• April 24, 2025
  • NewsEditor
  • 0

கடந்த ஏப்ரல் 21.04. 2025 தேதியில் காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து இந்தியா ‘சிந்து நதி நீர் ஒப்பந்த’த்தை இடைநிறுத்தி, பாகிஸ்தானின் நீர்வளத்தில் கை வைத்தது. இதன் எதிரொலியாக பாகிஸ்தான் ‘சிம்லா’ ஒப்பந்தத்தை ரத்து செய்யப்போவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.

சிம்லா ஒப்பந்தம் என்றால் என்ன? அது ரத்து செய்யப்பட்டால் என்ன நடக்கும் என்பதைப் பற்றி பார்க்கலாம்.

வங்க தேச விடுதலைப் போர்

கிழக்கு பாகிஸ்தானில் இருந்த வங்காள மக்கள், பாகிஸ்தான் அரசு தங்களின் பகுதி வளர்ச்சிக்கு நிதி குறைவாகத் தருகிறது, வங்க மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கவில்லை, அரசியல் அதிகாரம் தரப்படவில்லை எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் போராட்டங்களை நடத்தினர்.

அது வங்காளதேச சுதந்திரத்திற்கான விடுதலைப் போராக மாற, இந்தியாவின் உதவியுடன் பாகிஸ்தான் இராணுவத்தை வீழ்த்தி வங்கப்படைகள் வென்று ‘வங்க தேசம்’ உருவானது. இந்திரா காந்தி பிரதமாராக இருந்தபோது 1971-ம் ஆண்டு இந்தப் போர் நடந்தது.

சிம்லா ஒப்பந்தம்

சிம்லா ஒப்பந்தம்

இந்தப் போரின் முடிவில் இந்தியா 93 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களைப் போர்க் கைதிகளாக சிறை வைத்தது. பாகிஸ்தானின் நிலப்பரப்பில் 5,000 சதுர மைல்களை இந்தியா தன் வசப்படுத்தியது. இதனால் கொதித்தெழுந்த பாகிஸ்தான் இந்திய – பாகிஸ்தான் எல்லைகளில் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியது. குறிப்பாக, கராச்சி, காஷ்மீர் எல்லைகளில் இரண்டு நாடுகளுக்கிடையேயும் போர் பதற்றம் நிலவ ஆரம்பித்தது.

இந்தியா பக்கம்  சோவியத் ஒன்றியமும், பாகிஸ்தான் பக்கம் சீனாவும் துணையாக நிற்க மற்றுமொரு போருக்கு வழிவகுக்கும் ஆபத்து ஏற்பட்டது. இந்தப் போர் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா – பாகிஸ்தான் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தியது. சிம்லாவில் இரு நாட்டு தலைவர்களும் இணைந்து உரையாடி எல்லைப் பிரச்னைகளை பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என ‘சிம்லா’ ஒப்பந்தம்’  கொண்டுவரப்பட்டது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் சுல்பிகர் அலி பூட்டோ மற்றும் இந்தியா பிரதமரான இந்திரா காந்தி ஆகியோர் இதில் கையெழுத்திட 1972ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.

இந்தியா, பாகிஸ்தான் தொடரும் அதிரடிகள்
Pahalgam Attack: இந்தியா, பாகிஸ்தான் தொடரும் அதிரடிகள்

சிம்லா ஒப்பந்தத்தின் முக்கியத் தீர்மானங்கள்

இந்தியா – பாகிஸ்தான் உறவுகளை பரஸ்பரத்துடன் அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும், காஷ்மீர், கராச்சி உள்ளிட்ட எல்லைப் பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற அடிப்படையில் இந்த ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது.

*இரண்டு நாடுகளுக்கிடையேயான விவகாரங்களில் இரு நாட்டின் ஒப்புதல் இன்றி, வேறு எந்த நாடும் மூன்றாவதாக இடையில் தலையிடக் கூடாது.

*இரண்டு நாடுகளும் நாட்டின் கொள்கை, உள்நாட்டு விவகாரங்கள், அரசியல் விவகாரங்கள், இறையாண்மை, எல்லைகளை மதித்து அதில் தலையிடக் கூடாது.

*ஒரு நாடு, இன்னொரு நாட்டை பற்றி தவறான புண்படும்படியான கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடாது.

*இரண்டு இராணுவ வீரர்களையும் மதிப்புடன் நடத்த வேண்டும், போர் கைதிகளை விடுவிக்க வேண்டும். போரின் முடிவில் இராணு வீரர்களை மதித்து நாட்டிற்கே திருப்பி அனுப்பி வைக்க வேண்டும்.

*காஷ்மீர், கராச்சி பகுதிகளில் எல்லை தாண்டி ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இப்படி பல முக்கியமான இரு நாட்டு எல்லைப் பிரச்னைகள், எல்லையில் போர் பதற்றங்கள், ஆக்கிரமிப்புகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

கடந்த ஏப்ரல் 21.04. 2025 தேதியில் காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து இந்தியா ‘சிந்து நதி நீர் ஒப்பந்த’த்தை இடைநிறுத்தி, பாகிஸ்தானின் நீர்வளத்தில் கை வைத்தது.

அதன் விளைவாக பாகிஸ்தான், இரு நாடுகளுக்கிடையே அமைதியை பாதுகாத்து, ஆக்கிரமிப்பு, காஷ்மீர், கராச்சி எல்லைப் பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டுவந்த இந்த ‘சிம்லா’ ஒப்பந்தத்தை இப்போது பாகிஸ்தான் ரத்து செய்யப் போவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

காஷ்மிர் | இந்தியா பாகிஸ்தான் எல்லை

இந்த சிம்லா ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டால் ஏற்படும் விளைவுகள்:

*இந்தியா – பாகிஸ்தான் பிரச்னையில் மூன்றாவதாக எந்த நாடும் தலையிடக்கூடும். இதுவரை மறைமுகமாக பாகிஸ்தானுக்கு உதவி வந்த சீனா, இனி நேரடியாக பாகிஸ்தான் – இந்தியா எல்லைப் பிரச்னைகளில் தலையிடும். இந்தியாவுக்கு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட சில உலக நாடுகள் ஆதரவு தர போர் பதற்றம் நிலவும்.

*சிம்லா ஒப்பந்தம் மூலம் காஷ்மீர் எல்லை பிரச்னையில் அமைதியாக இருந்த பாகிஸ்தான், ஐக்கிய நாடுகள் சபையில் காஷ்மீர் எல்லைப் பிரச்னையை பாகிஸ்தான் எழுப்பும். உள்நாட்டு விவகாரமாக இருந்த அது, சர்வதேச அளவில் விவாதிக்கப்படும். காஷ்மீர் எல்லையில் மீண்டும் இரண்டு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவும்.

*இருநாடுகளின் அமைதிக்கான சிம்லா ஒப்பந்தத்தை மீறுவதன் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடாக உலக அரங்கில் வெளிப்படையாக அடையாளப்படுத்தப்படும். பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படும்.

இந்தியா-பாகிஸ்தான் எல்லை

*பலூச்சிஸ்தான் கிளர்ச்சி, பொருளாதார வீழ்ச்சி என உள்நாட்டு விவகாரங்களில் சரிவைச் சந்தித்துவரும் பாகிஸ்தானுக்கு இன்னும் பெரும் சரிவைச் சந்திக்கும். பலூச்சிஸ்தான் கிளர்ச்சிப் படைகள் வலுத்து பிரிவினை ஏற்படும், அரசியல் – பொருளாதார வீழ்ச்சி அதல பாதாளத்திற்குச் செல்லும். உள்நாட்டுப் பாதுகாப்பில் பெரும் பாதிப்பு ஏற்படும்.

*சீனா, பாகிஸ்தான் பக்கம் நிற்பதால், இந்தியா – சீனா உடனான உறவு பாதிக்கப்படும். இந்தியா – சீனா எல்லை விவகாரங்களில் பிரச்னையை தீவிரப்படுத்தும்.

*இந்த ஒப்பந்தத்தை மீறுவதன் மூலம் இந்தியா மீதான தாக்குதல்களை வெளிப்படையாக அறிவிக்கிறது பாகிஸ்தான். இது எல்லைகளில் போர் பதற்றத்தை அதிகரிக்கும். குறிப்பாக காஷ்மீர், கராச்சி பகுதிகளில் எல்லை தாண்டிய ஆக்கிரமிப்பு, இராணுவ தாக்குதல், போர் பதற்றம் நிலவும்.

*இது பாகிஸ்தான் மறைமுகமாக இந்தியா மீதான போரை அறிவிப்பதற்குச் சமம்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Vikatan Whatsapp Channel

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *