• April 24, 2025
  • NewsEditor
  • 0

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்திய மட்டுமில்லாது உலக நாடுகள் பலவும் இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், இந்த சம்பத்தின்போது சவுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் மோடி, உடனடியாக அந்தப் பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு நாடு திரும்பி டெல்லியில் நேற்று (ஏப்ரல் 23) உள்துறை, பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் உயர்மட்ட குழு கூட்டம் நடத்தினார்.

மோடி தலைமையில் கூட்டம்

இந்தியா அதிரடி நடவடிக்கை

இந்தக் கூட்டத்தில், “பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து. வாஹா – அட்டாரி எல்லை உடனடியாக மூடல். பாகிஸ்தானியர்களுக்கு SVES விசாக்கள் ரத்து. அந்த விசா மூலம் இந்தியா வந்த பாகிஸ்தானியர்கள் 48 மணிநேரத்தில் இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டும். டெல்லியில் இருக்கும் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் உடனடியாக வெளியேற வேண்டும். பாகிஸ்தானிலிருக்கும் இந்திய அதிகாரிகள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும்.” ஆகிய முடிவுகளை மத்திய அரசு எடுத்தது.

மேலும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், “பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா வழங்கிய அனைத்து விதமான விசாக்களும் ஏப்ரல் 27 முதல் ரத்து. பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவ விசாக்கள் மட்டும் ஏப்ரல் 29 வரை செல்லும். இதன்படி, தற்போது இந்தியாவிலுள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் விசா காலாவதியாகும் முன் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். அதேபோல், இந்தியர்கள் யாரும் பாகிஸ்தானுக்குச் செல்லவேண்டாம் என்றும், அங்கிருக்கும் இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது” என்று இன்று தெரிவித்திருக்கிறது.

இந்தியா – பாகிஸ்தான்

போர் நடவடிக்கையாக கருதி..!

இந்த நிலையில், இந்தியாவின் இத்தகைய நடவடிக்கைகளுக்குப் பாகிஸ்தான், “சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தானுக்கான நீரை நிறுத்தவோ அல்லது திசைதிருப்பவோ மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியையும் போர் நடவடிக்கையாகக் கருதி, முழு பலத்துடன் நாங்கள் பதிலளிப்போம். மேலும், பாகிஸ்தானுக்குள் திட்டமிட்ட தீவிரவாத தூண்டுதல், காஷ்மீரில் சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா தீர்ப்பைப் பின்பற்றாதது ஆகியவற்றை இந்தியா நிறுத்தும் வரை, சிம்லா ஒப்பந்தம் உட்பட இந்தியாவுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்தும் உரிமையை நாங்கள் பயன்படுத்துவோம்” என்று எதிர்வினையாற்றியிருக்கிறது.

இவை தவிர, இந்தியாவுடனான அனைத்து வர்த்தகங்களையும் நிறுத்துவதாகவும் பாகிஸ்தான் முடிவெடுத்திருப்பதாக ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. இதனால் இப்போது இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *