
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். ஆனால் சானியா மிர்சாவிற்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். மகன் இப்போது சானியா மிர்சாவுடன் இருக்கிறான்.
துபாயில் கிரிக்கெட் வீரரின் வீட்டை காலி செய்துவிட்டு தனக்கு புதிதாக வீடு வாங்கிக்கொண்டு அந்த வீட்டிற்கு சானியா மிர்சா தனது மகனோடு சென்று விட்டார். இப்போது தனது மகனுடன் முழு நேரத்தையும் சானியா மிர்சா செலவிட்டு வருகிறார்.
சானியா மிர்சா தனது தாய்மை குறித்தும், டென்னிஸ் போட்டியில் இருந்து விலகியது குறித்தும் சிறப்பு பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அதில் சானியா மிர்சா கூறியதாவது, “2018ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி குழந்தை பெற்றுக்கொண்ட அன்று இரவு கூட நான் டென்னிஸ் விளையாடினேன். ஆனால் குழந்தை பிறந்த 3 வாரத்தில் மீண்டும் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்துவிட்டேன். கர்ப்பமாவது எனக்கு ஒரு கனவாக இருந்தது. ஆனால் கர்ப்ப காலம் எனக்கு கடினமான ஒன்றாகவும் இருந்தது. அதே போன்று குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது மிகவும் சவாலானதாகவும், கடினமாகவும் இருந்தது. நான் மேலும் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினேன்.
`அப்போது நான் அதிகமாக அழுதேன்’
ஆனால் குழந்தைக்கு என்னால் தாய்ப்பால் கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை. அதற்கு எனது உடல் ஒத்துழைக்கவில்லை. நான் எனது குழந்தைக்கு 3 மாதம் வரை தாய்ப்பால் கொடுத்தேன். எனது மகனுக்கு 6 வாரம் மட்டுமே ஆகியிருந்த போது முதல் முறையாக அவனை விட்டுவிட்டு சென்றேன். அப்போது நான் அதிகமாக அழுதேன். நான் போகவிரும்பவில்லை. ஆனால் போகவேண்டியிருந்தது. ஆனால் ஒரே நாளில் வந்துவிட்டேன். எப்போதும் எனது மகனுடன் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் இப்போது டென்னிஸில் இருந்து விலகினேன். எனது மகன் இப்போது வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறான். அவனுடன் ஒரு ஆள் இருக்கவேண்டியிருக்கிறது” என்று தெரிவித்தார்.