• April 26, 2025
  • NewsEditor
  • 0

தஞ்சாவூரில் புதிய பேருந்து நிலைய சாலை விரிவாக்க பணி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. இதற்காக சாலையோரத்தில் இருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.

இந்த நிலையில் பழைய ஹவுசிங்யூனிட் அருகே 50 ஆண்டுகள் பழமையான ஆலமரம் ஒன்று இருந்தது. அந்த ஆலமரத்தையும் வெட்டி அகற்றுவதற்கான பணிகளில் ஊழியர்கள் ஈடுப்பட்டிருந்தனர்.

பழமையான இந்த ஆலமரம் வெட்டி அழிக்கப்பட இருப்பதை அறிந்த பலரும் மனம் வெதும்பினர். சமூக ஆர்வலர்கள் இந்த ஆலமரத்தை எப்படியாவது காத்திட வேண்டும்னு மெனக்கெட்டனர்.

ஆலமரத்திற்கு தண்ணீர் ஊற்றும் ஊழியர்கள்

இதனை அப்போதைய மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கவனத்துக்கு எடுத்துச் சென்றனர். தானாக வளர்ந்த அந்த மரம் அரை ஆயுள் வாழ்ந்து விட்டது. பெரும் குடையாகி எல்லோருக்கும் நிழல் தந்தது. மரத்தின் அடியில் பல சிறு வியாபாரிகள் வியாபாரம் செய்து பிழைத்தனர்.

மரம் மட்டுமல்ல அப்பகுதியில் அடையாளம் அந்த ஆலமரம். மீண்டும் புதிதாக இது போன்ற ஆலமரம் வளர்வதற்கு இன்னும் 50 வருடம் ஆகும் சார். அந்த மரத்தை எப்படியாவது காத்திடணும் சார்னு கோரிக்கை வைத்தனர்.

இயற்கை தந்த கொடையான மரத்தை அவசியம் காக்கணும். இது நம் கடமையும் கூட. அதே நேரத்தில் சாலை விரிவாக்க பணிகளும் தடைபடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

மறு நடவு செய்யப்பட்ட ஆலமரம்

இதையடுத்து, ஆலமரத்தை வேருடன் பிடிங்கி வேறு இடத்தில் நடுவதற்கான முன்னெடுப்பை செய்தார். இதற்கு அப்போதைய மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் உறுதுணையாக இருந்தனர்.

எங்கயாவது ஒரு இடத்தில் வைத்தால் பராமரிப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து பராமரிக்கவும் ஏற்பாடு செய்தார்.

அதன்படி ஆலமரத்தின் கிளைகள் வெட்டிக்கழிக்கப்பட்டன. மேலும் மண்ணை தோண்டி மரத்தை வேராடு பிடுங்கினர். 7 மீட்டர் உயரம் இருப்பது போல் மேல் பகுதியை வெட்டினர்.

கிளைகள் கழிக்கப்பட்ட பிறகு 16 டன் எடை இருந்த ஆலமரத்தின் அடிப்பகுதியை இரண்டு கிரேன் இயந்திரம் பயன்படுத்தி 3 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு எடுத்துச் சென்று நட்டனர்.

இதற்காக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் எடுத்த சிரத்தைஅப்போது பலராலும் பாராட்டப்பட்டது. பின்னர் ஆலமரம் மெல்ல துளிர்க்க எல்லோருடைய முகத்திலும் பூரிப்பு.

தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

இந்த நிலையில் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பத்திரப்பதிவு துறை தலைவராக பொறுப்பேற்றார். பின்னர், தஞ்சையிலிருந்து யார் சென்றாலும் மனுஷனை விசாரிப்பது போல் அந்த மரத்தையும் விசாரிக்கிறார் என்கிறார்கள்.

திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள தஞ்சாவூர் வந்தவர், ஆலமரம் நட்டதை தன்னுடைய சாதனை என்றும் சொல்லி மகிழ்ந்தாராம். அப்படிப்பட்ட அந்த ஆலமரம் தற்போது நன்கு துளிர்த்து வளர்ந்து வருகிறது.

தற்போது கோடை வெயில் வாட்டி வதைப்பதால் மரத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க தண்ணீர் ஊற்றும் பணியும் தொடர்ச்சியாக நடக்கிறது.

இது குறித்து அழகிய தஞ்சையின் திட்ட இயக்குநர் ஆடிட்டர் ரவிச்சந்திரன் கூறுகையில், 50 ஆண்டு பழமையான மரம் வெட்டப்பட இருந்த நிலையில் மரம்தானே என நினைக்காமல் அதை காக்க அப்போதைய மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் எடுத்த பெரும் முயற்சியால் அம்மரம் உயிர்ப்பெற்றுள்ளது.

ஆல மரம்

இதில் பல கைகள் சேர்ந்து கூட்டு முயற்சியாக உழைத்ததும் குறிப்பிடத்தக்கது. இன்றைக்கு எங்கும் சாலை விரிவாக்க பணிகள் நடக்கிறது. இதற்காக சாலையோரத்தில் இருக்கும் மரங்கள் அழிக்கப்படுகின்றன.

ஒரு மரத்தை அழித்தால் பத்து மரக்கன்றுகள் ஊன்றி பராமரிக்கபடுவதாக சொல்கிறார்கள். ஆனால் பழமையான மரங்களை கவனத்தில் எடுத்து இது போல் வேறு இடத்தில் நடலாம். அதற்கான நல்ல முன்னெடுப்பாக அமைந்த இதை பின்பற்றலாம்.

தற்போது தஞ்சாவூர் பட்டுக்கோட்டை சாலை விரிவாக்க பணிகள் நடந்தது. இதற்காக ஏகப்பட்ட மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. இதில் பனை மரங்களும் அடக்கம்.

அதிகாரிகள் இது போன்ற விஷயங்களில் தனி கவனம் செலுத்தினால் மரங்கள் அழிவதை தடுக்கலாம். பூமி வெப்பமயமாதலை தடுக்க, சுகாதாரமான காற்று, மழை இவற்றுக்கான ஆதாரமாக மரம் உள்ளது. நம்மை வாழ வைக்கும் மரங்களை நாம் காப்பதும், மரம் வளர்ப்பில் ஈடுபடுவதும் நம் கடமையும் கூட என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *