
பூனை கடித்ததால் பாதிக்கப்பட்ட இளைஞர், அரசு மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த ஆனந்தன் – விஜயலெட்சுமி தம்பதியினரின் மூத்த மகன் பாலமுருகன். கல்லூரி படிப்பை முடித்து வேலைக்கு சென்று வந்துள்ளார்.
மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டு மாடியில் பாலமுருகன் உறங்கிகொண்டிருந்தபோது இரண்டுபூனைகள் சண்டையிட்டபடி மேலே விழுந்துள்ளது. அப்போது பூனை ஒன்று பாலமுருகனின் தொடையில் கடித்து காயம் ஏற்படுத்தியுள்ளது.
உடனே மருத்துவமனைக்கு சென்ற பாலமுருகன் சாதாரண காயத்துக்கான ஊசி மருந்தை எடுத்துக்கொண்டு பணிக்கு சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில், பாலமுருகனுக்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் ஏற்பாடு செய்து வந்துள்ளனர். கடந்த வாரம், அடிக்கடி தலைவலிப்பதாக பாலமுருகன் கூறியுள்ளார். குடிக்கும் தண்ணீரை பார்த்தும், காற்று வீசும்போதும் பயந்து நடுங்கியுள்ளார்.
இதனையடுத்து அவரை மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ரேபி்ஸ் அறிகுறி இருப்பதாக கூறி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்துள்ளனர்.
இதனையடுத்து நேற்றிரவு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பாலமுருகனை சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ரேபிஸ் நோய் சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். அப்போது பாலமுருகன் அந்த அறையில் கூச்சலிட்டவர், அங்கிருந்து வெளியேற முயன்றவரை தடுத்து சிகிச்சை அளித்துள்ளனர்.
இரவு முழுவதும் காயத்தால் ஏற்பட்ட வலியாலும் மன உளைச்சலாலும் புலம்பியபடி அங்கும் இங்கும் ஓடியபடி இருந்த பாலமுருகன் அதிகாலையில் அறையில் இருந்த போர்வையால் கழுத்தை இறுக்கி கட்டி, மறுமுனையை கதவில் கட்டி தொங்கியபடி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்களும், பணியாளர்களும் காவல்துறையினருக்கு தகவல் அளிக்க உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர்.
பூனை கடித்ததை அலட்சியமாக விட்டதால் 26 வயதான பாலமுருகன் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
பூனைக்கடி தொடர்பாக கால்நடைத்துறை மதுரை மண்டல இணை இயக்குநர் முருகன் செய்தியாளர்களிடம் பேசியபோது, “நாயைப் போன்றே பூனைகளுக்கும் ரேபிஸ் தடுப்பூசிகள் போட வேண்டும், பூனை கடித்தால் அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.
பூனைக்கடியை அலட்சிய படுத்தினால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.
பூனை கடிக்கும் இடத்தை பொறுத்து வேகமாக ரேபிஸ் நோய் பரவும் என்பதால் சிறிய அளவில் கடித்தாலும் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். பூனைக்களுக்கான தடுப்பு ஊசிகள் அரசு கால்நடை மருத்துவமனைகளில் கிடைக்கிறது” என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
