• April 25, 2025
  • NewsEditor
  • 0

‘நீரஜ் அறிக்கை!’

பஹல்காம் தாக்குதலை முன்வைத்து, ‘என்னுடைய தேசப்பற்றை கேள்விக்குள்ளாக்குவது வேதனையாக இருக்கிறது.’ என நீரஜ் சோப்ரா நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Neeraj Chopra

‘பாகிஸ்தான் வீரருக்கு அழைப்பு!’

நீரஜ் சோப்ரா இந்தியா சார்பில் ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதலில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றவர். சமீபத்தில், பெங்களூருவில் நடக்கவிருக்கும் NC Classic Javelin Event என்கிற தொடரில் பாகிஸ்தான் வீரரான அர்ஷத் நதீமை கலந்துகொள்ள சொல்லி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில்தான் பஹல்காம் தீவிரவாத தாக்குதலும் நடந்திருந்தது. இதனைத் தொடர்ந்து சமூகவலைதளங்களை நீரஜ் சோப்ரா மீது கடும் விமர்சனங்கள் எழ தொடங்கியது. ஒரு பாகிஸ்தான் வீரரை எப்படி இவர் அழைக்கலாம் என கடுமையாக நீரஜ் சோப்ரா மீது இணைய தாக்குதலை தொடுத்து வந்தனர். இந்நிலையில், நீரஜ் சோப்ரா இதற்கு விளக்கம் கொடுத்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

Pakistan Athlete Arshad Nadeem
Pakistan Athlete Arshad Nadeem

‘நீரஜ் சோப்ரா வேதனை!’

அதில் நீரஜ் சோப்ரா குறிப்பிட்டிருப்பதாவது, ‘அர்ஷத் நதீமை NC Classic Javelin தொடருக்காக அழைத்ததை தொடர்ந்து கடும் வெறுப்பை பரப்பி வருகின்றனர். என்னுடைய குடும்பத்தையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. அந்த விவகாரத்தில் ஒரு தடகள வீரர் இன்னொரு தடகள வீரருக்கு கொடுத்த அழைப்பு மட்டுமே அது. அதைத் தாண்டி அதில் எதுவும் இல்லை.

இந்தியாவில் நடக்கும் ஒரு தொடரை உலகளவில் சிறந்த தொடராக மாற்றுவதற்காகதான் பல்வேறு வீரர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. திங்கள் கிழமை அழைப்பு விடுக்கப்பட்டது. இரண்டு நாட்கள் கழித்துதான் பஹல்காம் தாக்குதல் நடக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக நடந்து வரும் விஷயங்களுக்குப் பிறகு அர்ஷத் நதீம் இந்தத் தொடரில் கலந்துகொள்வாரா என்கிற கேள்விக்கே இடம் இல்லை.

Neeraj Chopra
Neeraj Chopra

எனக்கு தேசத்தின் நலன்தான் முதன்மையானது. பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்காக இறைவனை பிரார்த்திக்கிறேன். பஹல்காமில் நடந்தவை ஒட்டுமொத்த தேசத்தை போலவே என்னையும் உலுக்கியது. என்னையும் ஆத்திரமடைய வைத்தது. இந்தத் தாக்குதலுக்கு இந்தியா கொடுக்கப்போகும் பதிலடி நம்முடைய தேசத்தின் வலிமையை பறைசாற்றுவதாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்.

பல ஆண்டுகளாக இந்த தேசத்தை பெருமிதத்தோடு பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறேன். என்னுடைய தேசப்பற்றை கேள்வி கேட்பது வேதனையாக இருக்கிறது. என்னையும் என் குடும்பத்தையும் காரணமே இல்லாமல் தாக்குபவர்களுக்கு விளக்கம் சொல்ல வேண்டியிருப்பது மனதை வலிக்க செய்கிறது. குறுகிய காலத்தில் தங்களின் கருத்துகளை மாற்றி மாற்றி பேசுபவர்களை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது.

கடந்த காலங்களில் வெகுளியாக என் அம்மா பேசியவற்றை பலரும் கொண்டாடினார்கள். இப்போது அதை வைத்தே அவர் மீது வெறுப்பையும் பரப்புகிறார்கள்.’ என வேதனையோடு கூறியிருக்கிறார்.

நீரஜ் சோப்ராவும் அர்ஷத் நதீமும் நண்பர்கள். நீரஜின் அம்மா அர்ஷத்தும் தன்னுடைய மகனை போன்றவர்தான் நெகிழ்ச்சியாக ஒரு முறை பேசியிருந்தார். அதைத்தான் நீரஜ் சோப்ரா குறிப்பிடுகிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *