
புதுடெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் சொந்தநாடு திரும்புவதை உறுதி செய்வதற்காக 5,000 பாகிஸ்தானியர்களின் பெயர் பட்டியலை டெல்லி போலீஸாரிடம் உளவுத்துறை (ஐபி) ஒப்படைத்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானியர்களுக்கான விசாக்களை மத்திய அரசு ரத்து செய்தது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் சொந்த நாடு திரும்ப உத்தரவிடப்பட்டது. இந்தநிலையில் வெளிநாட்டு பிராந்திய பதிவு அலுவலகம் (எஃப்ஆர்ஆர்ஒ), பாகிஸ்தானியர்களின் பெயர் பட்டியலை டெல்லி சிறப்பு பிரிவு போலீஸாருடன் பகிர்ந்து கொண்டது. அடையாளங்களைச் சரிபாக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் இந்த பட்டியல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் நீண்ட காலம் வீசா அனுமதி வைத்திருக்கும், இந்து பாகிஸ்தானியர்களின் பெயர்களும் அடங்கும்.