
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நேற்று முன் தினம் தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமாக தாக்குதலில் தீவிரவாதிகள் பெண்களை விட்டுவிட்டு அவர்களுடன் வந்த ஆண்களை மட்டும் குறி வைத்து சுட்டுக்கொலை செய்தனர்.
நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கும் இத்தாக்குதல் சம்பவத்தில், அதிகமான பெண்கள் முன்னிலையில் அவர்களது கணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் பெண்களால் விடுபட முடியாத நிலையில் இருக்கின்றனர். பெங்களூரைச் சேர்ந்த பரத் பூஷன்(35) என்பவர் தனது 3 வயது மகள் மற்றும் மனைவி சுஜாதா பூஷனுடன் காஷ்மீருக்கு சென்று இருந்தார்.
சுஜாதாவின் கண் முன்னே, அவரது கணவரை தீவிரவாதிகள் எந்த கேள்வியும் கேட்காமல் சுட்டுக் கொலை செய்தனர்.
அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் விடுபட முடியாமல் இருக்கும் டாக்டர் சுஜாதா நடந்த சம்பவம் குறித்து கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ”ஏப்ரல் 18-ம் தேதி நாங்கள் காஷ்மீர் சென்றோம். பயணத்தின் இறுதி பகுதியாக பஹல்காம் செல்வது என்று முடிவு செய்திருந்தோம். குதிரையில் சவாரி செய்து தாக்குதல் நடந்த இடத்திற்குச் சென்றோம். அங்கு எங்களது குழந்தையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.
காஷ்மீர் உடைகளைக்கூட போட்டுப்பார்த்தோம். திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. ஆரம்பத்தில் பறவைகள் கூட்டமாக கிளம்பியதாக நினைத்தோம். ஆனால் சத்தம் வந்து கொண்டே இருந்தது. அதோடு அந்த சத்தம் நாங்கள் இருக்கும் பகுதியை நோக்கி வருவதாக தெரிந்தது. அதன் பிறகுதான் இது தாக்குதல் என்பதை தெரிந்து கொண்டோம்.
நாங்கள் இருந்தது ஒரு பரந்த பகுதி. அங்கிருந்து தப்பிச்செல்வது முடியாத காரியம். எனவே வேறு வழியில்லாமல் அங்கு போடப்பட்டு இருந்த குடிலுக்கு பின்புறம் சென்று நாங்கள் மறைந்து கொண்டோம்.
தீவிரவாதிகள் ஒவ்வொருவரையும் பிடித்து இழுத்து அவர்களது பெயரை கேட்டு சுட்டுக்கொலை செய்து கொண்டிருந்தனர். நாங்கள் இருந்த இடத்தில் இருந்து 100 அடி தூரத்தில் இருந்த ஒரு குடிலுக்கு தீவிரவாதிகள் வந்தனர்.
அந்த குடிலில் இருந்த நபரை வெளியில் இழுத்து அவரிடம் ஏதோ பேசினர். உடனே அந்த நபரின் தலையில் சுட்டுவிட்டுச் சென்றனர். நாங்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் அச்சத்தில் இருந்தோம். அங்கிருந்து தீவிரவாதிகள் எங்களிடம் வந்தனர்.
எனது கணவர், எனக்கு 3 வயதில் குழந்தை இருக்கிறது. என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சினார். ஆனால் தீவிரவாதிகள் எதுவுமே கேட்காமல் தலையில் சுட்டுக்கொலை செய்துவிட்டுச் சென்றனர்” என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் ராணுவ அதிகாரிகள் பல ஆண்டுகள் ராணுவ பயிற்சி எடுத்த ஒருவரால்தான் இது போன்ற தாக்குதல்களை நடத்த முடியும் என்று தெரிவித்தனர்.
தீவிரவாதிகளின் தாக்குதலில் சிலர் நூலிழையில் தப்பித்து வந்திருக்கின்றனர். கர்நாடகாவில் இருந்து சென்ற 170 பேர் இன்னும் காஷ்மீரில்தான் இருக்கின்றனர். அவர்கள் தங்களது உறவினர்களுக்கு போன் செய்து நடந்த சம்பவம் குறித்து பகிர்ந்து வருகின்றனர்.

பெங்களூருவில் இருந்து சென்ற மதுசூதன் ராவ் என்பவர் தனது பயணத்தை முடித்துக்கொண்டு பஸ்சில் ஏறிவிட்டார். அவருடன் அவரது மனைவி மற்றும் குழந்தையும் சென்று இருந்தனர்.
பஸ்சில் இருந்த மதுசூதனிடம் தீவிரவாதிகள் பெயர் மற்றும் மதம் என்னவென்று கேட்டனர். மதுசூதன் தன்னை முஸ்லிம் என்று சொன்னார். உடனே குரானில் உள்ள கலிமாவை சொல்லும்படி கேட்டார். ஆனால் தனக்கு மறந்துவிட்டது என்று தெரிவித்தார். இதனால் ஆடையை கழற்றும்படி தீவிரவாதிகள் கேட்டுக்கொண்டனர். ஆனால் ஆடையை கழற்ற மதுசூதன் மறுத்தார், இதையடுத்து தீவிரவாதிகள் அவரை சுட்டுக்கொலை செய்துவிட்டுச் சென்றனர்.
இத்தாக்குதலை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அனைவரும் சொந்த ஊர் திரும்புவதால் காஷ்மீர் வெறிச்சோடி வருகிறது.