• April 26, 2025
  • NewsEditor
  • 0

மியான்மரில் பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், மீண்டும் இதே போன்று மற்றொரு நிலநடுக்கம் ஏற்படும் என்று கூறி மக்களை பீதியடைய செய்ததாக ஜோதிடர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் 28 -ம் தேதி மியான்மரில் 7.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 3000-க்கு மேற்பட்டோர் பலியானதாக அந்நாட்டின் ராணுவத்தின் தலைமையிலான அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் ஏப்ரல் 9-ம் தேதி ஜான் மோ தி என்பவர் நிலநடுக்கம் குறித்து ஒரு டிக் டாக் வீடியோ பகிர்ந்திருந்தார். அதில் ஏப்ரல் 21ஆம் தேதி மீண்டும் மியான்மரில் உள்ள ஒவ்வொரு நகரத்தையும் பெரிய அளவிலான நிலநடுக்கம் தாக்கும் என கூறியிருந்தார். இந்த வீடியோ வேகமாக பரவியது.

அதனை தொடர்ந்து பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தவறான தகவல்களை வெளியிட்டதற்காக ஜான் மோ தியை கைது செய்ய அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுத்ததாக மியான்மரில் தகவல் அமைச்சகம் கூறியது.

3 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்ஸ்களை கொண்ட அவரது டிக்டாக் கணக்கு தற்போது நீக்கப்பட்டுள்ளது.

இவரது வீடியோக்கள் அனைத்தும் ஜோதிடம் மற்றும் கைரேகை அடிப்பையிலான கணிப்புகளை கொண்டிருந்தன. மியான்மர் மக்கள் அவரது இந்த எச்சரிக்கை வீடியோவை தீவிரமாக எடுத்துக் கொண்டு, தங்களின் வீடுகளைக் கூட விட்டு வெளியேறும் அளவுக்கு பதற்றம் பரவி இருக்கிறது.

பேரழிவு ஏற்படக்கூடிய நிலநடுக்கம் ஏற்படும் என்று டிக் டாக் கணக்கு மூலம் போலி செய்திகள் பரப்பப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன்படி அந்த ஜோதிடர் மீது கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் ”இதே போல் போலியான செய்திகளை எழுதுபவர்கள் அல்லது பரப்புபவர்கள், பகிர்பவர்கள் மீது நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம்” என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நிலநடுக்கங்கள் பல காரணிகளை சார்ந்திருப்பதால் அவற்றை கணிக்க முடியாது என்று நில அதிர்வு நிபுணர்கள் கூறினர். ஜோதிடர் போன்ற கணிப்புகளை கேட்டு பலர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி முகாமிட்டதாக யாங்கோனில் வசிக்கும் ஒருவர் AFP உடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *