
தேனி மாவட்டத்தில் பெரியகுளம், மேல்மங்கலம், ஜெயமங்கலம், சில்வார்பட்டி, வடுகபட்டி, சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, சீலையம்பட்டி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிலை சாகுபடி நடைபெறுகிறது. இதில் பெரியகுளம் சுற்றுவட்டாரத்தில் வெள்ளை வெற்றிலையும், சின்னமனூர் வட்டாரத்தில் கருப்பு வெற்றிலையும் சாகுபடி செய்யப்படுகிறது.
தேனி மாவட்டத்தில் சின்னமனூர் பகுதியில் அதிக பரப்பில் வெற்றிலை விவசாயம் நடந்து வருகிறது. இந்நிலையில் கோடை வெயில் காரணமாக வெற்றிலை கொடிகள் கருகி வருகின்றன. கோடை மழை பொய்த்து அவ்வப்போது லேசான மழை பெய்வது மண்ணை சூடாக்கி வருவதால் வெற்றிலை கொடிகள் கருகிவருகிறது.
மேலும் இழைகளில் கறுப்பு புள்ளிகள் விழுகின்றன. இதனால் வெற்றிலை பறிக்க முடியவில்லை. வரத்து குறைந்தபோதிலும், வெள்ளை வெற்றிலை கிலோ ரூ.300-ல் இருந்து ரூ.280 ஆகவும், கறுப்பு வெற்றிலை ரூ.220-ல் இருந்து ரூ.190 ஆகவும் குறைந்துள்ளது.

ஒரு வெற்றிலை கொடிகளில் இருந்து 3 ஆண்டுகளுக்கு மகசூல் கிடைக்கும். 25 நாள்களுக்கு ஒரு முறை வெற்றிலை பறிப்பார்கள். ஆண்டிற்கு 12 முறை மகசூல் கிடைக்கும். ஆனால் தற்போது நிலவும் வெப்பம் காரணமாக 10 மாத கொடிகள் கருக துவங்கி உள்ளது. இந்த கொடிகளை அகற்றி விட்டு, புதிய கொடிகளை நடவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையுடன் கூறுகிறார்கள்.