
மும்பையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிளையின் மேலாளரான ஷீலேஷ் கலாதியா (44), தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சக ஊழியரின் குடும்பத்தினருடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருக்கிறார்.
இதனிடையே பஹல்காமில் நடந்த தாக்குதலில் வங்கி மேலாளர் ஷீலேஷ் கலாதியா கொல்லப்பட்டார். அவரின் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. கொலை செய்யப்பட்டவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு மத்திய ஜல் சக்தி அமைச்சர் சி.ஆர். பாட்டீல் வந்திருந்தார்.
காஷ்மீரை அவதூறு செய்யாதீர்கள்
அப்போது ஷீலேஷ் கலாதியாவின் மனைவி ஷீதல் கலாதியா மத்திய அமைச்சரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியிருக்கிறார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “எந்த மாதிரியான அரசு இது… இந்தத் தாக்குதலுக்கு காஷ்மீரை அவதூறு செய்யாதீர்கள். காஷ்மீரில் எந்தப் பிரச்னையும் இல்லை. பிரச்னை நமது அரசின் பாதுகாப்பு ஏற்பாடுகளில்தான் இருக்கிறது.
ஒரு ராணுவ வீரர் கூட பாதுகாப்புக்கு இல்லை
அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இருந்த பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் ஒரு ராணுவ வீரர் கூட பாதுகாப்புக்கு இல்லை, அவசரத்துக்குக்கான மருத்துவ வசதிகளும் இல்லை. விஐபி பாதுகாப்புக்காக வாகனங்கள் அணிவகுக்கிறது. வரி செலுத்துவோரின் உயிருக்கு எந்த மதிப்பு இல்லையா? முகாமில் இருந்த ராணுவ அதிகாரிகள், உதவி செய்வதற்குப் பதிலாக, ‘முதலில் நீங்கள் ஏன் அங்கு (பஹல்காம்) செல்கிறீர்கள்? என்று எங்களிடம் கேட்கிறார்.

எனக்கு நீதி வேண்டும்
என் வாழ்க்கையின் மிகவும் மதிப்புமிக்க நபரை இழந்துவிட்டேன். என் குழந்தைகள் தங்கள் ஆதரவின் தூணை இழந்துவிட்டார்கள். வரி செலுத்தும் இந்திய குடிமகனுக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும்போதுகூட அதற்கான வசதிகள் இல்லை. எனக்கு நீதி வேண்டும். இதற்குப் பிறகு அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது குறித்து எனக்கு பதில் தேவை. இறந்தது என் கணவர் மட்டுமல்ல, பலக் குழந்தைகளின் அப்பாக்கள் கொல்லப்பட்டனர். அந்தக் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அரசு என்ன செய்யப்போகிறது?” என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.