
மும்பை தென்பகுதியில் இருக்கும் பெல்லார்ட் எஸ்டேட்டில் அமலாக்கப்பிரிவின் அலுவலகம் இருக்கிறது. இந்த அலுலகத்தில் இன்று அதிகாலை 3 மணிக்கு திடீரென தீப்பிடித்துக்கொண்டது.
அமலாக்கப் பிரிவு அலுவலக கட்டிடத்தின் 4-வது மாடியில் தீப்பற்றிக்கொண்டது குறித்து கேள்விப்பட்டதும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
8 தீயணைப்பு வாகனங்கள், 6 டேங்கர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை பல மணி நேரம் போராடி அணைத்தனர்.
இத்தீவிபத்து நான்காவது மாடியோடு கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாக மாநகராட்சி தீயணைப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீவிபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் தீவிபத்தில் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாகிவிட்டதாக அமலாக்கப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.
மும்பையில் தொடர்ந்து தீ விபத்து
மும்பையில் சமீப காலமாக தொடர்ந்து தீவிபத்துகள் அதிக அளவில் நடந்து வருகிறது. மும்பை அந்தேரி லோகண்ட்வாலாவில் உள்ள 7 மாடி கட்டிடத்தில் நேற்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது.
முதல் மாடியில் இருந்த வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் அபினா (34) என்ற பெண் புகையில் சிக்கி மூச்சுவிட முடியாமல் இறந்து போனார். இது தவிர அவர்களது வீட்டில் இருந்த இரண்டு வளர்ப்பு நாய்களும் மூச்சுத்திணறி உயிரிழந்தன.

மேலும் அபினாவின் கணவர் கார்த்திக் காயம் அடைந்து அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். 10 நாள் குழந்தை, 3 வயது குழந்தை உள்பட 6 பேர் தீவிபத்தில் சிக்கி மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அபினாவும், அவரது குடும்பத்தினரும் 6-வது மாடியில் தான் வசித்து வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்டபோது அவர்கள் வளர்த்த நாயுடன் மேல் மாடிக்கு செல்ல அபினா திட்டமிட்டார். ஆனால் அவர்களது நாய்கள்தான் அபினாவை படிக்கட்டுகள் வழியாக வரும்படி இழுத்து வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். சமீபத்தில் லோகண்ட்வாலாவில் நடந்த 6-வது தீவிபத்தாகும்.