
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் நேபாள நாட்டைச் சேர்ந்த ஒருவர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா உள்பட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டுகள் எழாதபோதும், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக நிறுத்துவது, இங்கிருக்கும் பாகிஸ்தானியர்களை உடனடியாக வெளியேற உத்தரவு உள்ளிட்ட நடவடிக்கைகளைப் பாகிஸ்தான் மீது மோடி அரசு எடுத்திருக்கிறது.
அதேபோல, சில பாஜக தலைவர்கள் இந்தத் தாக்குதலை வைத்து இஸ்லாமிய வெறுப்பைப் பரப்பி வருகின்றனர். இன்னொருபக்கம், பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடக்கூடாது என்ற குரலும் தொடர்ச்சியாக ஒலித்த வண்ணம் இருக்கிறது.

இந்த நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் இரு நாடுகளின் கிரிக்கெட் உறவு குறித்த கேள்விக்கு, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, “பாகிஸ்தானுடனான உறவை இந்தியா 100 சதவிகிதம் முறித்துக்கொள்ள வேண்டும். கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் ஆண்டுதோறும் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. தீவிரவாதத்தை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது” என்று கூறியிருக்கிறார்.