
ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் சம்பவத்தில் தொடர்புள்ள இரண்டு தீவிரவாதிகளின் வீடு இடிந்து விழுந்து தரைமட்டம் ஆகியுள்ளது.
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த உள்ளூர் தீவிரவாதிகள் அடில் தோகர் மற்றும் ஆசிப் ஷேக். இவர்கள் இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மற்றும் அவந்திபோரா பகுதிகளில் இவர்களின் வீடுகள் உள்ளது.
நேற்று இரவு பாதுகாப்பு படை வீரர்கள் இருவரின் வீடுகளிலும் தீவிர சோதனையை மேற்கொண்டனர். அப்போது இருவரின் வீடுகளும் இடிந்து தரைமட்டமாகி உள்ளது.
இதுக்குறித்து அதிகாரிகள் பேசுகையில், “நேற்று பாதுகாப்பு படையினர் அடில் தோகர் மற்றும் ஆசிப் ஷேக் வீடுகளில் சோதனையிட்டனர். அப்போது அவர்களது வீட்டில் சேகரித்து வைத்திருந்து வெடிப்பொருள்கள் வெடித்து இரு வீடுகளும் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது” என்று கூறியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கை சேர்ந்த அடில் தோகர் இந்தத் தாக்குதலில் முக்கிய பங்காற்றியுள்ளார் என்று தெரிய வந்துள்ளது.
உளவுத்துறையின் தகவலின் படி, அடில் தோகர் 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்று வந்துள்ளார். அந்தப் பயணத்தின் போது, இவர் தீவிரவாதப் பயிற்சி பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தின் குற்றவாளிகளாக தேடப்படும் அடில் தோகர், அலி பாய், ஹசிம் முசா ஆகியோரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் கொடுக்கப்படும் என்று அனந்த்நாக் போலிசார் அறிவித்துள்ளனர்.