• April 24, 2025
  • NewsEditor
  • 0

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கும் சூழலில், நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய அமைச்சர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் எடுத்திருக்கும் நடவடிக்கை தி.மு.க-வுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.

யார் மீது எந்தெந்த வழக்குகள் தூசிதட்டப்பட்டிருக்கிறது? புது வழக்குகள் என்னென்ன? என்பதை வரிசையாகப் பார்க்கலாம்…

ஸ்டாலின் – திமுக

பதவியா… ஜாமீனா… செந்தில் பாலாஜியிடம் கடிந்துகொண்ட உச்ச நீதிமன்றம்!

2011-15 அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக, 2018-ல் அவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

அதே ஆண்டில் தி.மு.க-வில் இணைந்த அவர், 2021 சட்டமன்றத் தேர்தலில் எம்.எல்.ஏ-வாக வெற்றிபெற்று முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறைக்கு அமைச்சரானார்.

செந்தில் பாலாஜி - உச்ச நீதிமன்றம்
செந்தில் பாலாஜி – உச்ச நீதிமன்றம்

பின்னர், பணமோசடி புகாரில் நடவடிக்கை எடுத்த அமலாக்கத்துறை, 2023 ஜூன் மாதம் அவரைக் கைதுசெய்து விசாரணைக்காக சிறையில் அடைத்தது. சிறைக்குச் சென்ற பிறகும் இலாகா இல்லாத அமைச்சராகப் பதவியில் நீடித்த அவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்து வந்தது.

அதையடுத்து, 2024 பிப்ரவரியில் அமைச்சர் பதவியிலிருந்து அவர் விலகிய பிறகு, 2024 செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஜாமீன் கிடைத்த மூன்றாவது நாளே, சிறைக்குச் செல்லும் முன்பு பதவி இலாகாவுக்கு மீண்டும் அமைச்சராக்கப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை உள்ளிட்ட தரப்பினர், செந்தில் பாலாஜி அமைச்சராக இருப்பதால் விசாரணையில் அவருக்கு சாதகமான சூழல் ஏற்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திவந்த உச்ச நீதிமன்றம் நேற்றைய விசாரணையில், “அரசியல் சாசனப் பிரிவு 21-ன் படி அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் ஜாமீன் வழங்கப்பட்டது.

மிகவும் அதிகாரமாக்க அமைச்சர் பொறுப்பில் நீங்கள் தற்பொழுது தொடர்கிறீர்கள். சாட்சிகள் சாட்சியமளிக்க நீதிமன்றத்திற்கு வராமல் இருக்கிறார்கள் என்பதிலிருந்து நிலைமையை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது.

உங்களுக்கு ஜாமீனை வழங்கி இருக்கக் கூடாது. பதவியா, சுதந்திரமா (ஜாமீன்) என்பதை நீங்கள்தான் செய்ய வேண்டும். நீங்கள் என்ன தேர்வு செய்ய விரும்புகிறீர்கள்?” என்று கூறி திங்களன்று பதிலளிக்குமாறு கண்டிப்புடன் கூறிவிட்டது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

ஏற்கெனவே, டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்திருப்பாக அமலாக்கத்துறை ரெய்டு ஒருபக்கம் இருக்கையில், உச்ச நீதிமன்றம் நேற்று இவ்வாறு கூறியிருப்பது, செந்தில் பாலாஜியைத் தியாகி என்று வரவேற்ற முதல்வருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜாமீன் வழங்கியபோது உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கொண்டாடிய தி.மு.க, தற்போது அதே உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய நடவடிக்கையை எப்படி எதிர்கொள்ளும் என்பதைத் திங்களன்று பார்க்கலாம்.

துரைமுருகன் வழக்கைத் தூசிதட்டிய உயர் நீதிமன்றம்!

தி.மு.க அமைச்சரவையில் தற்போது மூத்த அமைச்சராக இருக்கும் துரைமுருகன், 1996 – 2001 தி.மு.க ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ. 3.92 கோடி அதிகமாகச் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் 2002-ல் (அதிமுக ஆட்சி) வழக்கு தொடரப்பட்டது.

அதைத்தொடர்ந்து, தி.மு.க ஆட்சி மீண்டும் வந்ததும் 2007-ல் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை இந்த வழக்கிலிருந்து வேலூர் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது.

துரைமுருகன்
துரைமுருகன்

பிறகு, 2011-ல் மீண்டும் அ.தி.மு.க ஆட்சி வந்ததும், 2013-ல் வேலூர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது.

சுமார் 12 ஆண்டுகளாக நிலுவையிலிருந்து இந்த வழக்கு கடந்த ஜனவரியில் விசாரணைக்கு வந்தபோது, துரைமுருகன் மீதான குற்றப்பத்திரிகையை மேற்கோள்காட்டி ஒழிப்புத் துறை வாதிட்டது.

மறுபக்கம், முதலில் வழக்கு தொடர முறையான அனுமதி பெறப்படவில்லை, அதோடு விடுவித்துப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்துத் தாக்கல் செய்த மறு ஆய்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று வாதிட்ட துரைமுருகன் தரப்பு, இந்த மனுவைத் தள்ளுபடி செய்யுமாறு கோரியது.

விசாரணை முடிவில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்த உயர் நீதிமன்றம், 2013-ல் வேலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நேற்று (ஏப்ரல் 23) ரத்து செய்தது. அதோடு, விசாரணையைத் தொடங்கி 6 மாதங்களுக்குள் இந்த வழக்கை முடிக்குமாறு சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

12 ஆண்டுகளாக இந்த வழக்கில் நிம்மதியாக இருந்த துரைமுருகனுக்கு நேற்றைய இந்தத் திடீர் உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு, 2007-09 காலகட்டத்தில் ரூ. 1.40 கோடி அதிகமாகச் சொத்து சேர்த்ததாகப் பதியப்பட்ட வழக்கில் துரைமுருகனையும், அவரது மனைவியையும் விடுத்த உத்தரவையும் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 24) ரத்து செய்திருக்கிறது.

நீதிமன்றத்தின் இந்த அடுத்தடுத்த உத்தரவுகள், துரைமுருகனுக்கு மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாக தி.மு.க-வுக்கும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

பொன்முடியின் வெறுப்புப் பேச்சும்… கட்டம் கட்டும் நீதிமன்றமும்!

அரசுப் பேருந்துகளில் மகளிர் இலவசமாகப் பயணம் செய்வதை 2022-ல் `ஓசி’ என்று பேசி சர்ச்சைக்குள்ளான அமைச்சர் பொன்முடி, கடந்த சில வாரங்களுக்கு முன்பு விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில், பெண்கள் மற்றும் சைவ, வைணவ சமயங்கள் குறித்து இழிவாகப் பேசியிருந்தார்.

இதில், சொந்தக் கட்சியிலிருந்தே கண்டனங்கள் எழ, உடனடியாக தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு, தனது பேச்சுக்கு பொன்முடி மன்னிப்பும் கேட்டார்.

பொன்முடி
பொன்முடி

இவ்வாறிருக்க, ஏப்ரல் 17-ம் தேதி பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பெண்கள் மற்றும் சைவ, வைணவ சமயங்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு பொன்முடி மீது வழக்கு பதிவுசெய்யாதது ஏன்?

எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யவில்லை என்றால் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறி, ஏப்ரல் 22-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.

அதன்படி, நேற்று உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.

துரதிர்ஷ்டவசமானது

அப்போது, பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், சர்ச்சைப் பேச்சு விவகாரத்தில் பொன்முடி மீது மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்ததாகவும், அதில் அவருக்கெதிராக எந்த முகாந்திரமும் இல்லையென்று அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதாகவும் வாதிட்டார்.

இறுதியில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “பொன்முடியின் பேச்சு வெறுப்புப் பேச்சு வரம்புக்குள் வருகிறது. கட்சியே அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது. இருப்பினும் காவல்துறை இதில் நடவடிக்கை எடுக்காதது துரதிர்ஷ்டவசமானது.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

எனவே, இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், வழக்கைத் தலைமை நீதிபதிக்குப் பரிந்துரை செய்ய பதிவுத்துறைக்கு உத்தரவிடுகிறேன்” என்று தெரிவித்தார்.

ஏற்கெனவே, ஓசி பஸ் சர்ச்சையின்போது, மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பது நாளும் பிரச்னை வருகிறது என்று புலம்பிய முதல்வர் ஸ்டாலின், இந்தப் பிரச்னையில் பொன்முடியைக் கட்சிப் பதவியிலிருந்தே நீக்கிவிட்டார்.

இருப்பினும், நீதிமன்றம் இந்த விவகாரத்தை விடுவதாக இல்லை. இதை தி.மு.க எப்படி சமாளிக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

கே.என்.நேரு - ஸ்டாலின்
கே.என்.நேரு – ஸ்டாலின்

இந்த மூன்று அமைச்சர்கள் மட்டுமல்லாமல், இரண்டு வாரங்களுக்கு முன்பு கே.என்.நேரு மற்றும் அவரின் மகன், சகோதரர் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

தொடர்ச்சியாக தி.மு.க அமைச்சர்களைச் சுற்றி வழக்குகளும், ரெய்டுகளும் வருவதை, வெறுமனே மத்திய பா.ஜ.க அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று ஸ்டாலின் மேல்பூச்சு பூசுவாரா… அல்லது வேறுவிதமான நடவடிக்கையை எடுப்பாரா என்பதை வரும் நாள்களில் தெரிந்துவிடும்.!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *