
மறைந்த போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு இன்று காலைதொடங்கி நடைபெற்றுவருகிறது.
கத்தோலிக்க கிறிஸ்துவ மத தலைவரான போப் பிரான்சிஸ் ஏப்ரல் 21 ஆம் தேதி தனது 88 ஆவது வயதில் மறைந்தார். இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்ட நிலையில் உயிரிழந்தார்.
அவரது உடல் அஞ்சலிக்காக காசா சாண்டா மார்ட்டாவின் தேவாலயத்திலிருந்து புனித பீட்டர்ஸ் பேராலயத்துக்கு புதன்கிழமை கொண்டு செல்லப்பட்டது.
போப் பிரான்சிஸின் உடல் புனித பீட்டர்ஸ் பேராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பீட்டர்ஸ் பேராலயத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினர். உலக தலைவர்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
கார்டினல்கள், பேராயர்கள், ஆயர்கள் மற்றும் பாதிரியார்கள் முன்னிலையில் இறுதிச் சடங்குப் பிரார்த்தனை நடைபெறுகிறது. இதற்கு கார்டினல்ஸ் கல்லூரியின் டீன் கார்டினல் ஜியோவானி பாட்டிஸ்டா ரே தலைமை தாங்குகிறார்.
திருப்பலி முடிந்து, சவப்பெட்டி பிரான்சிஸ் அடக்கம் செய்யப்படும் ரோம் பசிலிக்காவான சாண்டா மரியா மாகியோர்க்கு புறப்படுகிறது. இந்த ஊர்வலம் நகர வீதிகளில் சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் செல்லப்படுகிறது.
வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசலிக்கா பேராலயத்தில் போப் பிரான்சிஸ் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. அவரின் விருப்பப்படியே அவருக்கும் மிகவும் பிடித்தமான புனித மேரி பசிலிக்காவில் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இதற்காக அப்பேராலயத்தில் அவர் அடிக்கடி பிரார்த்தனை செய்யும் புனித மேரியின் படத்துக்கு அருகே எளிய முறையில் கல்லறை ஒன்று தயாராகி இருக்கிறது.
இறுதி ஊர்வலத்தைப் பின்தொடர முடியாது, ஆனால் பொதுமக்கள் பாதையில் அமைக்கப்பட்டுள்ள உலோகத் தடைகளுக்குப் பின்னால் இருந்து ஊர்வலத்தை பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.