• April 25, 2025
  • NewsEditor
  • 0

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் “எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் மறு வடிவம் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க திண்ணை பிரசாரம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கையில் எடப்பாடியார் பேசும்போது, நீட் தேர்வை ரத்து செய்தால்தான் பாஜக கூட்டணியில் அதிமுக தொடரும், இல்லையென்றால் விலகிவிடுவோம் என்று சொல்ல தகுதி இருக்கிறதா என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதன் மூலம் மகத்தான வெற்றிக் கூட்டணியை அமைத்த எடப்பாடியாரின் வியூகத்தைக் கண்டு முதலமைச்சருக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.

ஆர்.பி.உதயகுமார்

மக்களுக்கு சில வரலாற்றை நினைவூட்ட கடமைப்பட்டுள்ளோம், 1977 ஆம் ஆண்டு அன்றைய பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாயை சந்தித்த கருணாநிதி, இந்திரா காந்தி தன் மீது போடப்பட்ட சர்க்காரியா வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தபோது, கூட்டணி வேறு, வழக்கு வேறு, நீதிமன்றத்தில் அதை சரி செய்து கொள்ளுங்கள் என்று கூறியதாக அன்றைக்கு செய்திகள் வெளி வந்தது, இதை ஸ்டாலின் மறந்தாரா? அன்றைக்கு இந்த நிபந்தனை வைக்கத்தான் ஜனதா கட்சியுடன் திமுக கூட்டணி வைத்ததா?

எமர்ஜென்சி காலத்தில் சிறையில் இருந்த காயம் ஆறாத நிலையில் 1980-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் எந்த நிபந்தனையுடன் திமுக கூட்டணி வைத்தது? அன்றைக்கு மெஜாரிட்டி பலத்துடன், மக்கள் செல்வாக்குடன் இருந்த எம்ஜிஆர் ஆட்சியை கலைக்கும் நிபந்தனையுடந்தான் கருணாநிதி கூட்டணி வைத்தாரா?

ஆர்.பி.உதயகுமார்

பண்டாரம், பரதேசி என்று பாஜகவை விமர்சித்துவிட்டு பின்பு எந்த நிபந்தனைக்காக கூட்டணி வைத்தார்? 2004 -ல் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து பத்தாண்டு காலம் ஆட்சி, அதிகாரத்தை வைத்துக்கொண்ட திமுக கச்சத்தீவை மீட்டதா? முல்லைப் பெரியாறு, காவிரி போன்ற பிரச்னைகளை முடிவுக்கு கொண்டு வந்ததா?

இன்றைய சட்டத்துறை அமைச்சரான ரகுபதியை அன்றைக்கு மத்திய உள்துறை இணை அமைச்சராக்க கருணாநிதி வைத்த கோரிக்கை ஏற்கபடாதபோது ஆதரவு கடிதத்தை நிறுத்தி வைத்தார். பின்பு ரகுபதி உள்துறை இணைஅமைச்சர் என்று அறிவித்தவுடன்தான் தனது ஆதரவு கடிதத்தை ஜனாதிபதிக்கு கொடுத்தார். இப்படி திமுக, பதவிகளுக்காக நிபந்தனை வைத்ததே தவிர மக்களுக்காக எப்பொழுதும் கூட்டணியில் நிபந்தனை விதித்தது இல்லை.

ஸ்டாலின்

இன்றைக்கு ஸ்டாலின், அவதார புருஷன் போல, சத்தியவான் போல சட்டசபையில் கேள்வி எழுப்பி, திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தால் புனிதம், அதிமுக வைத்தால் பாவம் என்று பேசுகிறார். மக்கள் போடும் கணக்கே நியாய கணக்கு, அதை புரிந்து கொண்டு எடப்பாடியார் போட்டது தேர்தல் வெற்றி கணக்கு, திமுக போடுவது வெறும் மனக்கணக்கு.

சட்டசபையில் முதலமைச்சர் பேசியதை பார்க்கும்போது அவருக்கு வந்தால் ரத்தம், நமக்கு வந்த தக்காளி சட்னி என்று சொல்லுவதைப்போல் உள்ளது. இதை நாம் நகைச்சுவையாக கடந்து போக வேண்டும்.

திமுகவின் பேச்சுக்கு மக்கள் முக்கியத்துவம் தரமாட்டார்கள், இதுபோன்று உண்மையை திண்ணைப் பிரசாரம் மூலம் மக்களுக்கு உரக்க செல்ல வேண்டும்” என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *