வாங்கித் தருவதன் மூலம் காட்டுவார். இல்லையென்றால், பிள்ளை கேட்கும்போதெல்லாம் செல்போனைக் கொடுத்துவிடுவார். அவரைப் பொறுத்தவரை பிள்ளை தன்னுடன் இருக்கும்போது சந்தோஷமாக இருக்க வேண்டுமென்ற ஆசையில்தான் இதைச் செய்வார்.
ஆனால், பிள்ளைகளைப் பொறுத்தவரை செல்போன் கொடுக்கிற அப்பா நல்லவர், `கண்கள் கெட்டுவிடும். கொடுக்க மாட்டேன்’ என்று சொல்கிற அம்மா கெட்டவளாகிவிடுவார். இப்படி நல்லது, கெட்டது தெரியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகிற குழந்தைகளின் எண்ணிக்கை இன்றைக்கு அதிகம்.
சில குழந்தைகள் இப்படி வார இறுதியில் அம்மாவுடனோ, அப்பாவுடனோ இருக்கும்போது, அவர்களுடைய உறவினர்களால் பாலியல் தொல்லைக்குள்ளாவதும் நடக்கிறது.
இந்தக் குழந்தைகளின் மனநிலையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது’’ என்றவர், பெற்றோர்கள் விவாகரத்து செய்திருந்தாலும் குழந்தையைச் சேர்ந்து பராமரிக்கும் `ஷேர்டு பேரன்ட்டிங்’ பற்றியும் சொன்னார்.

ஒருவர் மேல் ஒருவர், தவறான குற்றச்சாட்டுகளைச் சொல்லி பிள்ளையின் மனதில் விஷத்தை விதைக்கக் கூடாது.
”விவாகரத்தான தம்பதிகள், தங்கள் குழந்தைகளின் மனம் கசங்காமல் வளர்க்க வேண்டுமென்றால், ஷேர்டு பேரன்ட்டிங் முறையைப் பின்பற்றலாம். அதாவது, சட்டப்படி பிரிந்தாலும் பிள்ளையின் ஆரோக்கியம், ஒழுக்கம், கல்வி, எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ் போன்ற முக்கியமான விஷயங்களில் சேர்ந்து பேசி முடிவெடுக்க வேண்டும்.
ஒருவர் மேல் ஒருவர், தவறான குற்றச்சாட்டுகளைச் சொல்லி பிள்ளையின் மனதில் விஷத்தை விதைக்கக் கூடாது.
பிள்ளை அம்மாவுடன் இருந்தாலும் சரி, அப்பாவுடன் இருந்தாலும் சரி, நன்றாகப் படிப்பது, செல்போனைக் குறைவாகப் பயன்படுத்துவது போன்ற ஒழுக்க விதிகள் ஒரே மாதிரி இருக்க வேண்டுமென்பதில் இருவரும் கவனமாக இருக்க வேண்டும்.

விவாகரத்துக்குப் பிறகு அம்மாவுக்கோ, அப்பாவுக்கோ மறுமணம் நடந்து அவர்களுக்கு இன்னொரு குழந்தை பிறந்தாலும், முதல் திருமணத்தின் மூலம் பிறந்த குழந்தையையும் மறுமணத்தின் மூலம் பிறந்த குழந்தையையும் ஒன்றுபோல நடத்த வேண்டும்.
ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், சேர்ந்திருக்கும் பெற்றோர் எப்படித் தங்கள் பிள்ளை தொடர்பான விஷயங்களிலும் ஒன்று சேர்ந்து செயல்படுவார்களோ அதேபோல பிரிந்திருக்கும் பெற்றோரும் செயல்படுவது நல்லது.
‘நாங்கள் இருவரும்தான் பிரிந்திருக்கிறோம். உன் விஷயத்தில் நாங்கள் இருவரும் ஒன்று சேர்ந்துதான் செயல்படுவோம்’ என்பதைப் பிள்ளையிடம் சொல்லிவிட்டால், விவாகரத்தால் குழந்தைகள் மனநலம் பாதிக்கப்படுவது பெருமளவு குறையும் என்பது என் கருத்து’’ என்கிறார் குழந்தைகளுக்கான மனநல மருத்துவர் ஜெயந்தினி.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
