
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் நேபாள நாட்டைச் சேர்ந்த ஒருவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலின் எதிரொலியாக, பிரதமர் மோடி தலைமையில் நேற்று (ஏப்ரல் 23) நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் பாகிஸ்தான் மீது 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
இத்தகைய கொடூரமான தீவிரவாத தாக்குதலுக்கு உலக நாடுகள், பிரதமர், முதலமைச்சர்கள், கிரிக்கெட் வீரர்கள், திரைப் பிரபலங்கள் என பல தரப்பிலிருந்தும் கடுமையான கண்டனங்கள் வந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) துணைத்தலைவரும், எம்.பி-யுமான ராஜீவ் சுக்லா, “பாதிக்கப்பட்டவர்களுடன் நாங்கள் இருக்கிறோம். மேலும், இந்த சம்பவத்தை நாங்கள் கண்டிக்கிறோம். எங்களின் அரசாங்கம் என்ன சொல்கிறதோ அதை நாங்கள் செய்வோம்.

எங்கள் அரசின் நிலைப்பாட்டின்படி, பாகிஸ்தானுடன் இருதரப்பு தொடரில் நாங்கள் விளையாடுவதில்லை. இனிமேலும் நாங்கள் விளையாடமாட்டோம். ஐ.சி.சி தொடர்கள் என்று வரும்போது மட்டும், ஐ.சி.சி-யால் நாங்கள் விளையாடுகிறோம். என்ன நடக்கிறது என்பதை ஐ.சி.சி-யும் அறிந்திருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலைக் கண்டிக்கும் வகையிலும், அதில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதையைச் செலுத்தும் வகையிலும் நேற்றைய ஐ.பி.எல் போட்டியில், மும்பை, ஹைதராபாத் வீரர்கள் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி, கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.