
கோடையில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துவது அம்மை நோய். அதுபற்றி விரிவாகப் பேசுகிறார் தொற்று நோய் சிறப்பு மருத்துவர் பி.செந்தூர் நம்பி.
”அம்மை நோய் தெய்வ குத்தத்தால் வருவது என்ற நம்பிக்கை இன்னமும் நம் சமூகத்தில் சிலரிடம் இருக்கிறது. அம்மை வந்தால் குளிக்கக் கூடாது, அசைவம் சாப்பிடக் கூடாது என எண்ணற்ற தவறான நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. உண்மையில் இது தெய்வ குத்தத்தால் ஏற்படுவது இல்லை… வைரஸ் கிருமியின் வரவால் ஏற்படுகிறது.
ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பெரியம்மை நோயால் மக்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்தனர். பெரியம்மைக்குத் தடுப்பூசி வந்த பிறகு அது ஒழிக்கப்பட்டுவிட்டது. தற்போது, இந்த வைரஸ் கிருமியை மிகவும் பாதுகாப்பாக ஒரு சில ஆய்வகங்களில் ஆராய்ச்சிக்காக வைத்துள்ளனர். தற்போது பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்துவது சிக்கன்பாக்ஸ் (Chickenpox) எனப்படும் சின்னம்மை. இது ஒரு தொற்றுநோய். யாருக்கு வேண்டுமானாலும் பரவலாம்.
அம்மை வந்தவர்களுக்கு ஏற்பட்ட புண்களை இன்னொருவர் தொடுவதன் மூலமும் வைரஸ் தொற்று ஏற்படலாம்.

சின்னம்மை வருவதற்கு காரணம் வெரிசெல்லா ஸோஸ்டர் (Varicella Zoster) என்கிற வைரஸ்தான். இது, காற்று மூலமாக, ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும். கோடைக்காலத்தில் இது பரவுவதற்கான சூழல் உள்ளதால், அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
பெரும்பாலும், குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும்தான் சின்னம்மை வருகிறது. 5 முதல் 10 நாள்கள் வரை உடலில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு இருமல், சளி, உமிழ்நீர், தும்மல் வழியாக இந்த வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அம்மை வந்தவர்களுக்கு ஏற்பட்ட புண்களை இன்னொருவர் தொடுவதன் மூலமும் வைரஸ் தொற்று ஏற்படலாம்.
வெரிசெல்லா ஸோஸ்டர் வைரஸ் உடலுக்குள் புகுந்த 1-3 வாரத்தில் தனது வேலையைக் காட்டும். ரத்தத்தில் வைரஸ் கலந்தவுடன்தான் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பொதுவாக, பலருக்கும் சுவாசம் மூலமாகத்தான் இந்த வைரஸ் முதலில் பரவுகிறது. தீவிரமான காய்ச்சல் இருக்கும். 102 டிகிரி ஃபாரன்ஹீட் வரையிலும்கூட காய்ச்சல் ஏற்படலாம். இது, தொண்டை, நுரையீரல் மற்றும் தோலில் புண்களை ஏற்படுத்தும். வழக்கமாக முதுகு, வயிறு போன்ற பகுதிகளில் சின்னம்மை புண்கள் ஏற்படும்.

குழந்தைகளைப் பொறுத்தவரை சின்னம்மை வந்தால் பெரும்பாலும் எந்த சிகிச்சையும் தேவைப்படாது. சில நாள்களில் தானாகவே சரியாகிவிடும். ஆனால், முதியவர்களுக்கு சின்னம்மை சில நேரங்களில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, சின்னம்மை வந்த முதல் இரண்டு நாள்களுக்குள் மருத்து வரை அணுகி ஆன்டிவைரல் மருந்துகளைச் சாப்பிட்டால், அம்மை நோயின் தீவிரம் குறையும். முதியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இதனால், வெரிசெல்லா வைரஸ் நரம்பியல் மண்டலத்தைத் தாக்க வாய்ப்பு இருக்கிறது. மூளைக் காய்ச்சல், நிமோனியா மற்றும் சிறுமூளைப் பாதிப்புகள் ஏற்படலாம். எனவே, வயதானவர்களுக்கு அம்மை நோய் வந்தால் அலட்சியப்படுத்தக் கூடாது.
பொதுவாக, அம்மை புண்களில் இருந்து நீர் வடியும். சிலருக்கு, இந்த புண்களில் பாக்டீரியா தொற்று ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, அம்மை நோய் வந்தால் தனி அறையில் இருப்பதுதான் நல்லது. அம்மை காரணமாக உடலில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால், குளிர்ச்சி நிறைந்த அறையில், புண்கள் ஆறி உதிரும் வரை இருப்பது சிறந்தது. நமது முன்னோர்கள் வேப்பிலையைப் பரப்பி அதன் மேல் அம்மையால் பாதிக்கப்பட்டவர்களைப் படுக்கவைப்பார்கள். வேப்பிலை ஒரு கிருமிநாசினி என்பதால், அம்மைப் புண்களுக்கு மிகவும் நல்லது. ஆனால், சுத்தமாக இல்லாத வேப்பிலையின் மேற்புறத்தில் ஏதாவது கிருமிகள், தொற்றுகள் இருந்தால் அதன் மேல் படுக்கும்போது அம்மைப் புண்கள் பெரிதாகிவிடும் வாய்ப்பும் உண்டு.

கிராமப்புறங்களில் பலர் அம்மை வந்தால் குளிக்கவிடுவது இல்லை.
அம்மை நோய் ஏற்பட்டால் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை நிறைய எடுத்துக்கொள்ள வேண்டும். எந்த உணவை வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால், வீட்டில் சுத்தமாகச் சமைத்ததாக இருக்க வேண்டும். உணவில் காரம் மற்றும் எண்ணெய் குறைவாக இருப்பதை உறுதிசெய்துகொண்டு சாப்பிடலாம். பழச்சாறுகள், உப்புக்கரைசல்கள், இளநீர் போன்ற நீர் ஆகாரங்களையும் பப்பாளி, கேரட் போன்ற வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளையும் அதிகம் சாப்பிட வேண்டும்.
கிராமப்புறங்களில் பலர் அம்மை வந்தால் குளிக்கவிடுவது இல்லை. இது தவறு. அம்மையால் பாதிக்கப்பட்டவர் தினமும் குளிக்கலாம். சோப் பயன்படுத்தாமல் குளிக்கலாம். நிறைய நாள்கள் குளிக்காமல் இருந்தால், சில நேரங்களில் தொற்றுப் பாதிப்புகளால் நோய் பெரிதாகிவிடும் வாய்ப்பு உண்டு. அம்மை வந்த சமயங்களில் குளிக்காவிட்டாலும் அவசியம் ஈரத்துணியால் உடலைத் துடைக்க வேண்டும்.

சின்னம்மையைப் பொறுத்தவரை பெரும்பாலும் சிகிச்சை தேவைப்படாது. ஓய்வே போதுமானது. ஒரு முறை ஒருவருக்கு சின்னம்மை வந்தால், அதன் பின்னர் அவரது வாழ்நாளில் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு இல்லை. ஏனெனில், சின்னம்மையை ஏற்படுத்தும் வெரிசில்லா வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உடல் தானாகவே உருவாக்கிக்கொள்ளும்.
வீட்டில் யாராவது ஒருவருக்கு அம்மை இருந்தால், வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்பு இருக்கிறது. ஒருவருக்கு அம்மை வந்த அடுத்த ஒரு வாரத்தில் இருந்து மூன்று வாரங்களுக்குள் வீட்டில் இருப்பவர்களுக்கும் அம்மை வரலாம். இதைத் தடுக்க வீட்டில் உள்ள மற்றவர்கள் சின்னம்மைக்கான தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது சிறந்தது. 18 மாதங்களைக் கடந்த குழந்தைகளாக இருந்தால், ஒரு டோஸ் தடுப்பூசியும், பெரியவர்கள் ஒரு மாத இடைவெளியில் இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் போட்டுக்கொள்ள வேண்டும்.
அம்மை வந்தால் ஏற்படும் மிகப்பெரிய சோதனையே தழும்புகள்தான். வேலைக்குச் செல்லும் பலர் அம்மைத் தழும்புகளால் மனஅழுத்தத்துக்கு ஆளாகின்றனர். அம்மைத் தழும்புகள் முற்றிலும் நீங்க ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை ஆகும். அம்மைத் தழும்புகளை நீக்கப் பிரத்யேக சிகிச்சைகள் இல்லை. எனவே, முடிந்த வரை அம்மை வராமல் தடுப்பதுதான் சிறந்த வழி.

மம்ப்ஸ் (Mumps) என்பது அம்மையின் இன்னொரு வடிவம். இது, உமிழ்நீர் சுரப்பிகளைப் பாதிக்கும் வைரஸ். இதனால், தாடையின் ஒரு பகுதி நன்றாக வீங்கிவிடும். மம்ப்ஸ் நோயால் நேரடியாக உயிருக்கு ஆபத்து இல்லை. ஆனால், ஆண்களுக்கு விரை வீக்கம், பெண்களுக்கு சினைமுட்டைப் பாதிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். சிலருக்கு, கணையத்தைப் பாதிக்கும். எனினும், இந்த நோய் குறித்துப் பயப்படத் தேவை இல்லை. ஏனெனில், பெரும்பாலும் தடுப்பூசி மூலம் இந்த நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ருபெல்லா வைரஸ் உடலுக்குள் புகுந்தால் தோல் தடித்துவிடும். அரிப்பு ஏற்படும். கடும் காய்ச்சல் இருக்கும். பொதுவாக, மூன்று நாள்கள்தான் இதன் வீரியம் இருக்கும். அதனால், பயப்படத் தேவை இல்லை. ஆனால், கர்ப்பிணிகளுக்கு ருபெல்லா வைரஸ் தாக்கினால், குழந்தை பாதிக்கப்படும். பிறக்கும் குழந்தைக்குக் கண்கள், காதுகள், இதயம் போன்றவற்றில் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு அதிகம். குழந்தையிலேயே ருபெல்லா வைரஸ் தடுப்பூசி போடப்படுவதால், இந்த வைரஸ் தாக்குதல் பெருமளவு குறைந்திருக்கிறது. எனினும், பெண்கள் குழந்தைப்பேறுக்குத் திட்டமிடுவதாக இருந்தால், முன்கூட்டியே ருபெல்லா வைரஸ் தடுப்பூசி போடவில்லை எனில் அவசியம் போட்டுக்கொள்ள வேண்டும்.

அம்மை வகைகளில் முக்கியமானது தட்டம்மை. மீசில்ஸ் (Measles) வைரஸ் காரணமாகத் தட்டம்மை ஏற்படுகிறது. சின்னம்மையைவிட சற்று அதிகம் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது இந்த தட்டம்மை. மீசில்ஸ் வைரஸ் தொற்று ஏற்பட்டால் உடல் முழுவதும் ஆங்காகே தடிப்புத்தடிப்பாக தோன்றும். தோலில் மணல் போன்று ஒருவித சொறி ஏற்படும்.
தட்டம்மை வந்தால் காய்ச்சலோடு சளி, இருமல் அதிகமாக இருக்கும். கண்கள் சிவந்து காணப்படும். மீசில்ஸ் வைரஸானது மூச்சுக்குழலில் இருக்கும் தோலின் வெளிப்புற அடுக்கை அரித்துவிடும். சில சமயங்களில் இரைப்பையின் சுவர்களையும் அரிக்கும். தட்டம்மைக்கு நேரடி ஆன்டிவைரஸ் மருந்துகளே கிடையாது. பாதிப்பைக் குறைப்பதற்காக வைட்டமின் ஏ மருந்துகள் சாப்பிட வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரை குழந்தை பிறந்த ஒன்பதாவது மாதம் ஒரு தடுப்பூசியும், 15-18 மாதங்களுக்குள் ஒரு தடுப்பூசியும் தட்டம்மையைத் தடுப்பதற்குப் போடப்படுகிறது. 15-18 மாதங்களில் போடப்படும் தடுப்பூசி எம்.எம்.ஆர் தடுப்பூசி எனப்படும். இது, மீசில்ஸ், மம்ஸ், ருபெல்லா என்ற மூன்று வகையான அம்மையை ஏற்படுத்தும் வைரஸ்களைத் தடுப்பதற்காகப் போடப்படுகிறது. இதுவரை, தட்டம்மைக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள், விரும்பினால் தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது” என்கிறார் மருத்துவர் பி. செந்தூர் நம்பி.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
