
Doctor Vikatan: தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவுவதாகக் கேள்விப்படுகிறோம். இந்நிலையில் முன்கூட்டியே நிலவேம்பு கஷாயம், கபசுர குடிநீர் எடுத்துக்கொள்வது எல்லாம் உதவுமா அல்லது கோடையில் இவற்றை எடுத்துக்கொள்வது உடல் சூட்டை அதிகரிக்குமா… பொதுவாகவே வெயில் காலத்தில் இதுபோன்ற கஷாயங்கள் எடுக்கலாமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி
கபசுர குடிநீரையோ, நிலவேம்பு குடிநீரையோ நோய்த்தடுப்பு மருந்தாக முன்கூட்டியே எடுத்துக்கொள்வதில் எந்தத் தவறும் கிடையாது. ஆனால், அவற்றை எப்படி, எவ்வளவு எடுத்துக்கொள்கிறோம் என்பது முக்கியம்.
கபசுர குடிநீரோ, நிலவேம்பு குடிநீரோ… ஹெல்த் டிரிங்க்ஸ் இல்லை. அதாவது கோடைக்காலத்தில் இதுபோன்ற தடுப்பு மருந்துகளை பானகம் மாதிரி குடிக்கக்கூடாது. மற்றபடி, கொரோனா என்றில்லை, வேறு எந்தத் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டாலும், காய்ச்சல் வந்தாலும் இவற்றை முன்கூட்டியே எடுத்துக்கொள்வது நிச்சயம் பலன் அளிக்கும், நோய் வராமல் தடுக்கும். ‘விருந்தும் மருந்தும் மூன்று நாள்களுக்கு’ என்றொரு பழமொழியே உண்டு. அதற்கேற்றபடி, என்னதான் இவை தடுப்பு மருந்துகளாக இருந்தாலும் அளவுக்கு மீறியோ, நாள்கணக்கிலோ எடுக்கக்கூடாது.

கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் என எதை எடுத்துக்கொள்வதானாலும் பெரியவர்கள் என்றால் 15 முதல் 30 மில்லிக்கு மிகாமல் எடுத்துக்கொள்ளலாம். வயது குறைந்தவர்கள், இதைவிடவும் குறைவாக எடுத்துக்கொள்வதுதான் சரியானது. இந்த இரண்டையுமே சாப்பிட்ட பிறகு எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, வயிற்றுப் புண் பிரச்னை உள்ளவர்கள் வெறும் வயிற்றில் இந்தக் கஷாயங்களைக் குடிக்கவே கூடாது.
எந்த மருந்தையும் மருத்துவ ஆலோசனையோடு எடுப்பதுதான் சரியானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.