
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில் ஒருவர் மட்டும் நேபாள நாட்டைச் சேர்ந்தவர். மற்ற அனைவரும் இந்தியாவின் 14 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இந்தத் தீவிரவாத தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று பாகிஸ்தான் கூறிவரும் அதேவேளையில், பாகிஸ்தானை நேரடியாக குற்றம்சாட்டாமலேயே அந்நாட்டின் மீது, `சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, விசாக்கள் ரத்து, இங்கிருக்கும் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் வெளியேற்ற உத்தரவு’ உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்திருக்கிறது.
இந்தியாவின் இத்தகைய செயலுக்கு எதிர்வினையாற்றியிருக்கும் பாகிஸ்தான் அரசு, சிந்து நதிநீரை நிறுத்துவது போர் நடவடிக்கை என்றும், சிம்லா ஒப்பந்தத்தை நாங்கள் ரத்து செய்வோம் என்றும் தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில், உலகத் தலைவர்கள், இந்திய சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில், நேற்று (ஏப்ரல் 24) பெங்களூரு vs ராஜஸ்தான் ஐ.பி.எல் போட்டிக்கு முன்னதாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஊடகத்தில் பேசிய இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், “தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைத்து குடும்பங்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவம் இந்தியர்களாகிய நம் அனைவரையும் பாதித்திருக்கிறது.

இதன் குற்றவாளிகள், அவர்களுக்கு ஆதரவளிக்கும் தீவிரவாதிகள், அவர்களை வழிநடத்துபவர்கள் ஆகிய அனைவரிடமும் ஒரு கேள்வி கேட்கிறேன்… இந்த சண்டையில் சாதித்தது என்ன? கடந்த 78 வருடங்களாக ஒரு மில்லி மீட்டர் இடம் கூட கைமாறப்படவில்லை. அடுத்த 78,000 ஆண்டுகளுக்கும் எதுவும் மாறப்போவதில்லை. அப்படியென்றால் நாம் ஏன் நிம்மதியாக வாழக்கூடாது? நம் நாட்டை ஏன் நம் நாட்டைப் பலப்படுத்தக் கூடாது? எனவே இதுதான் எனது வேண்டுகோள்” என்று கூறியிருக்கிறார்.