
இஸ்லாமாபாத்: காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு பல்வேறு தடைகளை இந்தியா விதித்துள்ள நிலையில், பதில் நடவடிக்கையாக இந்தியாவுடன் போக்குவரத்து, வர்த்தகம் நிறுத்தம் உள்ளிட்ட அறிவிப்புகளை பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தானை எச்சரிக்கும் விதமாக, சிந்துநதிநீர் ஒப்பந்தம் தற்காலிக நிறுத்தம் உட்பட பல்வேறு தடைகளை இந்தியா விதித்துள்ளது.