
ஆண்டுதோறும் நம்பிக்கை விதைக்கும் ஆளுமைகளைக் கொண்டாடும் விகடனின் 2024-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் `நம்பிக்கை விருதுகள்’ விழா, இன்று (ஏப்ரல் 26) மாலை சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது.
தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராகப் பயணத்தைக் தொடங்கி, `96′, `மெய்யழகன்’ எனக் காதலையும், உறவுகளின் அன்பையும் திகட்டாத தேனாக விருந்தளித்த பிரேம்குமாருக்கு, `டாப் 10 மனிதர்கள்’ விருதளித்து பெருமைப்படுத்தியிருக்கிறது ஆனந்த விகடன்.
தனது `மெய்யழகன்’ கார்த்தியின் தந்தை சிவகுமார் மற்றும் முன்னணி ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ஆகியோரின் கைகளால் விருதைப் பெற்றுகொண்டு பேசிய பிரேம்குமார், “என்னோட ஃபிட்னஸ் ஸ்பிரிட் சிவக்குமார் சார். உடல்நலனுக்கு மட்டுமல்லாமல், மனதுக்கும்தான். 2D மெய்யழகன் பண்ணும்போது சார் கூடவே இருந்தாரு. என் வாழ்க்கையின் முக்கியமான உறவு சிவக்குமார் சார்” என்று சிவக்குமார் குறித்து நெகிழ்ந்தார்.
`96 பாகம் 2 எழுதி முடிச்சிட்டேன்!’
தொடர்ந்து பி.சி ஸ்ரீராம் குறித்து, “சார் படிச்ச இன்ஸ்டிட்யூட்லதான் நானும் படிச்சேன். சார்கூட வொர்க் பண்றதுக்கு எல்லாருக்கும் ஆசை இருக்கும். எனக்கு பயமும் கூட இருந்துச்சு. ஆனா, ஒருநாள் நான் டைரக்டர் ஆகிட்டு அவர்கிட்ட ஸ்க்ரிப்ட் கொடுப்பேன்னு நெனைச்சதே இல்லை” என்று பேசியவர், “96 பாகம் 2 எழுதி முடிச்சிட்டேன். பி.சி.ஸ்ரீராம் சார்கூட வொர்க் பண்ணப்போறேன்” என அடுத்த பட அப்டேட்டும் கொடுத்தார்.

முன்னதாகப் பேசிய பி.சி.ஸ்ரீராம், “யாருன்னே தெரியாத ஒரு பையன் என்கிட்ட ஒரு ஸ்கிரிப்ட்டைக் கொடுத்தான். அதைப் படிச்சிட்டு ஆடிப்போயிட்டேன். அது ரொம்ப அழகாக இருந்தது. அந்த ஸ்க்ரிப்ட்டுக்கு `ஹேப்பி மென்’னு பேர் வெச்சிருக்கலாம். அதுதான் `மெய்யழகன்.’ பிரேம் உண்மையான மெய்யழகன். அந்த ஸ்கிரிப்ட்டை முழுசா அப்படியே வெச்சிருக்கேன். பிரேம் வளரும் கலைஞன்” என்று பிரேம்குமாரை வாழ்த்தி, “96 பாகம் 2 நான் பண்ணப்போறேன்” என்ற அப்டேட்டும் கொடுத்தார்.