
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நமது குடியரசின் மதிப்புகள் மீதான பாகிஸ்தானின் கோழைத்தனமான, திட்டமிட்ட பயங்கரவாத செயல் என்று காங்கிரஸ் கண்டித்துள்ளது. அத்துடன், உளவுத்துறை தோல்விகள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விரிவான பகுப்பாய்வு நடத்த வேண்டியது அவசியம் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசரன் பள்ளத்தாக்கில், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) கடந்த 22-ம் தேதி நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஆலோசிக்க காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று கூடியது.