
பழைமையும் பெருமையும் வாய்ந்தது காஞ்சி சங்கரமடம். தற்போது 70-வது பீடாதிபதியாக விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருந்துவரும் சூழ்நிலையில் இளைய பீடாதிபதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மகாபெரியவர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் வாழும் காலத்திலேயே ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு மடத்தினை நிர்வகித்துவந்தனர். ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஸித்தியான பிறகு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மட்டுமே பொறுப்பில் இருந்துவந்தார்.
இந்த சூழ்நிலையில் மடத்தின் அடுத்த பீடாதிபதி யார் என்கிற கேள்வி பக்தர்களிடையே நிலவியது. அதைத் தீர்க்கும்விதமாக இன்று காஞ்சி சங்கர மடத்தின் சார்பாக பத்திரிகை செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஆந்திர மாநிலம், அன்னவரம் கிராமத்தைச் சேர்ந்த பிரம்மஶ்ரீ கணேஷ சர்மா இளைய மடாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்கிற செய்தி வெளியாகி உள்ளது.
பிரம்மஶ்ரீ கணேஷ சர்மா, ரிக் யஜூர் வேதங்களிலும் உபநிஷத்துகளிலும் தேர்ச்சி பெற்றவர். தற்போது காஞ்சிபுரத்தில் தங்கியிருந்து சாஸ்திரங்கள் குறித்துப் பயின்றுவருகிறார். இவருக்கு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஏப்ரல் 30 அட்சய திருதியை நாளில் சந்நியாச தீட்சை வழங்குவார். இந்த வைபவம் காஞ்சி சங்கரமடத்தில் நடைபெறும். இந்தச் செய்தி காஞ்சி சங்கரமட பக்தர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.