
சச்சின் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. விஜய் நடிப்பில் 2005-ஆம் ஆண்டு வெளியான சச்சின் திரைப்படம், தற்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
இந்த படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆனதை சிறப்பிக்கும் விதமாக ஏப்ரல் 18 அன்று மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.
சச்சின் ரீ ரிலீஸ் வெற்றியை கொண்டாடும் வகையில் தயாரிப்பாளர் கலைபுலி எஸ்.தாணு தலைமையில் வெற்றி விழா நடைபெற்றது. இந்த விழாவில் சச்சின் திரைப்படத்தின் ரீரிலீஸுக்கு ரசிகர்கள் அளித்த ஆதரவு குறித்து பேசி இருந்தார்.
இது குறித்து தயாரிப்பாளர் தாணு பேசியதாவது,
“தமிழ்நாட்டில் சுனாமி என்னும் பேரிழிவு ஏற்பட்ட அடுத்த நாள் தான் சச்சின் திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. சச்சின் திரைப்படம் 2005ல் வெளியானபோதே யாரும் பார்த்திடாத அளவு ரசிகர்கள் கூட்டம் இருந்தது. படத்தின் ஒரு மைல்ஸ்டோன் ஆக விஜய் பாடிய பாடல் இருந்தது.
2005ல் 200 தியேட்டர்களில் வெளியான சச்சின் படம் தற்போது கிட்டத்தட்ட 350 தியேட்டர்களில் ரீ ரீலீஸ் செய்யப்பட்டுள்ளது. தியேட்டரில் ஒளிபரப்பப்படும் ஸ்கிரீனிங் எண்ணிக்கையும் அதிகமாகிறது.
இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் சச்சின் திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. சிலோன், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சச்சின் திரைப்படம் வெளியாக திரையரங்கம் கிடைத்தது. சச்சின் வெளியாகும் போது கிடைத்த லாபத்தை விட ரீ ரிலீஸ் செய்தபோது பத்து மடங்கு லாபம் கிடைத்துள்ளது” என்று கூறினார் தாணு.
அடுத்த ரீரிலீஸ்…
“அஜித் நடிப்பில் வெளியான “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” படம் தான் சச்சின் படத்திற்கு அப்புறம் நான் ரீ – ரிலீஸ் செய்யப்போகிற படம். இதுகுறித்து படத்தின் இயக்குநரிடம் பேசினேன். அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
சச்சின் மாதிரி என்னிடம் எல்லோரும் கேட்கும் இன்னொரு படம் “காக்க காக்க”.. இயக்குனர் கௌதம் என்னிடம் பலமுறை இது குறித்து பேசி இருக்கிறார். அதற்கான வேலையும் நடந்து கொண்டிருக்கிறது. 2026 இல் தெறி மற்றும் கபாலி படம் ரீலீஸ் ஆகும்” என்றும் கூறினார் தயாரிப்பாளர் தாணு.