
‘இளம் வீரர்களுக்கு எதிராக ப்ளெம்மிங்!’
சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெம்மிங் மைக்கை பிடித்தாலே இளம் வீரர்களை விமர்சிக்கும் தொனியில் மட்டுமே பேசுகிறார். இளம் வீரர்கள் சார்ந்த அவருடைய பார்வையை வெளிப்படுத்த அத்தனை சுதந்திரமும் இருக்கிறது.
ஆனால், அவரின் கருத்து இந்த காலத்திய கிரிக்கெட்டுக்கு ஏற்ற வகையில் நவீனமாக இருக்கிறதா என்பதுதான் இப்போதைய கேள்வி. மேலும், ப்ளெம்மிங் அவர் பேசிய விஷயங்களிலிலிருந்தே முரண்பட்டு மாறி மாறி பேசுகிறார் என்பதுதான் இதில் இன்னமும் கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.
‘தவறான தகவலோடு ப்ளெம்மிங்!’
இன்றைய போட்டிக்கு முன்பாக நேற்று சேப்பாக்கத்தில் பத்திரிகையளர்களைச் சந்தித்திருந்தார். அப்போது இளம் வீரர்களைப் பற்றி பேசுகையில், ‘இளம் வீரர்களைப் பற்றி கேட்கிறீர்கள். நாங்கள் முதலில் இளம் வீரர்களை கண்டடைய வேண்டும். ஆனால், நடப்பு சீசனின் அதிக ரன்கள் எடுத்த டாப் 20 வீரர்களைப் பாருங்கள். அதில் எத்தனை இளம் வீரர்கள் இருக்கிறார்கள்? அதிகபட்சம் ஒன்றிரண்டு பேர் மட்டுமே இருப்பார்கள்.

நல்ல திறமையான வீரர்களை எனக்கும் பிடிக்கும். கடந்த 2-3 ஆண்டுகளில் பயமில்லாமல் ஆடும் வீரர்களுக்கான ஆட்டமாக போட்டி மாறியிருப்பதையும் அறிகிறேன். ஆனால், நாங்கள் அதிகமாக அனுபவ வீரர்களைத்தான் நம்பியிருக்கிறோம். இளம் வீரர்களால் ஒரே பாணியில்தான் ஆட முடிகிறது. ஆனால், அனுபவ வீரர்களால் போட்டியின் சூழலை புரிந்து பல வழிகளில் ஆட முடியும்.
திறமையான இளம் வீரர்கள் அனுபவ வீரர்கள் இரண்டு தரப்புக்கும் இடையே ஒரு சமநிலை இருக்க வேண்டும் என நினைக்கிறேன். கடினமான சூழல்களில் சிறப்பாக ஆடக்கூடிய வீரர்கள்தான் எனக்குத் தேவை. அப்படிப்பட்ட வீரர்களின் வயதைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆயுஷ் மாத்ரே ஆடிய விதம் எங்களுக்கு வியப்பாகத்தான் இருந்தது.’ என்றார். இதில் நிறைய முரண்பாடுகள் இருக்கிறது.

‘டாப் 20 உண்மை!’
முதலில் அதிக ரன் எடுத்த டாப் 20 வீரர்களில் ஒன்றிரண்டு பேர்தான் இளம் வீரர்கள் என்கிறார். பட்டியலை எடுத்துப் பார்த்தால் அதில் உண்மையில்லை என்றே தெரிகிறது. இப்போது வரையுள்ள டாப் 20 இல் 7 வீரர்களின் வயது 25 அல்லது அதற்கும் குறைவாக இருக்கிறது.
அதாவது, டாப் 20 இல் 35 சதவீதம் பேர் இளம் வீரர்கள்தான். சாய் சுதர்சன், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், கில், பிரியான்ஷ் ஆர்யா, அபிஷேக் சர்மா, ரியான் பராக், திலக் வர்மா என ஒரு பெரிய பட்டாளமே டாப் 20 -க்குள் இருக்கிறது.
கில் இந்தியாவுக்காக மூன்று பார்மட்களிலும் ஆடுகிறார். ஆனால் அவரும் இளம் வீரர்தான். அவரைப் போன்ற அனுபவமிக்க அதேநேரத்தில் இளமையாகவும் இருக்கக்கூடிய வீரர் கூட சென்னை அணியில் இல்லையே. ரியான் பராக்கை ராஜஸ்தான் வளர்த்தெடுத்தது. திலக் வர்மா மும்பையின் கண்டுபிடிப்பு.

இப்படி சென்னை எந்த வீரரை தேடி கண்டடைந்திருக்கிறது? வேறு வழியே இல்லாமல் ருத்துராஜூக்கு வாய்ப்பை கொடுத்து வளர்த்தெடுத்தார்கள். இப்போது ஷேக் ரஷீத்துக்கும் ஆயுஷ் மாத்ரேவுக்கும் வாய்ப்பை வழங்கியிருக்கிறார்கள். ஆனாலும் என்ன பிரயோஜனம்? வெளியில் வந்து இளம் வீரர்களுக்கு எதிராக முழு வன்மத்தையும் கொப்பளித்துக் கொண்டிருக்கிறீர்களே.
அதேமாதிரி, இளம் வீரர்கள் ஒரே பாணியில்தான் ஆடுவார்கள். அனுபவ வீரர்கள்தான் பல விதமாக ஆடுவர் என்பதையும் ஏற்கவே முடியாது. திறமையான இளம் வீரரை கண்டடைந்து அவருக்கான வாய்ப்பை கொடுத்து தவறுகளை திருத்தி பல பரிணாமங்களில் ஆடும் வீரராக மாற்ற வேண்டியது ஒரு அணியின் கடமை.

மேலும், வாய்ப்புகள்தான் ஒரு இளம் வீரரை அனுபவசாலியாக மாற்றும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பே கொடுக்காமல் எப்படி அனுபவசாலிகளை உற்பத்தி செய்வீர்கள்?
‘மாற்றி மாற்றி பேசும் ப்ளெம்மிங்!’
‘இளம் வீரர்கள் முதல் பந்திலிருந்தே சிக்சர்கள் அடிக்க நினைக்கிறார்கள். சிக்சர்கள் அடிப்பது மட்டுமே கிரிக்கெட் இல்லை. கிரிக்கெட் பேஸ்பாலை போல மாறிக்கொண்டிருக்கிறது. இந்தப் போக்கு எனக்கு கவலையளிக்கிறது.’ என ப்ளெம்மிங் பேசியிருந்தார்.

முழுக்க முழுக்க முரண்பாடுகளின் மூட்டையாக மாற்றி மாற்றி பேசுகிறார் ப்ளெம்மிங். இதே ப்ளெம்மிங்தான் கடந்த 2 சீசன்களாக சிவம் துபேக்கு அத்தனை சப்போர்ட்டாக பேசிக்கொண்டிருந்தார். சென்னை அணியின் கலாசாரமே மாறிக்கொண்டிருக்கிறது.
நாங்கள் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை அதிரடியாக ஆட நினைக்கிறோம். மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களை அட்டாக் செய்து சிக்சர்கள் அடிக்கத்தான் சிவம் துபேவை அழைத்து வந்தோம்.’ என ப்ளெம்மிங் அழகாக பேசியிருக்கிறார். ஒரு பத்திரிகையாளராக ப்ளெம்மிங் அப்படி பேசியவற்றை நேரில் கேட்டிருக்கிறேன். இளம் வீரர்கள் ஆடுவதை பேஸ்பால் ஆட்டம் எனும் விமர்சிக்கிறார் ப்ளெம்மிங்.
‘சிவம் துபே மோசம் இல்லையா?’
அப்படி பார்த்தால் வேறு யாரை விடவும் அந்த பேஸ்பால் ஆட்டத்தை அதிகமாக ஆடுவது துபேதான். அவரிடம் டெக்னிக் என்று எதுவும் இருக்காது. விறகுக்கட்டையை போல பேட்டை பிடித்து ஓங்கி ஓங்கி அடிக்க மட்டும்தான் தெரியும். அப்படி ஒரு வீரரை அணியில் வைத்துக் கொண்டு, கடந்த காலங்களில் அவருக்கு ஆதரவாக வரிந்து பேசிவிட்டு இப்போது இளம் வீரர்களை குற்றம்சாட்டுவதில் அறமே இல்லை.
இளம் வீரர்கள் ஆடும்விதத்தில் கிரிக்கெட்டுக்கு அபாயம் எனில், 43 வயதில் வணிகத்துக்காக ஒரு வீரரை அணியில் வைத்திருப்பது மட்டும் கிரிக்கெட்டுக்கு அபாயம் இல்லையா?

நவீன கிரிக்கெட்டின் போக்குக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளாமல், தாங்கள் செய்வது மட்டும்தான் சரி என நினைக்கும் பாழ்பட்ட எண்ணத்தின் வெளிப்பாடுதான் ப்ளெம்மிங்கின் பேச்சுகள். இந்த அணியில் வீரர்களிடம் மட்டும் இல்லை. பயிற்சியாளரிடமும்தான் பிரச்னை இருக்கிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
