
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்ட வரிப்பணம் ரூ.4.66 கோடி மோசடி செய்ததாக கடந்த வருடம் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் தரப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், மாவட்ட குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, எஸ்.ஐ கார்த்திகேயன் ஆகியோர் விசாரணையை தொடங்கினர்.
அதன்படி, வரி வசூல் மையத்தில் இளநிலை உதவியாளர் (கரூவூலர்) சரவணன் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவராக கைது செய்யப்பட்டார்.
மேலும், இந்த மோசடியை கண்டறிந்து தடுக்கத் தவறியதாக கண்காணிப்பாளர் சாந்தி, இளநிலை உதவியாளர் சதீஷ், நிர்வாக அலுவலர் வில்லியம் சகாயராஜ் ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இ-சேவை மையம் நடத்தி வந்து போலி ஆவணங்கள் தயார் செய்ய சரவணனுக்கு உதவிய அவருடைய நண்பர் ரமேஷ் ராஜா கைது செய்யப்பட்டார்.
மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் நடத்திய தொடர் விசாரணையில், மாநகராட்சியில் மோசடி செய்த பணத்தில் தலா ரூ.30 லட்சத்தை, வட்டி தொழில் செய்து வரும் திண்டுக்கல்லைச் சேர்ந்த இளஞ்செழியன் மற்றும் ஸ்ரீராமபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விற்பனையாளராக பணியாற்றி வரும் சாணார்பட்டி முரளி ஆகியோரிடம் இளநிலை உதவியாளராக பணியாற்றிய சரவணன் கொடுத்துள்ளார்.

முக்கிய குற்றம் சாட்டப்பட்ட சரவணன் ஜாமினில் வெளிவந்து தான் கொடுத்த பணத்தை இளஞ்செழியன் மற்றும் முரளி இடம் கேட்டபோது இருவரும் பணத்தை தர மறுத்துள்ளனர்.
இதனையடுத்து சரவணன் காவல் நிலையம் சென்று மாநகராட்சியில் கையாடல் செய்த பணத்தை இருவரிடமும் வழங்கியதை ஒப்புக்கொண்டு உள்ளார்.
அதன்படி தற்போது மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் இளஞ்செழியன் மற்றும் முரளி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.
மேலும் இளஞ்செழியன் மற்றும் முரளி அந்தப் பணத்தை வைத்து சொத்துகள் வாங்கியதாக தெரியவந்துள்ளது. மேலும், இருவரின் சொத்துகள் குறித்து விசாரணை நடத்தி பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கையை காவல்துறையினர் தொடங்கியுள்ளனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
