
சென்னை: “மிரட்டல் அரசியல் எல்லாம் பாஜகவின் டிஎன்ஏ-வில்தான் ஊறிக் கிடக்கிறது. மிரட்டுவது உங்கள் டிஎன்ஏவில் இருக்கலாம், துணிந்து மாநில உரிமைகளுக்காக எதிர்த்து நிற்பதுதான் எங்கள் டிஎன்ஏ-வில் இருக்கிறது” என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என அரசு பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் மிரட்டப்பட்டுள்ளனர், எனச் சொல்லியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இதற்கு முன்பு ஆளுநர் ரவி கூட்டிய துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்ற துணைவேந்தர்கள் இப்போது ஏன் பங்கேற்கவில்லை? இந்தக் கேள்விக்குப் பட்டம் படித்து மேதாவியாக இருக்க வேண்டியதில்லை.