• April 25, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

“அந்த சில நிமிடங்கள்……”

பிரகாஷ் ஹரி போட்ஸ்வானா நாட்டில் வசிக்கும் என் நெருங்கிய நண்பர். அருமையான கானுயிர் புகைப்படக் கலைஞர்.

2023 டிசம்பரில் அவருடன் பேசிக் கொண்டிருக்கும்போது, என்னை போட்ஸ்வானா வருமாறு வருந்தி அழைத்தார். அவர் அழைப்பின் பெயரில் 2024 ஏப்ரல் இறுதியில் ஈஸ்டர் விடுமுறைக்கு போட்ஸ்வானா சென்றேன்.

போட்ஸ்வானாவிற்கு நேரடி ஃபிளைட் இல்லாதலால், தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் வழியே செல்ல நேர்ந்தது. ஜோகனஸ்பர்க்கில் ஒரு இரவு மிகவும் ரம்மியமாகக் கழிந்தது.

Botswana

அங்கு ஒரு இனிய சம்பவம். அந்த ஏர்போர்ட்டில் ஒரு ஆப்பிரிக்க இளைஞர், போவோர் வருவோரையெல்லாம், “PLEASE VISIT MY WONDERFUL OFFICE” என்று அன்புடன் அழைத்துக் கொண்டிருந்தார்.

என்னவென்று போய்ப் பார்த்தால், அது அவர் துப்புரவுத் தொழிலாளியாக வேலை பார்க்கும் கழிப்பறை. அவரைப் பொறுத்த வரையில் அதுதானே அவருக்கு அலுவலகம். கண்ணாடி போலப் பளபளவென்று வைத்திருந்தார்.

அது மட்டுமல்லாமல், அங்கிருந்து வெளியில் வரும் அனைவரிடமும் கஸ்டமர் ஃபீட்பேக் வேறு கேட்டுக்கொண்டிருந்தார்.

அவன் பேசிய விதத்தில் இருந்து, அவர் தன்னுடைய வேலையை எவ்வளவு தூரம் நேசிக்கிறார் என்பது புரிந்தது. அவருடைய அணுகுமுறையில் இருந்து இதை அவர் யார் சொல்லியும் செய்வது போலத் தெரியவில்லை.

Botswana
Botswana

அதேபோல், அனைவரும் அவருக்கு ஒன்று முதல் 10 டாலர் வரை சந்தோஷத்துடன் கொடுத்து விட்டுச் சென்றதையும் பார்த்தேன்.

கென்யா மக்களும் இதே போல்தான். என்ன வேலை செய்தாலும் , அதை ரசித்து, ருசித்து, ஆனால் ஸ்லோமோஷனில் செய்து முடிப்பார்கள்.

செய்யும் வேலை மிகவும் திருத்தமாக இருக்கும். அன்பளிப்பாக என்ன கொடுத்தாலும், சந்தோஷமாக முக மலர்ச்சியுடன் வாங்கிக் கொள்வார்கள்.

சரி … மேட்டருக்கு வருவோம். போட்ஸ்வானா இயற்கை எழில் கொஞ்சும் ஒரு அற்புதமான நாடு. எங்குத் திரும்பினாலும் பச்சை பசேலென்று மரங்களும், காடுகளும் கண்ணைப் பறிக்கின்றன.

அங்கெல்லாம் யாரும், தண்ணீருக்குள்ளோ, அல்லது குடத்துக்குள்ளோ நின்று கொண்டு யாகம் செய்வது போல் தெரியவில்லை.

உலக உருண்டை பொம்மையைச் சுற்றிக் கொண்டு அதில் தண்ணீர் ஊற்றி போட்ஸ்வானாவிற்கு (மட்டும்) மழை வர வேண்டுமென்றும் பிரார்த்திப்பதில்லை.

இன்னும் அவர்களுக்கு அந்த அட்வான்ஸ்ட் டெக்னாலஜி தெரியவில்லை என்று நினைக்கிறேன். ஆனால், மழை மட்டும் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. (சும்மா…தோணுச்சு சொன்னேன். கோவிச்சுக்காதீங்க.)

Botswana
Botswana

நான் சென்ற வனத்தின் பெயர் சோபே (Chobe). கென்யாவில் உள்ள வெட்ட வெளி காடுகள் போலன்றி, சோபே நிறைய மரங்களுடன் பேராண்மை படத்தில் வரும் காடு போல மிகவும் அழகாகவும், கண்ணுக்குக் குளுமையாகவும் உள்ளது.

இங்குள்ள சோபே ஆறு, போட்ஸ்வானாவையும், பக்கத்து நாடான நமீபியாவையும் பிரிக்கிறது. இந்த ஆற்றில் போட் சஃபாரி செல்லும்போது, இரண்டு நாட்டுப் பகுதிகளிலும் திரியும் விலங்குகளைப் பார்த்து ரசிப்பது ஒரு சுகமான அனுபவம்.

இரண்டு நாட்டுப் பகுதிகளிலும் ஏராளமான யானைகளும், நீர் யானைகளும், முதலைகளும், வாட்டர் பக் எனப்படும் மான்வகைகளும் வஞ்சகமில்லாமல் வளைய வருகின்றன.

நானும் பிரகாஷூம், காலையில் ஆற்றுக்குள் போட் சஃபாரி சென்றால் மாலையில் காட்டுக்குள் ஜீப் சஃபாரி என்று மாறி மாறி சென்றோம். மிகவும் அருமையான அனுபவம்.

அன்றும் வழக்கம்போல் அதிகாலை 5.30 மணி அளவில் பிரகாஷ்தான் முதலில் எழுந்து என் அறைக் கதவைத் தட்டி இன்று எங்கே போவோம் என்று கேட்டார்.

வழக்கம்போல் என் நாக்கில் சனி அமர்ந்து ‘போட் சஃபாரி’ என்று சொல்ல வைத்தது. கிளம்பினோம்.

Botswana elephant
Botswana elephant

கிளம்பி சிறிது நேரத்தில், இந்தப் படத்தில் உள்ள யானையைப் பார்த்தோம். தன் உடல் சூட்டைத் தணிக்க, தண்ணீரையும், சேற்றையும் வாரி இறைத்து ஜலக்ரீடை செய்து கொண்டு இருந்தது.

உடனே போட்டை ஓட்டி வந்தவரிடம் கரையில் ஒதுங்கச் சொன்னோம். அவரும் மிகவும் சேஃபான ஒரு தூரத்தில்தான் நிப்பாட்டினார்.

நான் பொதுவாக எந்தக் காட்டிற்குச் சென்றாலும், அந்தக் காட்டின் விதி முறைகளை மீற மாட்டேன். எந்தக் காரணத்தைக் கொண்டும். வண்டியையோ, போட்டையோ ஓட்டி வருபவர்களை என் வழியில் வரச் சொல்லி கட்டாயப் படுத்த மாட்டேன். காரணம் அவர்களுக்குத்தான் தெரியும் அந்தக் காட்டின் நிலவரம்.

எனவே, அவன் எங்கு நிப்பாட்டினாலும் சரி, அங்கிருந்தே படம் எடுப்போம் என்று முடிவு செய்தோம். எங்கள் அதிர்ஷ்டத்திற்கு மிகவும் அழகான பொசிஷன் கிடைத்தது.

Botswana elephant
Botswana elephant

சிறிது நேரம் கழித்து அது மெதுவாக எழுந்து நாங்கள் இருக்கும் திசையில் நடந்து வர ஆரம்பித்தது. எனக்கு என்ன தோன்றியது எனத் தெரியவில்லை.

என் கேமராவை கீழே வைத்து விட்டு, என்னுடைய ஐ ஃபோனில் வீடியோ எடுக்க ஆரம்பித்து விட்டேன். மிகச் சரியாக அதே நேரத்தில் என் நண்பர் பிரகாஷ், தன்னுடைய கேமாராவில் வைட் ஆங்கிள் லென்ஸை மாற்றி, அதன் வருகையைத் தொடர்ந்து எடுக்க ஆரம்பித்தார்.

நாங்கள் இருவரும் போட்டின் விளிம்பில் நின்று கொண்டு தலைவர் ஆடி ஆடி வருவதைப் படமும் வீடியோவும் எடுத்துக் கொண்டிருந்தோம்.

என்னுடைய முழுக் கவனமும் ஃபோனின் ஸ்க்ரீனிலும், பிரகாஷின் கவனம் முழுவதும் கேமராவின் வ்யூ ஃபைண்டரிலுமே இருக்க, தலைவர் எங்கள் அருகில் வந்து நிற்பதை நாங்கள் இருவருமே கவனிக்கவில்லை.

Botswana elephant
Botswana elephant

எங்கள் போட் டிரைவர் மிகவும் மெலிதான குரலில் சிட் டௌன் சிட் டௌன் என்று எச்சரிக்க, எங்கள் இருவரின் காதுகளிலும் அது கொஞ்சம் கூட விழவில்லை.

அப்போது நேரம் காலம் புரியாமல் நான், “நான் வீடியோவை ஸ்லோ மோஷனில் எடுத்துக் கொண்டிருக்கிறேன்“ என்றேன். உடனே பிரகாஷ், “எனக்கு வைட் ஆங்கிள் ஷாட்ஸ் நன்றாக வந்திருக்கிறது” என்றார் ரசித்து ருசித்து.

இனிமேலும் பொறுக்க முடியாது என்று எங்கள் டிரைவர், “ சிட் டௌன்” என்று கத்த, அப்போதுதான் நாங்கள் இருவருமே நிமிர்ந்து பார்த்தோம்.

அந்த யானை மிகச் சரியாக எங்களுக்கு இரண்டு அடி தூரத்தில் எங்களை முறைத்தவாறே நின்று கொண்டிருந்தது.

ஒரு நொடியில் எங்கள் இருவரின் சப்த நாடியும் நடுங்கி விட்டது. என் கையில் இருந்து ஃபோனும், பிரகாஷ் கையில் இருந்து கேமாராவும் எங்கள் அனுமதியில்லாமலேயே கீழே விழ, டமாலென்று கீழே உட்கார்ந்தோம்.

என் மனைவி செய்த புண்ணியமோ, இல்லை பிரகாஷ் செய்த புண்ணியமோ, எங்களுக்கும், தலைவருக்கும் இடையே போட்டில் கட்டப்பட்டிருந்த ஒரு கயிறு ஒன்று இருந்தது. அதை எலெக்ட்ரிக் ஃபென்ஸ் என்று நினைத்திருக்க வேண்டும்.

எனவே, தும்பிக்கையை போட்டின் உள்ளே நுழைத்து எங்கள் இருவரையும் தூக்கி அடிப்போமா வேண்டாமா என்று பயங்கர குழப்பத்தில் தவித்தது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.

Botswana elephant
Botswana elephant

தும்பிக்கையை உள்ளே லேசாக கொண்டு வருவதும், வெளியே கொண்டு செல்வதுமாக அதற்குள் நடந்த போராட்டம். எங்கள் இருவருக்கும் வாழ்வா சாவா என்ற போராட்டமாக அமைந்து விட்டது.

தலைவர் அங்கே நின்று கொண்டிருந்த அந்த சில நிமிடங்கள், நான் நரகத்தின் வாசலிலும், பிரகாஷ் சொர்க்கத்தின் வாசலிலும் நின்று கொண்டு “மே ஐ கம் இன்?” என்று கேட்டுக் கொண்டிருந்தோம்.

அங்கிருந்து, “நோ… நாட் யெட்” என்ற உத்தரவு வந்திருக்க வேண்டும். உடனே நம்ம தலைவர் மெதுவாக ஆடி அசைந்து எங்களை விட்ட நகர ஆரம்பித்தார்.

அவ்வளவு நேரம் நாங்கள் இருவரும் மூச்சே விடாமல் இருந்தது அப்போதுதான் ஞாபகத்திற்கு வந்தது. மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க எங்கள் இருவருக்கும் அப்போதுதான் உயிரே வந்தது.

எனக்கு, இதற்கு முன்னால் இரண்டு முறை யானையும், ஒரு முறை தண்ணீருக்குள் நீர் யானையும் துரத்தி இருந்தாலும், இவ்வளவு க்ளோஸ் என்கவுண்டர் இதுவே முதல் முறை.

எங்கள் டிரைவர், “இதுவரை சோபேயில் யானை யாரையுமே தாக்கியதில்லை….” என்று சொல்லி விட்டு அந்த யானையையே வெறித்துப் பார்த்தார்.

அந்தப் பார்வையின் அர்த்தம்….

”அந்த யானை மட்டும் உங்களைத் துவசம் செய்திருந்தால், நம்ம சங்கர் சிமெண்ட் விளம்பரத்தில் வருவது போல, நீங்கதான் ஃபர்ஸ்ட்“

வெ.பாலமுரளி.

My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா’ கட்டுரை

டூர்

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.

இந்த மாதத்திற்கான தலைப்பு – `சுற்றுலா’. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.

வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.   

பரிசுத்தொகை விவரம்:

  • முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)

  • இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)

  • நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)

நினைவில் கொள்க: 

  • நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025

  • ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.

  • உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்

  • விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்

  • உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது. 

  • கட்டுரையின் தரத்தின்  அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *