
ஜெய்ப்பூர்: நான்கு நாள் பயணமாக கடந்த திங்கள்கிழமை இந்தியா வந்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தனது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று அமெரிக்கா புறப்பட்டார்.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், அவரது இந்திய வம்சாவளி மனைவி உஷா சிலுகுரி மற்றும் 3 குழந்தைகள் கடந்த 21-ம் தேதி இந்தியா வந்தனர். புதுடெல்லி விமான நிலையத்தில் அவர்களை, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வரவேற்றார். ராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள ஐடிசி மவுரியா ஷெரட்டன் ஓட்டலில் தங்கிய ஜே.டி.வான்ஸ் குடும்பத்தினர், டெல்லி சுவாமி நாராயண் கோயிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டனர். பின்னர் அன்று மாலை டெல்லியில் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பிரதமர் மோடியை, ஜே.டி. வான்ஸ் சந்தித்து பேசினார்.