• April 25, 2025
  • NewsEditor
  • 0

‘பெங்களூரு vs ராஜஸ்தான்!’

ராஜஸ்தான் அணி மீண்டும் கையிலிருந்த ஒரு போட்டியை கோட்டைவிட்டு தோற்றிருக்கிறது. சின்னசாமி மைதானத்தில் வெற்றிபெற முடியாமல் தவித்து வந்த பெங்களூரு அணி, ஹேசல்வுட்டின் மிரட்டலான டெத் ஓவரால் அங்கே முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. சின்னசாமி மைதானத்தில் பெங்களூரு அணி எப்படி வென்றது?

RCB vs RR

‘சின்னசாமியில் பெங்களூருவின் தொடர் தோல்விகள்!’

நடப்பு சீசனில் இந்தப் போட்டிக்கு முன்பாக மூன்று போட்டிகளை பெங்களூரு அணி சின்னசாமி மைதானத்தில் ஆடியிருந்தது. மூன்றிலுமே பெங்களூரு அணி தோற்றிருக்கவே செய்தது. அந்த மூன்று போட்டிகளிலுமே பெங்களூரு அணி டாஸை தோற்றிருந்தது. முதலில் பேட்டிங் செய்திருந்தது. பெங்களூரு முழுக்க முழுக்க பேட்டிங் பிட்ச்.

ஆனால், முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியால் சராசரியை விட அதிக ஸ்கோரை எடுக்க முடியவில்லை. 169, 163, 95 முறையே மூன்று போட்டிகளிலும் பெங்களூரு அணி முதலில் பேட் செய்து எடுத்திருந்தது. சின்னசாமியில் இந்த ஸ்கோரை வைத்துக் கொண்டு வெல்லவே முடியாது.

RCB
RCB

ராஜஸ்தானுக்கு எதிராகவும் பெங்களூருவுக்கு இதே மாதிரியான விஷயங்கள் நடந்திருந்தது. கையெடுத்து கும்பிட்டு கடவுளை வேண்டியபடியே ரஜத் பட்டிதர் டாஸூக்கு வந்திருந்தார். அப்படியிருந்தும் டாஸை தோற்றார். மீண்டும் முதல் பேட்டிங். ஆனால், இந்த முறை பெங்களூருவின் பேட்டிங் கொஞ்சம் நன்றாக இருந்தது.

‘கோலியின் பாரட்டத்தக்கப் பணி!’

கடந்த போட்டிகளை போல் அல்லாமல் சின்னசாமியில் சவாலளிக்கக்கூடிய ஸ்கோரை பெங்களூரு எட்டியது. அதற்கு மிக முக்கிய காரணம் விராட் கோலி. 42 பந்துகளில் 70 ரன்களை எடுத்திருந்தார். இந்த அணியில் ஏதுவான சமயத்தில் மட்டுமே ஆக்ரோஷமாக ஆடி, மற்ற சமயங்களில் ஆங்கர் இன்னிங்ஸ் ஆடுவதுதான் கோலியின் வேலையாக இருக்கிறது.

கோலி அப்படி ஆடுகையில், அவரை சுற்றி மற்ற வீரர்கள் அதிரடியாக ஒரு சுதந்திரம் கிடைக்கிறது. ராஜஸ்தானுக்கு எதிராக இந்த விஷயம் மிகச்சிறப்பாக ஒர்க் அவுட் ஆகியிருந்தது. கோலியை சுற்றி பில் சால்ட், தேவ்தத் படிக்கல், டிம் டேவிட், ஜித்தேஷ் சர்மா ஆகியோர் அதிரடியாக ஆடியிருந்தனர். அதனால் பெங்களூருவின் ஸ்கோர் 200 ஐ கடந்தது.

Virat Kohli
Virat Kohli

‘ராஜஸ்தானின் வேகமான சேஸிங்!’

ராஜஸ்தானுக்கு டார்கெட் 206. பெங்களூரு 200 ஐ கடந்து விட்டதாலயே அவர்களுக்கு வெற்றி உறுதியாகிவிடவில்லை. ராஜஸ்தான் அணி சேஸிங்கை சிறப்பாக எடுத்து சென்றது. யாஷஸ்வி ஜெய்ஸ்வால், நிதிஷ் ராணா, ரியான் பராக் ஆகியோர் அதிரடியாக ஆடி சேஸிங்கை முன்னகர்த்தி சென்றனர். 8.1 ஓவர்களிலேயே ராஜஸ்தான் அணி 100 ரன்களை கடந்துவிட்டது.

ராஜஸ்தானின் வேகத்தை பெங்களூருவின் ஸ்பின்னர்கள்தான் கட்டுப்படுத்தினர். சுயாஷ் சர்மாவும் க்ருணால் பாண்ட்யாவும் 8 ஓவர்களை வீசி 62 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தனர். அதாவது, ஓவருக்கு 12-13 ரன்கள் என அடித்துக் கொண்டிருந்த ராஜஸ்தானை ஓவருக்கு 8 ரன்களுக்குள் அடிக்க வைத்து போட்டியை இழுத்துப் பிடித்தனர். ஆனாலும், ராஜஸ்தான் அணி இலக்கை எட்டிப் பிடிக்கும் தூரத்தில்தான் இருந்தது.

Josh Hazlewood
Josh Hazlewood

‘மிரட்டலான டெத் ஓவர்!’

கடைசி 4 ஓவர்களுக்கு ராஜஸ்தானின் வெற்றிக்கு 46 ரன்கள் தேவைப்பட்டது. இந்த சமயத்தில்தான் ஹேசல்வுட்டின் கையில் பந்தை கொடுத்தார் ரஜத் பட்டிதர். ஹேசல்வுட் வீசிய அந்த 17 வது ஓவரில் வெறும் 6 ரன்களை மட்டுமே கொடுத்தார். அத்தோடு ஹெட்மயரின் விக்கெட்டையும் வீழ்த்தினார்.

Hazlewood
Hazelwood

வேகத்தை குறைத்து நல்ல லெந்தில் ஹேசல்வுட் வீசிய பந்துகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. இந்த ஓவரை ஹேசல்வுட் சிறப்பாக வீசியிருந்தாலும் அடுத்த ஓவரில் புவனேஷ் குமார் 22 ரன்களை கொடுத்தார். துருவ் ஜூரேலும் சுபம் துபேவும் அதிரடியாக ஆடியிருந்தனர்.

‘மேட்ச்சை மாற்றிய 19 வது ஓவர்!’

கடைசி 2 ஓவர்களில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. இப்போது 19 வது ஓவரை ஹேசல்வுட் வீசினார். போட்டியை மொத்தமாக மாற்றிய ஓவர் இதுதான். இந்த ஓவரில் வெறும் 1 ரன்னை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை ஹேசல்வுட் எடுத்துக் கொடுத்தார். குறிப்பாக, துருவ் ஜூரேலின் விக்கெட்டை வீழ்த்தினார்.

Hazlewood
Hazlewood

ஒயிட் அவுட் சைட் ஆப் ஸ்டம்ப் லைனில் வீசிய ஒரு பந்தில் துருவ் ஜூரேல் எட்ஜ் ஆகி வெளியேறினார். அடுத்த பந்திலேயே ஒரு ஸ்லோயர் ஒன்னில் ஆர்ச்சர் கேட்ச் ஆனார். அந்த ஒற்றை ஓவரில் போட்டியை மொத்தமாக பெங்களூரு பக்கமாக திருப்பி விட்டார் ஹேசல்வுட். இறுதியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வென்றது.

Hazlewood
Hazlewood

ஏற்கனவே டெல்லிக்கு எதிராகவும் லக்னோவுக்கு எதிராகவும் கையிலிருந்த போட்டியை டெத் ஓவர்களில் ராஜஸ்தான் அணி கோட்டை விட்டிருந்தது. இந்தப் போட்டியையும் அப்படியே இழந்திருக்கின்றனர். எப்படியோ ஒரு வழியாக சின்னசாமி மைதானத்தில் பெங்களூரு அணி ஒரு போட்டியை வென்றுவிட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *