
புதுச்சேரி மின்துறையில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றி வருபவர் பன்னீர்செல்வம். இவர் கடந்த சில நாட்களாக இளம்பெண் ஒருவருடன் செல்போனில் பேசி வந்திருக்கிறார்.
ஒருகட்டத்தில், இருவரும் சந்திக்கலாம் என முடிவு செய்திருக்கிறார்கள். அதற்குச் சம்மதித்த அந்த பெண், மேட்டுப்பாளையம் (புதுச்சேரி) வருமாறு அழைத்திருக்கிறார்.
அதையடுத்து அந்த இளம்பெண் கூறிய இடத்திற்குச் சென்றபோது, அந்தப் பெண் வேறு ஒரு பெண்ணைப் பன்னீர்செல்வத்துடன் அனுப்பி வைத்திருக்கிறார். அதன்பிறகு அந்தப் பெண்ணுடன் சென்றார் பன்னீர்செல்வம்.
அப்போது இவர்கள் இருவரும் தனிமையிலிருந்ததை ஒரு கும்பல் ரகசியமாக வீடியோ எடுத்திருக்கிறது. சில நாட்கள் கழித்து மீண்டும் அந்த இளம்பெண்ணிடம் பேசிய பன்னீர்செல்வம், அவரைச் சந்திக்கச் சென்றிருக்கிறார்.
அப்போது அந்த இளம்பெண்ணுடன் நான்கு பேர், பன்னீர்செல்வத்தை வளைத்துப் பிடித்திருக்கிறார்கள். தொடர்ந்து, கடந்த முறை பன்னீர்செல்வம் அந்த பெண்ணுடன் தனிமையிலிருந்த வீடியோக்களையும், புகைப்படங்களையும் காட்டியிருக்கின்றனர்.
அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பன்னீர்செல்வத்திடம், பணம் கொடுக்கவில்லை என்றால் வீடியோக்களைச் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவிடுவோம் என்று மிரட்டியிருக்கிறது அந்தக் கும்பல்.
அதில் பயந்துபோன பன்னீர்செல்வம், அந்தக் கும்பலிடம் ரூ.10 லட்சத்தைக் கொடுத்திருக்கிறார். சில நாட்கள் கழித்து மறுபடியும் பன்னீர்செல்வத்தைத் தொடர்புகொண்ட அந்தக் கும்பல், மீண்டும் சில லட்சங்களைக் கேட்டு மிரட்டியிருக்கிறது.
அதில் பயந்துபோன பன்னீர்செல்வம், ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். சம்பவம் நடைபெற்ற இடம் மேட்டுப்பாளையம் என்பதால் ஜீரோ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த ஒதியஞ்சாலை போலீஸார், அதன்பிறகு மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு அதை மாற்றியிருக்கின்றனர்.

அதையடுத்து பன்னீர்செல்வத்தின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், மூன்று பெண்களைக் கைது செய்திருக்கின்றனர்.
மேலும் அவர்களது முதல் கட்ட விசாரணையில், இந்த சம்பவத்தின் பின்னணியில் ரௌடி கும்பல் இருப்பது தெரிய வந்திருக்கிறது.
இதுகுறித்து விசாரணை அதிகாரிகளிடம் பேசியபோது, “மூன்று பெண்களைக் கைது செய்திருக்கிறோம். பன்னீர்செல்வத்திற்குப் பழக்கமான அந்தப் பெண்கள், அவரிடம் பணம் இருப்பதைத் தெரிந்துகொண்டு மிரட்டியிருக்கிறார்கள். மற்றவர்களைத் தேடி வருகிறோம்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs