
“ஆளுநர் பதவியை ரத்து செய்ய வேண்டும், ஆளுநருக்கான அதிகாரங்களை சபாநாயகரிடம் கொடுக்க வேண்டும்..” என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக ஆளுநருக்கு எதிரான தீர்ப்பைப் பெறக் காரணமான திமுக மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான வில்சன் பேசியுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மேன்மையர் மன்றத்தின் சார்பில், ‘மத்திய-மாநில அரசு உறவுகளின் இன்றைய நிலை’ என்ற தலைப்பிலான கருத்தரங்கு மதுரையில் நடந்தது.
கருத்தரங்கில் மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் பேசும்போது, “ஒன்றிய – மாநில அரசுகளின் உறவு போன்ற தலைப்பில் பல்வேறு கருத்தரங்குகள் நடைபெற வேண்டும், அதனை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடத்த வேண்டும். இந்த ஒன்றிய அரசு 2014-ல் பதவிக்கு வந்த பிறகு ஒன்றிய – மாநில அரசு உறவுகள் கடினமாகிவிட்டது, சிதைந்து கொண்டிருக்கிறது, நடுவில் நீதிமன்றம் தேவைப்படும் அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் தமிழக முதலமைச்சரின் முயற்சியால் மாபெரும் வெற்றியை பெற்றோம். வில்சன் என்பது அம்புதான். வில்லில் அம்பை எய்தவர் முதலமைச்சரான சன். இந்த வழக்கில் நானும் 4 சீனியர் வழக்கறிஞர்களும் ஆஜரானோம்.
இந்த வழக்கில் முக்கியமான விஷயம், அரசியலமைப்பு சட்டத்தில் ஒரு ஆளுநருக்கு என்ன வேலை? என்ன அதிகாரம்? அவர் எப்படி கடமையை ஆற்ற வேண்டும்? என்று சொல்லப்பட்டிருந்தாலும், இன்றைக்கு வானளாவிய அதிகாரம் தன்னிடம் உள்ளதாக நினைக்கிறார். இந்தியாவில் இதுபோன்றொரு ஆளுநரை வேறு எங்கும் பார்த்தது கிடையாது.

உச்சநீதிமன்றம் ஆளுநரைப் பற்றி எவ்வளவு கடுமையாக கூறியுள்ளது, ஆளுநர் எப்படி நடந்து கொண்டார் என்பதை ஒவ்வொரு நடவடிக்கையையும் நீதிபதியிடம் சமர்ப்பித்தோம். அவர் எழுதிய ஒவ்வொரு கடிதம் மூலம் உள்நோக்கம் தெரிகிறது என்பதையும் நீதிமன்றத்தில் கூறினோம்.
சட்டத்தீர்மானத்தின் அசல் கோப்பு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை, நாங்களே அனுப்பினால் போதும் என்று நீதிமன்றத்தில் சொன்னோம், அனைத்து ஆவணத்தையும் காட்டினோம்.
ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு 10 மசோதாக்களை நிராகரிக்க வேண்டும் என கடிதம் எழுதுகிறார். அரசின் பரிந்துரையைத்தான் ஆளுநர் கடைப்பிடிக்க வேண்டும், ஆனால், அதை செய்யவே இல்லை. முதல் தடவை திருப்பி அனுப்பியதும் இரண்டாவது தடவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதும் அமைச்சரவை ஆலோசனையின்படி செய்யவில்லை.
இந்த தீர்ப்பு இந்தியா முழுவதும் அதிகமாக பேசப்படக் காரணம், ஆளுநர் 30 நாள்களில் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும், அளிக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதுதான்.
மசோதாக்களை ஆளுநர் தேவையில்லாமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி, அவரும் மசோதாவை நிராகரித்தால் நீதிமன்றத்திற்கு வரலாம் என்றும் சொல்லியுள்ளது. அது மட்டுமல்லாமல் ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி மூன்று மாதத்திற்குள் மசோதா மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும் நீதிமன்ற வரலாம் எனவும் சொல்லி இருக்கிறது.
ஆகவே இந்த தீர்ப்பு, ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கு டைம் லைன் பிக்ஸ் பண்ணியது போன்ற தீர்ப்பு. முதலமைச்சரால் கிடைத்த தீர்ப்பு என்று எல்லா இடத்திலும் பேசப்படுகிறது. இத்தீர்ப்பை வரலாறு சொல்லிக் கொண்டே இருக்கும்.

ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதுகிறார், குடியரசுத் தலைவரோ ஒன்றிய அரசின் பரிந்துரையின்படி திரும்ப அனுப்புகிறார் என்றால், மோடி அரசின் ஆலோசனையின் பெயரில்தான் குடியரசுத் தலைவர் மசோதாக்களை நிராகரித்தார்.
நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தும் ஆளுநர் மதிக்கவே இல்லை, ஆகவே, நீங்களே மசோதாவிற்கு ஒப்புதல் கொடுங்கள் என நீதிமன்றத்தில் வாதிட்டோம் அதை ஏற்றுக் கொண்டதைத்தான் குடியரசுத் துணைத்தலைவர் விமர்சிக்கிறார்.
ஆளுநர் கெட்ட எண்ணத்தோடு நடந்து கொண்டார் என உச்ச நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. அவர் மீது எந்தவித நம்பிக்கையும் இல்லை, மறுபடியும் இந்த மசோதாக்களை அனுப்பினால் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார், ஆகவே நாங்கள் இந்த உத்தரவை வழங்குகிறோம் என கூறியிருக்கிறார்கள்
இந்த உத்தரவை மதித்து மத்திய அரசு உடனடியாக ஆளுநரை ராஜினாமா செய்யச் சொல்லியிருக்க வேண்டும்.
ஆளுநர் ஊட்டிக்குச் சென்று, துணைவேந்தர்கள் மாநாட்டை கூட்டியிருக்கிறார். ஆளுநர் செய்வது சட்டப்படி குற்றமாகும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு துணைவேந்தர் மாநாட்டை நடத்துவது நாகரீகமற்றது.

இந்த கருத்தரங்கில் ஆளுநர் பதவியை நீக்கம் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், ஆளுநர் அதிகாரங்களை சபாநாயகரிடமே கொடுத்து விடலாம்.
5 வருடம் மக்கள் வரிப்பணத்தில் 100 ஏக்கர் இடத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள், மக்களுக்கு நல்லது செய்வதில்லை. உங்களுக்கான செலவுகளையெல்லாம் மக்களுக்கு உபயோகமான திட்டங்களாக கொடுக்கலாம். ஆகவே, ஆளுநர் பதவி தேவையில்லை, சட்டத்தில் உள்ள அந்த அதிகாரத்தை சபாநாயகரிடமே கொடுத்து விடலாம்.
1971-ன் மக்கள் தொகை அடிப்படையில், 1976 -ல் தொகுதி மறு வரைவு செய்தார்கள். 42-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் என 1972 -ல் வந்தது பாராளுமன்றத் தொகுதி, சட்டமன்றத் தொகுதி எண்ணிக்கை சரியாக இருந்து கொண்டே வந்தது.
2026 -ல் அந்த காலகட்டம் முடிவுக்கு வருகிறது, ஏன் இதைப் பற்றி சொல்கிறோம் என்றால் இன்றைய முதலமைச்சர் இது சம்பந்தமாக தென் மாநிலங்கள் மட்டுமல்லாமல் பஞ்சாப் போன்ற வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களையும் அழைத்து கருத்தரங்கம் நடத்தி தீர்மானம் போட்டு ஒன்றிய அரசிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
இது சம்பந்தமாக பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறேன். ஆனால் ஒன்றிய அரசு உதாசீனம் செய்து வருகிறது. உள்துறை அமைச்சர், ஒன்றும் நடக்காது என்கிறார். இந்த ஒன்றிய- மாநில உறவுகள் நீடிக்க வேண்டுமென்றால் இது போன்ற பிரச்னைகள் அணுகுமுறைகளை ஒன்றிய அரசு மாற்ற வேண்டும்.” என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
