
அனைவருக்கும் பசுமை வணக்கம்!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, விவசாயத்துக்கான மின் இணைப்பு என்பது காலகாலமாகவே போராட்டம்தான். ஆம்… 1970-களில் தி.மு.க ஆட்சியின்போது மின்கட்டண உயர்வை எதிர்த்து பலவிதமான போராட்டங்களை நடத்தினார்கள் விவசாயிகள். இதற்காக அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி அரசாங்கமே உயிர்களைப் பறித்த கொடுமையெல்லாம் நடந்தது.
இதற்கெல்லாம் பிராயச்சித்தமாகத்தான், மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது, ‘விவசாயத்துக்கு இலவச மின்சாரம்’ என்பது நடைமுறைக்கு வந்தது. ஆனாலும், மின்இணைப்பு என்பது ஆண்டுக் கணக்கில் காத்திருந்தாலும், எளிதாகக் கிடைக்காது என்பதே இன்றுவரையிலும் எதார்த்தமாக இருக்கிறது.
‘‘மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த விவசாயிகள் அனைவருக்கும், தடையின்றி இலவச மும்முனை மின் இணைப்பு வழங்கப்படும்’’ என்று 2021-ம் ஆண்டுச் சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுக்கப்பட்டது.
ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்த நிலையிலும் லட்சக்கணக்கான விவசாயிகள் மின் இணைப்புக்கு விண்ணப்பித்துக் காத்துக்கிடக்கிறார்கள்.
2003-ம் ஆண்டிலிருந்து முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 25,000. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, 2 லட்சம் விவசாயிகளுக்கு புதிதாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை ஒரு லட்சத்து 86 ஆயிரம் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இன்னும் 14 ஆயிரம் பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள், கன்னத்தில் கைவைத்தபடி!
இந்நிலையில், கடந்த 22-ம் தேதி சட்டமன்றத்தில் பேசிய மின்சாரத்துறை அமைச்சர், செந்தில் பாலாஜி, ‘‘இந்த ஆண்டு 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும்’’ என்று புதிதாக ஓர் அறிவிப்பை வெளியிட்டு, புளகாங்கிதப் பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் நடவடிக்கை… ‘யானைப் பசிக்கு சோளப்பொரி போல’ என்பதாகத் தான் இருக்கிறது. ஆந்திரா, தெலங்கானா ஒடிசா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் விண்ணப்பித்த ஒரு மாதத்துக்குள் மின்இணைப்புகள் வழங்கப்படுகின்றன. கர்நாடகாவில், ஒரு விவசாயி எப்போது வேண்டும் என்றாலும் தானே மின்இணைப்பைக் கொடுத்துக்கொள்ளலாம். பின்னர், மின்வாரியத்துக்குத் தகவல் கொடுத்தால் அலுவலர்கள் வந்து அதிகாரபூர்வமாக இணைப்பு வழங்கிவிடுவார்கள். அங்கேயும் இலவச மின்சாரம்தான். தமிழ்நாட்டில் மட்டும்தான் 20 ஆண்டுகள் கடந்தும் மின் இணைப்புக்காக விவசாயிகள் காத்திருக்கும் கொடுமை!
விவசாயம் என்பது எப்போதும்… எதற்காகவும்… யாருக்காகவும்… காத்திருக்கக் கூடாத ஒன்று. இதை உணராவிட்டால்… ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஆபத்தே!