
மெட்ராஸில் சினிமா ஃபைட்டராக இருந்த சண்முகம் (எ) பென்ஸ் (மோகன் லால்), ஒரு விபத்துக்குப் பிறகு சினிமாவை விட்டு விலகி, கேரளத்தில் கேப் டிரைவராக வாழ்கிறார்.
சண்முகத்திற்குத் தன்னுடைய அம்பாசிடர் கார் மீது அளவற்ற பிரியம்.
மனைவி லலிதா (ஷோபனா) மற்றும் இரு பிள்ளைகளே அவரது உலகம். திடீரென ஒரு நாள், அவரது கார் போலீஸ் பிடியில் சிக்கிக் கொள்கிறது.
காவல்துறையினர் காரைத் திருப்பித் தருவதில் பிடிவாதமாக இருக்கின்றனர்.
ஆனால், காவல் அதிகாரி ஜார்ஜ் (ப்ரகாஷ் வர்மா) கருணை காட்டி, சண்முகத்தின் காரை அவரிடமே திருப்பி ஒப்படைக்கிறார்.
அதோடு, ஒரு அன்புக் கட்டளையையும் விதிக்கிறார். இந்த காவல் அதிகாரியால் சண்முகம் எத்தகைய சிக்கல்களைச் சந்திக்கிறார்?
இவருக்கும் சண்முகத்தின் மகனுக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பதுதான் ‘துடரும் (Thuduram)’ படத்தின் கதை.
குடும்பத் தலைவராகச் சிறு சிறு குறும்புகளைச் செய்யும் இடங்களிலும், மனைவியுடன் காதல் சேட்டைகள் புரியும் காட்சிகளிலும் ‘Pookie’ லாலேட்டனைப் பார்த்து ரசிக்க முடிந்தது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு, லாலேட்டனிடம் இத்தகைய க்யூட் தருணங்கள் நிரம்பியிருப்பது ரசிகர்களுக்கு விருந்து.
அதேபோல், தன் மகனுக்காகப் பழிவாங்கத் துடிக்கும் காட்சிகளில், ஆக்ஷன் ஹீரோவாக மட்டுமல்லாமல் ‘Complete Actor’- ஆக இறங்கி அசத்தியிருக்கிறார்.
கணவருடன் செல்லமாகக் கோபம் கொள்ளும் இடத்திலும், இன்னல்களை எதிர்கொள்ளும் தருணங்களிலும் ஷோபனா தன் அனுபவ நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.

இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் 56-வது படம் இது. இன்னும் இந்த ஜோடியிடம் அதே புத்துணர்ச்சியான கெமிஸ்ட்ரியைக் காண முடிகிறது.
காவல் அதிகாரி ஜார்ஜாக ப்ரகாஷ் வர்மா, சிரித்தபடியே வில்லத்தனத்தின் உச்சத்தைத் தொட்டிருக்கிறார். இவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்கள் தேவையான கோபத்தைப் பார்வையாளர்களிடமிருந்து சம்பாதிக்கிறது.
இவருக்குத் துணையாக வரும் பின்னு பப்புவின் நடிப்பிலும் குறையேதும் இல்லை.
நடிகர் ஃபர்ஹான் பாசிலுக்கு நடிப்பில் பெரிய அளவில் வேலையில்லை. சங்கீத் ப்ரதாப், இயக்குநர் பாரதிராஜா, நடிகர் இளவரசு ஆகியோரின் கேமியோ கதாபாத்திரங்களும் மனதில் நிற்கின்றன.
மலை, காடு எனப் புகுந்து புகுந்து படம்பிடித்து, கேரளத்தின் நிலப்பரப்பை நம் கண்முன் நிறுத்துகிறார் ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார்.
முக்கியமாக நிலவியல் காட்சிகளையும், மழை பொழியும் காட்சிகளையும் படம்பிடித்த விதம் கண்களுக்கு அடிப்பொலியான அனுபவம் சேட்டா!
படத்தின் நீளம் சற்று அதிகமாக இருந்தாலும், அயர்ச்சி ஏற்படாதவாறு, படத்தொகுப்பாளர்கள் நிசாத் யூசஃப் மற்றும் ஷஃபீக், காட்சிகளை நேர்த்தியாக அடுக்கியிருக்கின்றனர்.

பீல்-குட், எமோஷனல், ஆக்ஷன் என அனைத்துப் பகுதிகளிலும் களமிறங்கி பெரும் உழைப்பைக் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய்.
குறிப்பாக, சண்டைக் காட்சிகளில் லாலேட்டனின் மாஸை ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை மேலும் கூட்டுகிறது.
‘நடிகர்’ மோகன்லாலுக்கு ஆரவாரமில்லாமல் சண்டைக் காட்சிகள் அமைத்தது குட் ஒன்!
மெட்ராஸ் பின்னணி, அங்குச் சண்முகத்துக்கு ஏற்பட்ட நிகழ்வுகள் எனப் பின்கதையை, சில அழுத்தமான காட்சிகளிலேயே பதிவு செய்த விதம் ரசிக்க வைக்கிறது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு, மோகன்லாலின் நக்கல் தொனியுடன் கூடிய நகைச்சுவை எலமெண்ட்டை இயக்குநர் தருண் மூர்த்தி திரையில் கொண்டு வந்திருக்கிறார்.
அதேநேரம், ஃபேன் பாயாக மோகன்லாலை ரசித்து படமாக்கியது காட்சிகளில் தெரிகிறது.

படம் நிதானமாகத் தொடங்கினாலும், காட்சிகள் நகர நகரத் தேவையான வேகத்தை எட்டுகிறது.
காட்சிகளை வீணடிக்காமல் சின்ன சின்ன எலமெண்டுகளை கொண்டு ஒன்றோடு ஒன்றைத் தொடர்புப்படுத்தி எழுதியிருக்கிறார்கள் திரைக்கதையாசிரியர்கள் கே.ஆர். சுனில் மற்றும் தருண் மூர்த்தி. ஆனால், இறுதியில் ரிவெஞ்ச் டிராமாவாக கதை மாறுவது மட்டும் சின்ன ஏமாற்றம்.
திருப்புமுனையை ஏற்படுத்தும் காட்சிகள் பற்றிய ஊகத்தை முதலிலேயே நம்மிடையே கொடுத்த முயற்சி, முழுமையாக நம்மைக் காட்சிக்குள் மூழ்கடிக்கிறது.
குறிப்பாக, எதிர்பாராத திருப்பமாக வரும் நிலச்சரிவு காட்சிகள் பீக் ரைட்டிங் சாரே!
காவல் துறையினர் அதிகார பலத்தைத் தங்களுடைய சுய வேலைகளுக்காகப் பயன்படுத்தும் கதைகளை இந்த ‘துடரும்’ அழுத்தமாகப் பேசியிருக்கிறது.

அதைச் சமாளிக்க முடியாமல் தடுமாறிப் போராடும் சாமானியனின் கதையையும் படத்தில் பதிவு செய்ததற்காக ஹாண்ட் – ஷேக் கொடுக்கலாம்!
இரண்டாம் பாதியில் தேவையைத் தாண்டி நீளும் சண்டைக் காட்சிகளைச் சற்று குறைத்திருக்கலாம். அதே சமயம் ஆணவக் கொலையை விவரிக்கும் காட்சிகளை மேம்போக்காகத் தொட்டுச் செல்லாமல் இன்னும்கூட ஆழம் காட்சிப்படுத்தியிருக்கலாம்.
ஆணவக் கொலையைப் பற்றிய கதையை இப்படியான பரபரப்பு மிகுந்த களத்தில் சுவாரஸ்யமாகச் சொல்லி, ரசிக்க வைத்திருக்கிறது ‘துடரும்’ திரைப்படம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…