
பாலிவுட் படங்கள் அதிக அளவில் காஷ்மீரில் படமாக்கப்படுகிறது. ஆனால் நடிகர் ஷாருக்கான் மட்டும் நீண்டகாலமாக காஷ்மீர் செல்வதை தவிர்த்து வருகிறார். அதோடு அவரது படமும் காஷ்மீரில் படமாக்கப்படுவதில்லை.
ஷாருக்கானின் பாட்டி காஷ்மீரைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும் ஷாருக்கான் காஷ்மீரை புறக்கணிப்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இது குறித்து ஷாருக்கானிடம் ஒரு முறை நடிகர் அமிதாப்பச்சன் கேட்டபோது அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார். அவர் தனது பதிலில் எனது தந்தையின் தாயார் காஷ்மீரைச் சேர்ந்தவர். ஒரு முறை எனது தந்தை என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது, நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீ இஸ்தான்புல், ரோம், காஷ்மீருக்கு ஒரு முறை சென்றுவரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ரோம், இஸ்தான்புல் ஆகிய இரண்டு இடங்களுக்கும் நான் இல்லாமல் நீ செல்லலாம். ஆனால் காஷ்மீருக்கு நான் இல்லாமல் போகாதே என்று சொன்னார்.
எனது தந்தை இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும் அவர் சொன்ன வார்த்தை இன்னும் எனது மனதில் இருந்து கொண்டே இருக்கிறது.
அவர் விரைவில் காலமாகிவிட்டார். நான் உலகம் முழுக்க சென்று இருக்கிறேன். ஆனால் காஷ்மீர் மட்டும் போகவில்லை. காஷ்மீர் செல்ல எனது நண்பர்கள் பல முறை அழைத்தும், அதற்கான வாய்ப்புகள் பல முறை வந்த பிறகும் நான் காஷ்மீர் செல்லவில்லை.

எனது குடும்பத்தினர் சென்று வந்திருக்கின்றனர். ஆனால் நான் செல்லவில்லை. ஏனென்றால் நான் இல்லாமல் காஷ்மீருக்கு செல்லவேண்டாம் என்று எனது தந்தை என்னிடம் சொல்லி இருக்கிறார்” என்று உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.
காஷ்மீரில் சமீபத்தில் நடந்த தாக்குதலுக்கு ஷாருக்கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மும்பையில் ஷாருக்கானின் மன்னத் பங்களாவை புதுப்பிக்கும் பணிகள் முழுவேகத்தில் தொடங்கி இருக்கிறது. பங்களா வலை மூலம் மூடப்பட்டு காட்சியளிக்கிறது. ஷாருக்கான் இப்போது அருகில் வேறு ஒரு வீட்டில் தனது குடும்பத்தோடு வாடகைக்கு இருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
