
சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக முன்னாள் மாநில தலைவரும், தெலுங்கானா, புதுச்சேரி முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார்.
மருத்துவர் சுவாமிநாதனுக்கு, ஆனந்த விகடனின் டாப் 10 மனிதர்கள் விருது வழங்கினார்.
அதையடுத்து, சமீபத்தில் மறைந்த தனது தந்தையும், காங்கிரஸ் மூத்த தலைவருமான குமாரி அனந்தன் குறித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “இது ஒரு வாழ்க்கையில் மறக்க முடியாத படம். நான் அவர் சார்ந்திருந்த இயக்கத்தை விடுத்து இன்னொரு இயக்கத்தில் சேர்ந்தபோது 10 மாதங்கள் அப்பா என்னோட பேசவில்லை.
நான் சொல்வேன் 10 மாதம் என்னைச் சுமந்து பெற்றோர் 10 மாதம் என்னிடம் பேசவில்லை. அப்பாவுக்கு எதிராக ஒரு கட்சியில் சேர்ந்தது அவரை ரணப்படுத்தியிருக்கும் என்று எனக்குத் தெரியும்.
ஆனால், அவர்கள் மகிழும்படி குமரி ஆனந்தரின் மகள் என்று சொல்வதைப்போல, தமிழிசையின் அப்பா என்று சொல்லும் அளவிற்கு எனது கடுமையான உழைப்பைப் போட வேண்டும் என்று நினைத்து, அதில் வெற்றி பெற்ற நாளன்று நான் ஆளுநராக அறிவிக்கப்பட்ட உடனேயே தன் மகளைப் பார்க்க ஓடோடி வந்து எனக்குத் திலகம் இட்டு வாழ்த்து தெரிவித்த அந்த வெற்றிகரமான நாள். எங்க அப்பா என்ன ரொம்ப சாதாரணமாகப் பார்க்க வர மாட்டார். அரசியல் ரீதியாகப் பார்க்கவே வரமாட்டார்.

ஆனால், தானே ஒரு இயக்கத்தில் சேர்ந்து ஏறக்குறைய 20, 25 ஆண்டுகள் கடுமையான உழைப்பைப் போட்டு தனக்குப் பெயர் பெற்றுத் தந்த மகளை, பெற்ற தந்தை வந்து பார்த்த நாள்.
அதனால், இந்த படம் என்னால் மறக்க முடியாதது மட்டுமல்ல, அதற்கு இடையில் இருப்பவரை என்னால் மறக்க முடியாது. அப்பா திலகம் இடுகிறார் என்றால் அதைப் பார்த்து ரசிப்பவர் எனது கணவர் டாக்டர் சௌந்தர்ராஜன்.

அப்பாவைப் பற்றிச் சொல்லும்போது, தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை தமிழ் என்னைப் பெற்றதனால் தமிழ் பேசுகிறேன் என்று சொல்லுவேன்.
எனது கணவர் டாக்டர் சௌந்தரராஜன் பற்றிச் சொல்லும்பொழுது தமிழிசை சௌந்தரராஜன் பெயரில் மட்டும் பாதியில்லை என் உயிரிலும் பாதி என்று சொல்லுவேன்.” என்று கூறினார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
