
புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவு அளிப்பதாக, அனைத்துக் கட்சி கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் உறுதிஅளித்தனர். தீவிரவாத முகாம்களை அழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டினர் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் -இ-தொய்பா ஆதரவு அமைப்பான டிஆர்எப் பொறுப்பேற்றது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் 2 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.