• April 24, 2025
  • NewsEditor
  • 0

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட மூன்று குஜராத்தியர்களில் ஒருவரான ஷைலேஷ் ஹிம்மத்பாய் கல்தியா, அடக்க நிகழ்வில் குடும்பத்தினரின் துக்கம் கோபமாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குடும்பத்துடன் காஷ்மீர் சென்ற கல்தியா, தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார். அவரது இறுதிச் சடங்கில் மத்திய அமைச்சரும் குஜராத் பாஜக தலைவருமான சி.ஆர்.பாட்டீல் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பஹல்காம் தாக்குதல்

“விஐபிகளுக்கு மட்டும்தான் பாதுகாப்பா?”

கணவர் மரணத்தை நேரில் கண்ட ஷீதல்பென், இறுதிச் சடங்கில் அவரது விரக்தியையும் வேதனையையும் வெளிப்படுத்தினார். “அங்கே யாருமில்லை. போலீஸ் இல்லை, ராணுவம் இல்லை, ஒரு வசதியும் இல்லை. ஆனால் விஐபி-க்கள் அல்லது பெரிய தலைவர்கள் வருகை தரும் போது, ​​டஜன் கணக்கான கார்கள், ஹெலிகாப்டர்கள் தலைக்கு மேலே பறக்கும் – அதற்கெல்லாம் பணம் கொடுப்பது யார்? நாங்கள், சாதாரண மக்கள், வரிகட்டுபவர்கள். எனில் ஏன் விஐபிகளுக்கு இருக்கும் சேவைகள் எல்லாம் எங்களுக்கு இல்லை?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராணுவத்துக்கு எப்படி எதுவும் தெரியாமல் இருந்தது?

கதறி அழுத அவர், “கீழே இருந்த ராணுவ முகாமில் இருந்து நான் கத்திக் கொண்டிருந்தேன், மேலே சென்று உதவுமாறு கெஞ்சிக் கொண்டிருந்தேன், மக்கள் காயமடைந்ததாக அவர்களிடம் சொன்னேன். நாங்கள் எப்படியோ தடுமாறி விழுந்து கீழே வந்தோம்… ஆனால் அங்கு இருக்கும் மக்களுக்கு எந்த உதவியும் சென்று சேரவில்லை. மேலே இவ்வளவு நடந்ததும் – கீழே இருந்த ராணுவத்திற்கு எப்படி எதுவும் தெரியாமல் இருந்தது?”

மேலும் அவர், “அவர்கள் எல்லா இந்து சகோதரர்களையும் அப்படிச் சுடப் போகிறார்கள் என்றால், நமது பாதுகாப்புப் பணியாளர்கள் என்ன செய்கிறார்கள்? அங்கே (காஷ்மீரில்) ஆயிரக்கணக்கான பாதுகாப்பு பணியாளர்கள் இருந்தனர். ஆனால் சுற்றுலா தளத்தில் ராணுவ வீரர்கள் இல்லை, போலீசார் இல்லை, அடிப்படை முதலுதவி கூட இல்லை, ஒன்றுமில்லை” எனக் கூறியுள்ளார்.

அத்துடன் நிலைமை மோசமாக இருந்தால் ஏன் தங்களை அங்கு செல்ல அனுமதித்தீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

“நாங்கள் வரிகட்டினோம்… ஆனால் ஒரு உதவியும் கிடைக்கவில்லை”

கதறியபடி சத்தமாக, “எங்கள் வீட்டின் தூண் போய்விட்டது… என் ஆதரவு, என் பலம்… அவர் போய்விட்டார்… என் ஷைலேஷை என்னிடம் கொடுங்கள், வேறெதுவும் வேண்டாம்.” என அழுதுள்ளார்.

பின்னர், “நம் அரசாங்கம் அதற்கு சொந்தமானவர்களை மட்டுமே பாதுகாக்க விரும்பினால், அதன் வசதிகளை மட்டுமே பராமரிக்க விரும்பினால், பரவாயில்லை – ஆனால் இனி எங்கள் வாக்குகளை எதிர்பார்க்க வேண்டாம். இந்த அரசாங்கத்திற்கு நாங்கள் மீண்டும் வாக்களிக்க மாட்டோம். ” எனக் கூறியுள்ளார்.

தன் பிள்ளைகள் மீது கைவைத்து, “இவர்களின் எதிர்காலம் என்னவாகும், எனக்கு கனவுகள் இருந்தது, என் மகனை இஞ்சினியராகவும், மகளை மருத்துவராகவும் மாற்ற வேண்டுமென்று. இனி நான் அதை எப்படி செய்வேன்”

அழுகையை கட்டுப்படுத்தியபடி, “நாங்கள் இத்தனை ஆண்டுகளும் வரிகட்டினோம். என் கணவரின் வருமானத்தில் இருந்து வரியை எடுத்துக்கொண்டனர். சுற்றுலா செல்லும்போதும் வரி கட்டினோம். நீங்கள் எங்களிடம் இருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டீர்கள். ஆனால் எங்களுக்கு அதிகமாக உதவி தேவைப்பட்டபோது ஒரு வசதியும் இல்லை, ஒரு ஆதரவும் இல்லை” எனக் கூறியுள்ளார்.

“நான் என் கணவருக்கும் மகனுக்கும் மட்டும் நீதிகேட்கவில்லை. பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்குமாக நீதி கேட்கிறேன்” எனப் பேசினார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *