
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள நடுக்காவேரி, அரசமரத் தெருவைச் சேர்ந்தவர் அய்யாவு (55) பட்டியலினத்தை சேர்ந்தவர். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு துர்கா (34), மேனகா (29), கீர்த்திகா (27), தினேஷ் (24) என நான்கு பிள்ளைகள்.
இந்தநிலையில், அதே தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் டாஸ்மாக் கடையில், மொத்தமாக மது வாங்கி வைத்து கள்ளத்தனமாக விற்பனை செய்ததாக சொல்லப்படுகிறது. குடிப்பழக்கம் உடைய அய்யாவுவிடம், ஆறுமுகம் மது கொடுத்து விற்க சொல்லியுள்ளார். இதனை தினேஷ் கண்டித்துள்ளார் அப்போது கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 8-ம் தேதி தினேஷை நடுக்காவேரி போலீஸார் கைது செய்தனர். உடனே, மேனகாவும், பி.டெக் பட்டதாரியான கீர்த்திகாவும் ஸ்டேஷனுக்கு சென்று இன்ஸ்பெக்டர் சர்மிளாவிடம் கேட்டுள்ளனர்.
அப்போது சர்மிளா, சாதியை சொல்லி பேசியுள்ளார். மேலும் தினேஷ் மீது பொய் வழக்கு பதிவு செய்திருக்கிறார். தன் அக்காவுக்கு திருமண நிச்சயம் நடக்க இருக்கு. இந்த நேரத்தில் தம்பி ஜெயிலில் போட்டிங்கன்னா கல்யாணம் நின்னுடும் என இன்பெக்டரிடம் கூறியுள்ளார்.
ஆனால் இதையெல்லாம் சர்மிளா சட்டை செய்யவில்லை. இதையடுத்து தம்பி மீது பொய் வழக்கு போட்டுருக்கீங்க அவனை விடலைனா இங்கேயே விஷம் குடிச்சுட்டு செத்திடுவேனு சொல்லியிருக்கிறார் கீர்த்திகா. அதுக்கு செத்தா சாவுனு அலட்சியமாக பேசியிருக்கிறார் சர்மிளா.
தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை தாங்கி கொள்ள முடியாத கீத்திகாவும், மேனகாவும் ஸ்டேஷனிலேயே விஷம் குடித்தனர். நாடகமாடுவதாக கூறி இன்ஸ்பெக்டர் சர்மிளா இருவரையும் காப்பதற்கான முயற்சியும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கீர்த்திகா கடந்த 9-ம் தேதி உயிரிழந்தார். மேனகாவுக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. இந்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இன்ஸ்பெக்டர் சர்மிளா உள்ளிட்ட போலீஸார் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். சர்மிளாவை பணி நீக்கம் செய்ய வேண்டும் என கீர்த்திகாவின் உறவினர்கள் கூறி வந்தனர்.
உடனடியாக சர்மிளா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். சர்மிளாவை பணி நீக்கம் செய்தால் மட்டுமே உடற்கூறாய்வு செய்யப்பட்ட உடலை வாங்குவோம் என கூறி நடுக்காவேரி கிராமத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
இதைதொடர்ந்து, இரண்டு எஸ்.ஐ.க்கள், ஒரு பெண் ஏட்டு ஆகியோர் 16-ம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தற்கொலைக்கு துாண்டுதல், எஸ்.சி., எஸ்.டி .வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவும் செய்யப்பட்டது.
அதன் பிறகு, தினேஷ் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், இன்ஸ்பெக்டர் சர்மிளா உள்பட நான்கு பேரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும், இந்த வழக்கை லோக்கல் போலீஸ் விசாரிக்க கூடாது, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இதில், திருச்சி ஐ.ஜி தலைமையில் வழக்கு விசாரணை நடைபெறும், உடலை வாங்கி அடக்கம் செய்யுங்கள் என நீதிமன்றத்தில் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 17-ம் தேதி, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் ரவிவர்மன், நடுக்காவேரி போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை செய்தார். பிறகு, இறந்த கீர்த்திகாவின் வீட்டிற்கு சென்று, அய்யாவு உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் சிகிச்சையில் இருந்த மேனகாவிடம் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே, புதுக்கோட்டை சிறையில் இருந்த தினேஷ், ரெகுலர் பெயிலில் வெளியே வந்தார். இதையடுத்து உடலை பெற்று அடக்கம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மறுத்து மீண்டும் போராட்டத்தை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 22-ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது முதலில் உடலை பெற்று இறுதிச்சடங்கை செய்யுங்கள் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 15 நாள்களாக மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்த கீர்த்திகா உடலை பெற்றுக்கொண்டனர்.

இதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிந்திருந்தனர். பாதுகாப்பிற்கு ஏகப்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அனைத்தையும் போலீஸார் வீடியோ பதிவு செய்து கொண்டே இருந்தனர்.
சிகிசையில் இருந்த மேனகா டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார். அவரை காரில் வைத்து உறவினர்கள் ஊருக்கு அழைத்துச் சென்றனர். கீர்த்திகா இறந்ததை அவரிடத்தில் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தனர். எல்லோர்க்கிட்டேயும் ஒரு முறை என் தங்கச்சி முகத்தை காட்ட சொல்லி கேட்டுக்கிட்டே இருந்திருக்கிறார்.
இந்த நிலையில், காரில் கொஞ்சம் தூரம் சென்ற பிறகு கீர்த்திகா இறந்ததை சொல்லியுள்ளனர். உடனே காரை திருப்ப சொல்லி கதறியிருக்கிறார் மேனகா.

இந்த தகவல் தினேஷிடம் சொல்ல கூட்டத்துக்கு மத்தியில் கலங்கியவர், இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்யணும் அதுக்காகத்தான் இத்தனை நாளா எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு போராட்டம் நடத்தினோம். எல்லா வலியையும் தாங்கிகிட்டோம். எங்களுக்கான நீதி கிடைக்காமலேயே இப்ப உடலையும் வாங்கிட்டோம் என தினேஷ், தழு தழுத்த குரலில் பேசியிருக்கிறார்.
கீர்த்திகா உடல் எடுத்து செல்லப்பட்ட ஆம்புலன்ஸ் முன்பு கார், டூவீலர் என நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் பேரணியாக சென்றனர். நடுக்காவேரி சென்றதும், கீர்த்திகா உடலை பாத்து மேனகா கதறியது சோகத்தை ஏற்படுத்தியது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
