• April 24, 2025
  • NewsEditor
  • 0

குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் மையோனைஸ் விருப்பமான உணவாகி விட்டது. க்ரில் சிக்கனையும், தந்தூரி சிக்கனையும் மையோனைஸில் தொட்டு ருசித்துக் கொண்டிருந்தவர்கள், தற்போது காய்கறித்துண்டுகள் வைக்கப்பட்ட பிரெட் சாண்ட்விச்சில்கூட மையோனைஸ் இல்லாமல் சாப்பிட மறுக்கிறார்கள்.

இந்த நிலையில்தான், தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-ன் பிரிவு 30 (2) (a) படி முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் வகைகளுக்கு ஓராண்டு காலம் தடை விதிக்கப்படுகிறது.

Mayonnaise

பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும், மையோனைஸ் உற்பத்தி செய்வது, சேமித்து வைப்பது, விநியோகம் செய்வது, விற்பனை செய்வது உள்ளிட்டவைகளுக்கு தடை. இந்தத் தடை உத்தரவு ஏப்ரல் 8-ம் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்கு அமலில் இருக்கும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தெலங்கானா மாநிலத்தில் மையோனைஸ் தயாரிக்கப்படுவதற்கு ஓர் ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் அந்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தளவுக்கு உடலுக்குக் கெடுதலா மையோனைஸ்? என்று டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன் அவர்களிடம் கேட்டோம்.

”மையோனைஸை பச்சை முட்டை (வேக வைக்கப்படாத முட்டை), உப்பு, சர்க்கரை, வெஜிடபிள் ஆயில், பூண்டு, மிளகு, வினிகர் போன்றவற்றை அடிப்படையாக வைத்து தயாரிக்கிறார்கள்.

வேக வைக்காத முட்டையில் இருக்கிற சால்மோனெல்லா பாக்டீரியா டைப்பாய்டு காய்ச்சலை வரவழைக்கக்கூடியது. தவிர, மையோனைஸை எந்தளவுக்கு சுத்தமாக தயாரிக்கிறார்கள், எத்தனை நாள்கள் வைத்து கஸ்டமர்களுக்கு தருகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். சுத்தமாக தயாரிக்கவில்லையென்றால், கழிவில் இருக்கக்கூடிய ஈ கோலை பாக்டீரியாவும் இதில் வந்து விடும். நோய் எதிர்ப்பு சக்திக் குறைவாக இருப்பவர்கள் மையோனைஸ் சாப்பிட்டால் காய்ச்சல் வரலாம். ஃபுட் பாய்ஷனாகி வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆகிற அளவுக்குக்கூட கொண்டு சென்று விடலாம்.

தாரிணி கிருஷ்ணன்

தவிர, இதில் ஹெல்த் பெனிஃபிட்ஸ் என்று எதுவுமே கிடையாது. முட்டையை வேக வைத்து சாப்பிட்டால்தான் அதில் இருக்கிற புரதம் நம் உடலில் முழுமையாக சேரும். பச்சையாக முட்டையை சாப்பிட்டால் அதில் இருக்கிற அவிடின், முட்டையில் இருக்கிற புரதத்தை நம் உடலில் சேர விடாது. இதனுடன் ட்ரான்ஸ்ஃபேட் இருக்கிற தாவர எண்ணெய்களை சேர்க்கிறார்கள் என்றால், மையோனைஸ் சாப்பிடுகிறவர்களின் உடலுக்குக் கெடுதல் மட்டுமே நிகழும்.

எந்த ஓர் உணவிலும் 0% முதல் 2% வரை தான் ட்ரான்ஸ்ஃபேட் இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்துகிறது. ஏனென்றால், இந்த ட்ரான்ஸ்ஃபேட் தான் இதய ஆரோக்கியத்துக்கு முக்கியமான எதிரி. முட்டையில் இருந்து கிடைக்க வேண்டிய புரதச்சத்தும் கிடைக்காமல், அதே நேரம் எண்ணெயை ஊற்றி தயாரிப்பதால், சாப்பிடுபவர்களுக்கு கெடுதல் மட்டுமே செய்கிற மையோனைஸ் நமக்கு தேவையில்லாத ஒன்று” என்கிறார் தாரிணி கிருஷ்ணன்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *