
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் நேபாள நாட்டைச் சேர்ந்த ஒருவர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா உள்பட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டுகள் எழாதபோதும், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக நிறுத்துவது, இங்கிருக்கும் பாகிஸ்தானியர்களை உடனடியாக வெளியேற உத்தரவு உள்ளிட்ட நடவடிக்கைகளைப் பாகிஸ்தான் மீது மோடி அரசு எடுத்திருக்கிறது.
அதேபோல, சில பாஜக தலைவர்கள் இந்தத் தாக்குதலை வைத்து இஸ்லாமிய வெறுப்பைப் பரப்பி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் நடிகர் விஜய் ஆண்டனி, பாகிஸ்தானியர்களும் நம்மைப் போலவே அமைதியை விரும்புவதாக மத நல்லிணக்கக் குரலை ஒலித்திருக்கிறார்.

எக்ஸ் தளத்தில் விஜய் ஆண்டனி, “காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் என் ஆழ்த்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதேசமயம் பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும், பாகிஸ்தான் பொதுமக்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களும் நம்மைப் போல அமைதியையும் மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள். வெறுப்பைக் கடந்த மனிதம் வளர்ப்போம்” என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.